Sunday 22 December 2013

விலை -- வாழ்வின் ஒரு ஷணத்திற்கு

நாம் பெறுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாவோ ஏதோ ஒரு விலை தரத்தான் செய்கிறோம். விலையின்றி இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைத் தவிர….. அதற்கு கூட அடுத்த 5 ஆண்டுகளுக்கு விலையை சமர்ப்பிக்கின்றோம் . ஆனால் பெரும்பாலோனர்களுக்கு தாங்கள் அளித்த அல்லது அளிக்கும் விலையை குறித்த கவனமில்லை ,

அப்படியே இருந்தாலும் அந்த விலைக்கான மதிப்பு அந்த பொருளிடம் இருக்கிறதா என்பது தெரியவே தெரியாது. வெகுசிலரே விலையின் மதிப்பையும் பொருளின் மதிப்பையும் எடை போடுகின்றனர். இத்தகையோர் மிக மிகச் சிலரே. அவர்களுக்கும் கூட தாங்கள் அளிக்கும் விலைக்கு சமமான விலை மதிப்பு மிகுந்த பொருள் கிடைப்பதில்லை. அதனால் ஒரளவு சில மாற்றுக்கள் குறைந்திருந்தாலும் அதன் மூலம் தங்களை பரிமாறுகின்றனர்.

இதோ இன்று இரவு 9 மணிக்கு எனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு டிவி பெட்டியில் அதுவும் நல்ல விதமாகவே தோன்றுகிறேன். ஆம் டிஸ்கவரி சேனலில் நிஜமாலுமே உலகளாவிய நிலையில் முதல் முறையாக ஒளிப்பரப்பாகும் அவர்களது குறும்படத்தில் நானும் வருகிறேன். என் ………கதையை கூறுகிறேன்.

கேதார்நாத்தில் ஏற்பட்ட பிரளயம் என்னிடம் நேரத்தையும் வாழ்க்கையையும் மட்டும் விட்டு விட்டு மற்றவை அனைத்தும் என் கரங்களுக்கு அப்பால் கொண்டு சென்ற தருணம் அது. அடுத்து என்ன? எங்கு ? எப்படி? எப்போது ? என எதுவும் அறியாவிட்டாலும் ஆனந்தமாய் அர்பணிப்பாய் நொடிகள் கொண்டு வந்தததை செய்து கொண்டிருந்த காலம் அது.

அப்போதுதான் குப்தகாசியிலிருக்கும் எனது நண்பர் ஓஸ்வால் அவர்களின் தொலைபேசி அழைப்பு , நலம் விசாரித்தலுக்கு பிறகு டிஸ்கவரி சேனலுக்கு கேதார்நாத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றத்தை குறித்து அவர்கள் எடுக்கப் போகும் படத்திற்காக என்னை பற்றிய தகவல்களை தந்துள்ளதாக கூறி , தங்களுக்கு அழைப்பு விரைவில் வரும் , கலந்து கொள்ளச் சொன்னார். அந்த உரையாடல் முடிந்த சில ஷணங்களில் டெல்லியில் டிஸ்கவரி சேனலில் இருந்து என்னை பற்றிய தகவல்களை கேட்டறிந்து உறுதி செய்தார்கள்.

சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட அனுபவத் திவலைகள் கேட்ட அவர்களுக்கும் கண்களை குளமாக்கியிருந்தது. இதோ இன்னும் பல அனுபவஸ்தர்கள் மற்றும் தொழிற்நுட்ப வல்லுனர்கள் , இயற்கை ஆர்வலர்கள் என அனைவரின் கருத்தோடு எனது அனுபவத்தை தொடர்ப்பு படுத்தி இன்று இரவு 9 மணிக்கு வெளியிடப்படப் போவதாக …………

சமீபத்தில் பார்த்த சுனாமி பற்றிய கொரிய மொழி திரைப்படமும் சரி, லைப் ஆஃப் பை ஆனாலும் சரி இரண்டையுமே என்னால் ஒரு திரைப்படமாக காணவே முடியவில்லை. நிச்சயம் அத்தகைய சூழல்களில் அதுவும் தண்ணீரோடு இல்லாத கணங்களில் , நிலத்தில் வாழுபவர்களுக்கு நிச்சயம் உணர முடிவதேயில்லை.

கடல் தண்ணீர் உப்பு கரிக்கும் என்றால் கங்கையின் நீரோ ஐஸ் உருகியதுதான். அதில் நிலச்சரிவால் ஏற்பட்ட மண்ணும் டன் கணக்கில் சேர்ந்தால் ,,,,,,,,,,, டன் கணக்கில் உள்ள மிகப் பெரிய பாறைகளே மிதந்து வரும் அளவு நீரின் சக்தியும் வேகமும் இருக்குமானால் ………. எந்த அனிமேஷனும் இதை விவரிக்கவே முடியாது.

உயிர் பிழைத்திருப்பதும் உயிரை நொடியில் சமர்ப்பித்ததும் இரண்டுமே தெய்வாதீனம்தான். அதுவும் கேதார்நாத்தில் தெய்வத்தின் அருளாலேயே இரண்டும் நிகழ்ந்தன. பிரளயத்திற்கும் தெய்வத்திற்கும் சம்பந்தமில்லை , இதை என் காரண அறிவு கொண்டு , என் ரிலேடிவிடி தியரி மூலம் செயல்படும் மனதைக் கொண்டு என்னால் இப்படித்தான் பேச முடியும் என்றுணர்ந்தாலும் ………….. இதையே உண்மை என்று கூற முடிகிறது.

இறக்கும் தருவாயில் இறந்து போன மனிதர்களின் கடைசி ஓலத்திற்கு முன்பாக வந்த ஒலியும் சரி , பிழைத்தால் போதும் என்று தொங்கிக் கொண்டிருந்து ( என்னைப் போன்ற ) பின் பிழைத்தவர்களின் அந்த நேரத்து ஒலியும் சரி இரண்டும் ஒரு சேர கேதாரநாதனுக்கே ஜே போட்டன.

மரணத்தின் வாயிலில் மரணத்தை தருகிறவனை போற்றிட மனதுக்கு துணிவும் பெருந்தன்மையும் பயமின்மையும் நிச்சயம் வேண்டும். அதை அவர்கள் இறையருளால் பெற்றிருந்தார்கள் .

அப்படி எண்ணற்ற மனிதர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து என் வாழ்வை ஒரு நிலைக்கு கொண்டு வந்து உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இந்த தருணம் அவர்களது திருவடிக்கு சமர்ப்பணம். இந்த தருணம் அவர்களது பக்திக்கு சமர்ப்பணம். இந்த தருணம் உயிர் பிழைத்திருக்கிறார்களா இல்லையா என்றே அறியாது தங்களுக்கு தெரிந்த கடவுள்களுக்கு எல்லாம் தங்கள் அறிந்த வார்த்தைகளை கொண்டு தாங்கள் அறிந்த முறையில் வேண்டிக் கொண்ட அந்த முன்பின் அறியாத அன்பு உள்ளங்களின் நேரத்தின் விலைக்கு சமர்ப்பணம்.

இதோ இன்று எனது டெல்லி நண்பர் ஷாஜகான் ஒரு மரணத்தை குறித்து எழுதியுள்ளார். இதோ நேற்று வரை உயிரோடு இருந்து இந்த 6 மாத காலத்திற்கு எனது ஒவ்வொரு படியையும் அர்ப்பணிப்போடு எடுக்க வைத்த திரு பொன்னுசாமி தியாகராஜன் ………

இவரை பற்றி சொல்லவேண்டும். திருச்சிக்காரர். சமுகசேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவர். துப்பாக்கி தொழிற்ச்சாலையில் பணிபுரிகின்றவர். தனது நண்பர்களோடு கடந்த வருடம் இமாலயத்திற்கு முதல் முதலாக வந்த போது அவர்களது தரிசனம் குப்தகாசியில் எதேச்சையாக திருவாசத்தின் மூலம் அமைந்தது.

எப்படி கேதாரத்திற்கு செல்ல அனுமதி கிடைக்குமோ என்று கேள்விகளோடு இருந்த அந்த தருணத்தில் நான் வாங்கித் தருகிறேன் என்று தேவையான விபரங்களை பெற்றுச் சென்று முயற்சி எடுக்க முனைந்தவர். இறுதியில் தேவைப்படாது போனதால் முயற்சிகளை கைவிட்டோம். முதல் முதலாக அன்போடு நம்பிக்கையும் இந்த தமிழ் அறியாத அன்னிய பூமியில் தன்னோடு சேர்த்து விதைத்தவர்,

அன்றிலிருந்து இன்று வரை அவரது அன்பிற்கு அளவில்லை. அவ்வப்போது தொடர்ப்பு கொள்வார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு இமாலய பயணத்திற்கு பேசிக் கொண்டு இருந்தோம். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகப் போகிற விஷயத்தை தனது நண்பர்களுக்கு எல்லாம் எடுத்து சொல்லி அது சம்பந்தமாக எனது சகோதரனைப் போலவே , என்னை என் ஆரம்ப கால கிராம வாழ்க்கை நிலைகளை அறிந்தவனைப் போலவே , ஆனந்தப்பட்டவர்.

என்னை டீவியில் காண்பதற்காக ஏராளமான ஆர்வத்தோடு இருந்தவர். ஆனால் ஒரு நாள் முந்தைய காலை விடியல் இப்படி அமையும் என எதிர்ப்பார்க்கவில்லை. சில காலை விடியல்கள் இப்படி அமைந்து விடுகின்றன. அதுவும் இன்று அவரது பிறந்த நாள், நேற்று முன்தினம் வரை இருந்தவர், எப்படிச் சொல்வது அல்லது எதைச் சொல்வது 

வெற்று பிம்பங்கள்தாம் நாம் , மழையின் நீர்குமிழிகள் போல எது எப்போது உடைகிறது அதை உள்ளிருக்கும் காற்று உடைக்கிறதா அல்லது வெளியிலிருக்கும் பார்வையாளர் உடைக்கிறாரா என்பது அந்த குமிழிக்கு மட்டுமே தெரியக்கூடியது , ஆனால் அது பெரும்பாலும் தெரியாமலே போய்விடுகிறது,

நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவோ அல்லது முட்டாள்தனமான ஒரு நிலையை அடையக்கூட நாம் கொடுக்கும் விலையை மறந்து விடக்கூடாது என்பதற்காகவோ இப்படி சில விலைகள் அமைந்து விடுகின்றன. அதனாலே இந்த மைல்கற்கள் மேலும் மதிப்பை பெறுகின்றன, இல்லையெனில் அவை ஒரு சாதாரண நிகழ்வுகளே,

இருந்தாலும் இவ்விலைகள் அதிகமானவைதான். அதற்காகவே அத்தகைய விலை மதிப்பில்லாத ஒன்றை பெற்றே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் ஏற்படுகிறது.

மரணத்தை  விட மரணமடைந்தவர்களின் அன்பு என்னை கலங்க வைக்கிறது. வாழ்ந்த நொடிகளின் நினைவுகள்,  நெஞ்சில் சுரக்கும் அன்பு  ஆகியவை கண்ணுக்கு ஒன்றாக இரு கண்களிலும் பொங்கி சில நிமிடங்களாவது வழிந்தோடுகிறது.

தாயுமானவனாக மாறும் இக்கணங்களில் எனக்குள்ளும் கருப்பை ஒன்று சூல் கொள்கிறது. எதிர்கால குழந்தைக்காக எனக்கும் எதோ ஒரு மார்ப்பகம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.

இப்போதெல்லாம் மார்பகம் என்னை கலவரப்படுத்துவதில்லை. மாறாக  தாய்மை உணர்வை தருகிறது. அதில் சேகரிக்கப்படும் பால் ஏதோ ஒரு காலகட்டத்தில் எங்கோ என்னை எதிர்கொள்ளும் குழந்தைகாக தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கிறது.


இந்த தருணத்தை தங்கள் உயிரை விலையாக அர்ப்பணித்து என் பயணத்தை தொடரச் செய்யும் அந்த அற்புத தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

Saturday 21 December 2013

நினைவலைகள் --- 1 (14/12/2013)

பாஷை புரியாத மக்களோடு சில மணி நேரம் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது, அதுவும் அதில் ஒரிரு முகங்கள் தவிர மற்றவை புதிதாக் இருக்கும் போது அனுபவிக்கும் நொடிகள் அழகானவை, பரஸ்பரம் கதைகளும் லோகாயித விஷயங்களும் பேச வழியில்லை.என்றாலும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள ஏற்படும் போராட்டம் அற்புதமாக ரசிக்கத் தக்கவை, இன்று அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் இங்குள்ள மக்களுக்கு நடுவில் அதிக நேரம் இருக்க வேண்டியிருந்தது,

தமிழ்நாட்டில் இருக்கும் வரை நான் சகுனங்களை கவனிப்பவன் இல்லையென்றாலும் , முக்கியமான பயணங்களின் மற்றும் ஒரு பணிக்கான முதல் பயணங்களின் துவக்கம் சகுனம் உரைப்பது போல ,  பார்ப்பது போல பாடல்கள் துவங்கும், சினிமா பாடல்களாகவே பெரும்பாலும் இருந்தாலும் அது குருவின் செய்தியை உணர்த்துவது போலவே அது இருப்பது ஆச்சரியமான விஷயம்தான் ,

இங்கு ஹிமாலயத்திற்கு வந்த பிறகு  கையில் உள்ள எம்பி3 பிளேயரில் ( அற்புதமான – அதாவது என்னை அதிகம் ரசிக்க வைத்த கர்னாடக சங்கீத பாடல்கள் (பலரும் கொடுத்த பாடல்களில் செலக்ட் செய்து வைத்திருப்பேன்) மற்றும் தெய்வீக ஸ்லோகங்கள் பாடல்கள் கேட்பேன் ) ஆன் செய்யும் போது வரும் முதல் பாடல் பெரும்பாலும் (தானாக எதோ ஒரு பாடல் முதல் பாடலாக வந்து நிற்கும்) இதே விதமாக வருவதை உணர்ந்தேன்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்பது போல பேருந்தின் மூடிய கண்ணாடியை ஊடுருவி வீசிய குளிரின் சுவாசம் உடலை இழுத்துப் போர்த்திக் கொள்ள வைத்தது. நல்ல முன்பனிக் காலம் அதுவும் பனிமலைகளுக்கு நடுவே மீண்டும் ஒரு முறை என் வாழ்வில் நெருங்குவதை குளிரில் மார்கழியின் வாடை உணர்த்தியது.

கிருஷ்ணார்ஞ்சுன யுக்தம் கதையில் பாலகுமாரன் அவர்கள் மிக அழகாக முன்பனிக் காலத்தில் கதையை ஆரம்பிபப்பது நினைவில் வந்தது. அர்ஜுனன் குளிர்காலத்தின் இரவுநேரத்தில் உப்பரிகையில் நின்று….. கதையை ஆரம்பிப்பார்.

அர்ஜுனனோடு சேர்ந்து அவரது பல எழுத்துக்கள் பலமாக எண்ண அலைகள் எழும்ப ஆரம்பித்தன. எனக்குள் கேள்விகளும் புரிந்து கொள்ள முடியாத அனுபவங்களோடும் ஒரு தேடலை தேடிக்கொண்டு இருந்த காலம் அது,

சுந்தராவின் கேள்விகளோடு  தலையணையில் அவர் வரைந்த பூக்களை வாழ்க்கை தோட்டம் காட்ட ஆரம்பித்து இருந்தது. எப்படி சலங்கை ஒலி படம் கணக்கின்றி பார்த்திருப்பேனோ அதே போல் தலையணைப் பூக்கள் கதையும் கணக்கில்லாமல் படித்திருப்பேன்.

வீட்டில் பெரியவர்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலம் உணர்ந்ததை காட்டிலும் காஞ்சி பெரியவரை அவரது எழுத்துக்கள் அருகே கொண்டுவந்தன. இதே கதையில் அவரை தாமரை என்று குறிப்பிடுவார் என்பது நினைவில் வந்தது.

சுந்தராவின் தந்தையைப் போல உரிமையோடு தாமரையோடு பேசும் நாள் என் வாழ்க்கையிலும் வருமா என்று ஏக்கத்தை கொண்டு வந்த போதை எழுத்துக்கள் அது. அக்கதை வந்த வருடம் எனது அக்காவின் (சித்தப்பா மகள்) திருமணம். எங்களது தலைமுறையில் எங்களது குடும்பத்தில் முதல் வைபவம்.

ஆசி வாங்க காஞ்சி மடம் சென்றோம். நானும்கூட அழைத்துச் செல்லப்பட்டேன், எனக்கோ நடைமுறைகள் தெரியாது . எந்த சந்நியாசியை நேரில் சந்தித்தது கூட கிடையாது  அல்லது சந்தித்தவர்களிடம் இவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு அறிந்ததும் கூட கிடையாது,

மடாதிபதிகள் அனைவரும் சந்நியாச மார்க்த்தில் இருந்த காரணத்தால் சந்நியாசி என்றால் ஆஸ்ரமத்தை சார்ந்தோ அல்லது மடங்களை சார்ந்தோ இருப்பவர்கள் என்கிற ஒரு புரிதல் காலம் காலமாக ஏற்பட்டு விட்டது.

சந்நியாசம் என்பது ஒரு உள்நிலை. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் உள்ளன. பல மகான்கள் இல்லறத்தில் இருந்தே அடைந்து உள்ளனர். சந்நியாசம் என்கிற துறவு குறித்து சத்குரு பேசியது நினைவிற்கு வந்தது. அப்போதுதான் பிளேயரில் கண்ணனின் அலை பாய்ந்து வந்து காதுகளை நனைக்க ஆரம்பித்தது.

அலைப்பாயுதே கண்ணா….. பெரும்பாலும் திருமண ஜானவாசத்தில் கேட்டு பழக்கமான எனக்கு , சுந்தராவின் இருதி கணங்களோடு கொண்டு சேர்த்த நேர்த்தி ….. எந்தன் மரணமும் இப்படி அழகாக அமைதியாக நிகழவேண்டும் என்று எண்ணத்தை தோற்றுவித்து இருந்தது.  

இந்த பாடலும் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் என்கிற டிஎம்எஸ் குரலும் நினைவலைகளில் எதிரொலித்தன. இந்த இரு பாடல்கள்தான் என் பாட்டி மிக விரும்பி கேட்பாள். அவளுக்காகவே டேப்ரிக்கார்டர் வந்த காலத்தில் முதல் கேசட் இதுதான் வாங்கி வந்தது ஞாபகம் இருந்தது.

ஓட்டு வீடு, வாயிலில் இருக்கும் கதவு முதல் புழக்கடை என்றைழைக்கப்படும் தோட்டத்தின் கடைசி சுவரும் நேரான பாதையாக இருக்கும் .வலதுபுறம் ஒருவர் படுத்துறங்கும் திண்ணையும் இடதுபுறம் பெரிய திண்ணையும் (பாதி சுவருடன்) இருக்கும். தெற்கு பார்த்த வீடு ஆகையால் காலைச் சூரியன் கண்சிமிட்டி உஷ்ணப்படுத்துவான்.

மார்கழியின் குளிரில் இதமான காலைப் பொழுதுகள் அவை. அந்த குளிரை அந்த அதிகாலை வெயிலிலும் அல்லது குளிப்பதற்காக அடுப்பு மூட்டி எரிக்கப்படும் விறகுகளிலும்தான் அழகாக உணரமுடியும்.

மார்கழியின் நினைவு மறுபடி என் மனதை கலைத்தது. என்னை எப்படியாவது எழுப்பி படிக்க வைத்துவிட வேண்டும் என்று அப்பா செய்த பகீரத பிரயத்தனம் . நானே இறுதியில் வெற்றி கொண்டேன். ஆனால் அவர் தோற்கவில்லை என்பதை அழகாக இந்த முப்பது நாட்களும் அன்பு கலந்து வெண்பொங்கல் கோயில் பிரசாதமாக வரும்.

இந்த ஒரு மாதம் மட்டுமே காலை நேரத்தில் டிபன் கிடைக்கும், மற்றபடி பழைய சாதமும் அடி ரசமும்தான் அற்புதம். இந்த பொங்கலை பெறுவதற்காகவே காலையில் மலைமேல் இருக்கும் அரங்கநாதர் கோவிலுக்கு சென்றுவிடுவேன்.

நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாலும் கூட அதிகாலை 4 மணிக்கு மார்கழித் திங்கள் மலை மீது ஓங்கி எதிரொலித்து சுகமான கனவுகளைத் தரும். அதை தொடர்ந்து அன்பர்கள் குளிரை பொருட்படுத்தாது குளித்து நடுங்கும் குரலின் நடுக்கத்தை வெளிப்டுத்தாது அழகாய் பாடும் அற்புத பஜனைகள். அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரிக்கும் அரங்கநாதனுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப் போனாலும் பனித்துகளின் அழகில் மயங்கி மறந்து விடுவேன்.

ஏதோ வைகுண்ட ஏகாதசிக்கும் கார்த்திகை தீபத்திற்கும் மட்டும்தான் இக்கோவிலை திறப்பது போல அழகும் கூட்டமும் கூடும். அதுவும் வைகுண்ட ஏகாதசி அன்ற அந்த வயதிற்கேற்ப அழகிய வண்ணத் தாவணிகளை ரசித்ததம் நினைவில் எட்டிப் பார்த்தத. ஒரு முறை ஸ்கவுட் பணியில் இருந்த போது யாரோ ஒரு போலீஸ்காரருக்காக அவருக்கு ஒரு சிகரெட் வாங்கி வருவதற்காக மலை இறங்கி மீண்டும் ஏறிப் போன என் சிரத்தையும் பக்தியும் இந்த நினைவுகளில் கூட வெளிப்பட்டது.

யோக மையத்திற்கு வந்த பிறகு முங்கில் இலைகளின் நுனியில் உருண்டோடும் பனித்துளிகள் பரவசப்படுத்தும். கண்ணாடி பதித்த பாவாடை அணிந்து துள்ளிக் குதித்து மார்கழிப் பூவே மார்கழிப் பூவே என்று ஒடி வந்த பெண்ணை (நடிகையைப்) போல நானும் என் மனதுக்குள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தேன்.

வாழ்க்கையின் ஒரு பாதி அழகானது . அதன் மறுபாதி ரசனையானது, ஏனோ அது பலருக்கு கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்தது போல இந்த ஆருத்ரா தரிசனம் அனைவருக்கும் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்.

அவர்களும் புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி என்று ரசனையோடு ஒடி வருவார்கள் என்பது நிச்சயம் . என்ன ஒரு ஆச்சரியம். மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும்  ஒரு இளம் வயது பெண் திருமணத்திற்கு முன்போ அல்லது காதலனை சந்திப்பதற்கு முன்னரோ துள்ளிக் குதித்து பாடி வருவாள்.

விஸ்வநாத்தின் இயக்கத்திலோ எப்போதும் ஒரு பிளாஷ்பேக் , அதுவும் ஜீனியஸ் கலைஞன் இறுதியில் இறந்து போவான். கண்டிப்பாக அவனுக்கும் நடனத்திற்கும் இசைக்கும் தொடர்ப்பு இருக்கும். இது போல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒரே மாதிரியான வெளிப்பாடுகள் எல்லா படத்திலும்.

இவைகள் ,இந்த கதாபாத்திரங்களின் வெளிப்பாடு  அந்த இயக்குநர்களின் அடிமனது ஆசைகளோ அல்லது நிறைவேறாத கனவுகளோ அறியேன், ஆனால் எப்படி ஒரே விதமாக சிந்தனை வட்டம் சுற்றி வருகிறது , எத்தனை காலமானலும் சரி எவ்வளவு அனுபவம் வந்தாலும் சரி நாம் நம் எண்ண சுழற்சிகளைத் தாண்டி வெளியே வரமுடிவதில்லையோ என்று தோன்றியது, நான் என் எண்ண சுழற்சிக்குள் இருக்கிறேனா அல்லது வெளியே நின்று அதை வெறுமனே ரசிக்கிறேனா என்ற வினா எழும்போதே , கண்மூடி கிறக்கமானேன். 

என் எண்ணங்கள் சுழன்று கழன்றதால் பரவெளிக்குள் வெறுமையானேன் . அந்த வெறுமைக்குள் வெறுமனே இருக்க முடியும் போதெல்லாம் அதை விட சுகம் வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதை உணரமுடிகிறது. அந்த சுகத்தோடு  நினைவுகளை ரசிக்க வாய்ப்பு கிடைப்பது அழகான பூஞ்சோலையில் காதலியுடன் நடக்கும் சுகம் போன்றது, 

தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்று பாம்பே ஜெயஸ்ரீ என் செவிகளுக்குள் சவால் விடுத்துக் கொண்டிருந்தார். நானோ வருவாரோ வரம் தருவாரோ என்று பதில் கேள்வியை நினைவில் ரசித்துக் கொண்டிருந்தேன்,

Sunday 15 December 2013

பயணங்கள் மட்டுமல்ல (கற்றுக் கொள்ளவேண்டிய ) பாடங்களும் கூட முடிவு பெறுவதில்லை


எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும் சிலசமயம் நமது பிழைகள் நட்பு மற்றும் உறவுகளின் மனம் புண்படும்படி அமைந்து விடுகிறது. அதை அவர்கள் பெருந்தன்மையோடும் நேசத்தோடும் நமக்கு மட்டும் புரிந்து கொள்கிற மாதிரி ஒரு கருணையை என்னவென்று சொல்வது. இத்தகைய தருணங்கள் நம்மை மீண்டும் உள்நோக்கி பார்த்து திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது என்பதே எனக்கு உண்மையாக உள்ளது.

சத்குருவின் அண்மையில் இப்படி நம்மை அடியோடு புரட்டிப் போட்டு உள்நோக்கி பார்க்கும் வாய்ப்புக்கள் மட்டுமே எனக்கு நிகழும் . என்னை ஆழப்படுத்திக் கொண்டே இருக்கும்.

இப்படி இமாலயத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு தருணமும் இப்படி அமைவது என் கவனத்தை என் மேல் மட்டுமே நிலைநிறுத்துவதாக அமைகிறது. அடுத்து ஒரு முக்கியமான அம்சமாக இத்தகைய தருணங்களையும் நிகழ்வுகளையும் எழுத்தில் வடிப்பதும் எழுதுவதே பழக்கமாயிராத எனக்கு ஒரளவு நிகழ ஆரம்பிக்கிறது.

கேதாரத்தில் மரண விளிம்பில் இருந்து வந்த பிறகு இது போன்ற நிகழ்வுகளும் தருணங்களும் அதிகமாகவே வெள்ளப் பெருக்காகி என்னை மேலும் மேலும் அமைதியாக்குகின்றன. அவ்வப்போது எனது தவறுகள் புலப்பட்டு என்னை கவனிக்க வைக்கின்றன. இப்படித்தான் கடந்த இரு தின நிகழ்வுகள்.

ஏற்கனவே கடந்த மாதம் ஒரு சந்நியாசியோடு இருந்த போது ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பாக உணர்த்தினேன். அதன் பிறகு பரமானந்த பாபாஜி என்கிற ஒரு அற்புத மனிதரின் சந்திப்பும் அன்மையும். இதே காலகட்டங்களில் நான் மிகவும் ரசித்த , நேசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் திரு பாலகுமாரனின் எழுத்துக்களும் நட்பும் , அதுவும் வெகுகாலத்திற்கு பிறகு மீண்டும்…………..

நேற்றைய நினைவலைகள் (அதை தனியாக பதிவு செய்கிறேன்) கிளப்பிய கவனம். அது அந்த நேசத்தின் கருணை. மீண்டும் சொல்கிறேன் , குருவருளை எவராலும் அளவிடமுடியாது. அது பலவிதங்களில் பணி செய்யும். அது பல ரூபங்களில் தரிசனம் தரும். 

அவனருளால் மட்டுமே அதை நாம் உணரமுடியும். அவனருள் இல்லையென்றால் அணுவளவு கூட நம்மால் உணரமுடியாது, அதை உணரும் போது நமது முந்தைய தவறான புரிதல்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதற்கு நம்மை  நாமே கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும், அதற்கும் கூட அவனருள் இருந்தாலே மட்டுமே சாத்தியம்.

நினைவலைகளில் சொல்லாத ஒரு விஷயத்தை நான் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். பொதுவாகவே எனது செயல்களில் சிறு வயது முதல் பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் சில செயல்கள் அவ்வப்போது தலை எட்டிக் காட்டும். இதை நான் மௌனத்தில் இருந்த காலங்களில் கவனித்திருக்கிறேன்.

நமது தவறுகள் நமக்கு பட்டவர்த்தனமாக நமக்கு மட்டுமே புரியும் படி சுட்டிக் காட்டப்படும் . அது அவரது கருணை. அது நம்மை நாமே பார்க்க வைக்கும் கண்ணாடி.

அப்படி தவறுகளை உணரும் போது எப்படி ஒத்துக் கொள்வது என்று கேள்வி எழும். மனம் கூறும் ஆயிரம் காரணங்களை / சமாதானங்களை சமரசம் கொள்ளாது ஒதுக்கி வைக்க வேண்டும்.

அப்படித்தான் நேற்றும் ஒரு தவறை உணர்ந்தேன். என்னுடைய பதிவுகளில் இப்படிப்பட்ட கருத்துக்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அதற்கு காரணம் என் எழுத்துக்கள் இன்னும் என்னால் பலமுறை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

இந்த தருணத்தில் எனது நண்பர் (லேட்) மகேஷை நான் நினைத்து பார்க்கிறேன். சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பது பழக்கமிருந்தாலும் (ஏற்கனவே நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் என்ற கட்டுரையில் பதிவு செய்திருந்தேன்) அதிகம் படித்ததும் பழகியதும் பாலகுமாரனின் எழுத்துக்கள்தான்.  இந்த தமிழார்வத்தை ஊக்குவித்தவர்களில் சௌந்தர் அண்ணாவும் மகேஷும் மிக முக்கியமானவர்கள் என்பேன்.

அவர்கள் எழுத்தார்வத்தையும் கூட ஊக்குவித்தவர்கள். எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. முதல் முறையாக 2001ம் வருடம் ஒரு பயணக் கட்டுரை மகேஷின் உந்துதலால் எழுதியது. அப்போது எல்லாம் கம்யூட்டரும் கிடையாது , தமிழ் தட்டச்சும் எனக்கு தெரியாது. கைப்பட எழுதினேன்.

எடிட்டிங் என்கிற விஷயத்தையும் அவனே எனக்கு சொல்லிக் கொடுத்தவன். சரியான வார்த்தை பிரயோகம் மற்றும் சரியான முறையான வெளிப்பாடு ஆகியவற்றிற்காக மீண்டும் மீண்டும் எழுதியதை படித்து பார்த்து திருத்தங்கள் செய்தேன். திருத்தியதை மீண்டும் படித்துப் பார்த்தேன். படித்த போது தோன்றிய திருத்தங்களை செய்தேன் . ஒரு கட்டத்தில் என்னால் எவ்வித திருத்தமும் அதற்கு மேல் செய்ய முடியவில்லை. அது அந்த கட்டுரையை 25வது தடவை எழுதிய பிறகு.

கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதை விட எனக்கு ஒன்று புரிந்தது .என் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தை கற்று கொள்ள ஆரம்பித்தேன் . அதை எத்தனை தடவை வடிகட்டத் தேவையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அந்த கட்டுரையும் அன்பான மக்களின் பாராட்டும், ஊக்குவிப்பும் என்னை எழுத்து பக்கம் திருப்பியது. அப்போதெல்லாம் பாலகுமாரன் அவர்களின் எழுத்து நினைவிற்கு வரும். பிரமிப்பாக இருக்கும்.

ஆன்மீக வாழ்க்கையில் வாழும் ஒருவர் தன் அனுபவங்களை பகிர்வது என்பது, கேட்பவருக்கு ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டி அல்லது கேட்பவருடைய சந்தேகத்தை தீர்த்து வைக்க அல்லது பிறருக்கு தெளிவு ஏற்படுத்த என பல காரணங்களுக்காக பகிரப்படுகின்றன,

இதை சில சமயம் நாம் வேறுவிதமாகவும் புரிந்து கொள்கிறோம் என்பதும் நிகழத்தான் செய்கிறது. ஆழமான அனுபவஸ்தர்கள் அதையும் உணர்ந்தே இருக்கின்றனர் என்பது என் எண்ணம். அதையும் சேர்த்தே அவர்கள் கையாளுகின்றனர்.

எப்படி இப்படி ஆழமான அனுபவங்களை அழகாக எழுத்தில் வடிக்கிறார் என்று பொறாமையாகக் கூட இருக்கும்.பகிரும் போது பலரோடு அவரது எழுத்துக்களை , கதைகளை பற்றி பேசும் போது நாமும் ஒரளவாவது எழுத மாட்டோமா என்கிற ஏக்கமூம் , எழுத்து என்பது எப்படி நம்மை , நம் எண்ண அலைகளை கவனிக்க வைக்கிறது என்பதும் நினைவிற்கு வரும்.

அதனால்தான் கேதார்நாத் அனுபவக் கட்டுரை மிக மிக குறைந்த திருத்தங்களோடு (என்னாலும் , தினமணி ஆசிரியர் குழுவாலும் சரி) வெளிவந்த போது உண்மையில் , வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெள்ளத்தில் இழந்து நின்ற போது , எழுத்து என்னோடு இருக்கிறது என்பதை எனக்கு காட்டியது.

இதிலும் சரி , வாழ்க்கையிலும் சரி , அனுபவத்திலும் சரி எழுத்திலும் சரி அல்லது அனைத்து வெளிப்பாடுகளிலும் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை அறிவேன். அதனால் எனது எழுத்துக்களிலும் ,கருத்துக்களிலும் , வெளிப்பாடுகளிலும் தவறுகள் அவ்வப்போது வெளிப்படுவதை அறிவேன்.

பெரும்பாலும் நானே அதை மீண்டும் படிக்கும் போது இதை இப்படி சொல்லியிருக்கலாமோ , அட இதை இப்படியா சொல்வது ? இது என்ன? நாம் என்ன சொல்ல வந்தோம் இந்த எழுத்துக்களில் என்ன வெளிப்பட்டு உள்ளது என்று தோன்றும்.

சில சமயம் எவ்வளவு அறியாமையுடன் சிறுபிள்ளைத்தனமாக இதை யெல்லாம் எழுதியுள்ளேமே என்று சிலது தோன்றும். அதுவும் பிறரை பற்றி சொல்ல முற்படுவதே தவறு அப்படி இருக்க அதையும் தவறாக சொல்வது என்பது மாபெரும் தவறு. பல சமயங்களில் பதிவு செய்த பிறகும் திருத்தம் செய்துள்ளேன்.

அதை உணரும் போது ……………………… என்ன விளக்கங்கள் சொன்னாலும் தகாது. எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் தகாது. அறிந்து செய்கிறோமோ அல்லது அறியாது நிகழ்ந்த தவறோ அது பிரச்சனை அல்ல. தவறு என்பதை தவறு என்று உணர்வதுதான் ஒரே தீர்வு.

நான் எழுதுவது என்பது என்னை உற்று நோக்க மட்டும்தான். அதிலும் பெரும்பாலும் நான் சந்தித்த தருணங்கள் , மக்கள் , கடந்து வந்த விஷயங்கள் , படித்த விஷயங்கள் இதை மட்டுமே எழுதிவந்தேன், பொதுவான கருத்துக்களையோ அல்லது எனது கருத்துக்களையோ அல்லது ஆன்மீக சம்பந்தபட்ட கருத்துக்களையோ எப்போதும் தவிர்க்கவே விரும்புவேன்.

சில சமயங்களில் அதை வெளிப்படுத்த நேரிடும் போது பலமுறை ஆய்விற்கு உட்படுத்துவேன். அப்படி செய்யும் போது  நிறைய வெற்று வோர்ட் பைலாகவே நின்றுவிடும். பிளாக்கிற்கோ அல்லது பேஸ்புக்கிற்கோ போகவே போகாது, அதுவும் தற்போது எனது பிளாக்கில் நான் எழுதுவதை அதிகம் படிக்கபடுவதை கவனிக்கும் போது,  மேலும் பொறுப்பு கூடுவதாக உணர்கிறேன்.  

இந்த பொறுப்பை கையாளும் முன்பு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும். அப்படி ஒரு கவனத்தை நேற்றும் உணர்ந்தேன். அதை சரிபடுத்தும விதமாக அப்பதிவில் அதை நீக்கிவிட்டேன் .

உங்கள் கருத்துக்கள் இதை எனக்கு தெரிவிக்கின்றன என்று அதை படித்த ஒருவர் சொன்ன போது , என்னில் அப்படிபட்ட எவ்வித சிந்தனையோ அல்லது எண்ணமோ இல்லாததை ( இப்போதும் இல்லை எப்போதும் வராமலே பார்த்துக் கொள்வேன் , அதுதான் எனது நன்றி வெளிப்பாடாக இருக்கும் )  உரிய முறையில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டது சந்தோஷமாக உணர்ந்தேன்.

இதையும் அப்படிப்பட்டவர்கள் படிப்பார்கள் . இப்போதும் அதை உணர்வார்கள் என்றே நம்புகிறேன். ஆசீர்வதிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

Saturday 14 December 2013

sharing from ilanko nava post in fb- ramanayana - a way to understand

monday, May 30, 2011
ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 7
சங்கிய தத்துவத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சென்ற பகுதியில் விளக்கினேன்.

சாங்கிய தத்துவ பட விளக்கம்

மனிதனின் உள் நிலையின் பகுதிகளே சாங்கியம் விளக்குகிறது. உனக்குள் இருப்பது மட்டுமே உண்மை நிலை என்கிறது சாங்கியம். ராமாயணம் மற்றும் மஹாபாரதங்கள் சாங்கிய தத்துவத்தின் கட்டமைப்பை கதாப்பாத்திரங்களாக கொண்டவை என்பதே உண்மையாகும். ஏதோ சில கதாசிரியரின் கற்பனையில் தோன்றியவை அல்ல. இது சாங்கிய தத்துவத்தின் விளக்க வடிவம்.

சாங்கிய வரைபடத்தில் கூறப்படும் அறிவு என்பது என்ன? ஸாத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என்றால் என்ன? என கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் சாங்கிய தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாமல் வேறு திசையில் பயணிக்க வேண்டி வரும். ஆனால் சாங்கியத்தை நாம் கதைவடிவிலும் கதாப்பத்திரத்தின் செயல் வடிவிலும் புரிந்துகொள்வது எளிது.

உதாரணமாக ராமாயணத்தில் தசரதனின் இடத்திலிருந்து ராம கதை துவங்குகிறது. தசரதனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் புத்திரன் கிடைக்க யாகம் செய்கிறார். தசரதனுக்கு மூன்று மனைவிகள் மற்றும் அறுபதனாயிரம் துணைவிகள்.

தசரதன் என்ற பெயரை கவனியுங்கள். பத்து ரதத்தையும் கட்டுப்படுத்த தெரிந்தவன் என அர்த்தம். ஞானேந்திரியம் மற்றும் கர்மேந்திரியத்தை சேர்த்து பத்து முக்கிய இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் தசரதன். அவனுக்கு ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் கொண்ட மூன்று மனைவிகள் முறையே கெளசல்யா, கைகேயி, சுமித்ரா. ஞானேந்திரியம், கர்மேந்திரியம், தன்மத்திரைகள் மற்றும் பஞ்சபூதம் ஆகிய இருபதும், மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X1000) அறுபதனாயிரம் துணைவிகள்.

ஸாத்வ குணம் என்பது ஆன்மீக நிலை மற்றும் மேன்மையான குணம் என்பதால் கெளசல்யாவிற்கு ராமர் என்ற ஆன்மா ரூபம் குழந்தையாக பிறக்கிறது. கைகேயி ரஜோகுணம் கொண்டவள் என்பதால் அவளுக்கு பரதன். ரஜோகுணம் பதவி மற்றும் போக நிலையில் வாழ்தலை குறிக்கும். இதனால் கைகேயி பரதனுக்கு முடிசூட்டவேண்டும் என கேட்கிறாள். சுமித்ரா என்ற தமோநிலையில் இருப்பவளுக்கு லட்சுமணன் மற்றும் சத்ருகன் பிறக்கிறார்கள். கோபம் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் என்பது தமோநிலை குணங்களாகும். அதனால் லட்சுமணன் எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவனாகிறான்.

சீதா என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மனித பிறப்பு போல இல்லாமல், மண்ணுக்குள் இருந்து கிடைக்கிறாள். ராமாயணத்தின் முடிவில் சீதா மண்ணுக்குள்ளேயே சென்றுவிடுகிறாள். சீதா பிருகிரிதி ரூபமாக காட்சி அளிக்கிறாள். இயற்கையே வடிவானவள். அதனால் பொறுமையின் சிகரமாகவும், இராவணனிடம் கோபம் கொண்ட சீற்றமாகவும் காணப்படுகிறாள்.ஆன்மா என்ற புருஷார்த்த நிலையில் இருக்கும் ராமர், தன் சுய தன்மையையும் பிரகிருதி சீதையை விட்டு விலகி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ப்ராண சக்தி என்ற அனுமான் (வாயு புத்ரன்) மூலம் மீண்டும் இணையும் தன்மையே ராமாயணம்.

நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிருதியினால் விலகி தன்னை உடலாகவும் உடல் உறுப்பாகவும் கருதுகிறது. உங்களின் உள்ளே ராமர் சீதையை விட்டு விலகிவிட்டார்..! வாயுவால் பிறந்த வாயுபுத்ரன் என்கிற ஆஞ்சநேயரால் (சுவாசத்தால்) இருவரையும் இணைத்தால் மீண்டும் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். நீங்கள் ஆன்மா என்கிற தன்மையை உணர்ந்து ஆன்மாவாகவே இருப்பதை பட்டாபிஷேகம் என்கிறேன்.

உங்கள் சுவாசத்திற்கே தெரியாது அதற்கு எத்தனை விஷயங்கள் செய்ய முடியும் என்பது. அது போலத்தான் ஹனுமானுக்கு தன் சுயபலம் தெரியாது. வேறு ஒருவர் சொல்லுவதை கொண்டே தன் பலத்தை உணர முடியும் என்கிறது ராமாயாணம். குரு கூறும் ப்ராணாயம முறைகளை கொண்டு உங்களின் சுவாசத்தை சரி செய்தால் நீங்களும் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்பதே இதன் பின்னால் உள்ள கருத்து.

இவ்வாறு விளக்க துவங்கினால் ராமாயணத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் நம்மால் முழுமையாக உணர முடியும். சாங்கிய கருத்தை வெவ்வேறு கதாப்பாத்திரம் வாயிலாக கூற முனைவதே இதிஹாசங்கள்.

சாங்கிய கட்டமைப்பையும் அதனால் ஏற்படும் இதிஹாச தொடர்பையும் உணர்ந்தீர்கள் அல்லவா? இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் எளிமையாக பதில் கூறமுடியும்.

இராவணன் ஏன் பத்து தலையுடன் இருக்கிறான்?
இராவணன் அவனுடைய சகோதரர் இருவர் இணைந்து ஏன் மூன்று நபர்கள் மட்டும் இருக்கிறார்கள்?
விபீஷணன் எனும் இராவணனின் சகோதரர் ஏன் நல்ல பண்புடன் இராமனை பின்பற்றுகிறார்? மற்றொரு சகோதரர் கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார்?

இதற்கெல்லாம் உங்களால் உடனுக்குடன் பதில்கூற முடிகிறது என்றால் நீங்கள் சாங்கிய கட்டமைப்பை ஓரளவேனும் புரிந்துகொண்டீர்கள் என அர்த்தம்.

இப்பொழுது சொல்லுங்கள் ராமாயணம் உண்மையா? நடந்த கதையா? இல்லை நடக்கின்ற கதையா?

(வினை தொடரும்)

Thursday 12 December 2013

என்னையும் கூட உலகம் முழுவதும் கொண்டு செல்லும் டிஸ்கவரி

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே -சிவவாக்கியர்

இப்படி திக்குத் தெரியாத காட்டில் திசை புரியாமல் பயணித்து உந்தி தள்ளிய கேள்விகள் இருந்த சுவடுகள் அழிந்து போய் அருள்வழியால் ஆட்கொள்ளப்பட்டு இதோ இன்று நானே நானாக ,

வாழ்க்கையின் சாதனை வாழ்வதே என்பதாய் நன்றியோடு கூடிய ஆனந்தமாய் அமைதியாய் குருவருளோடும் அன்பர்களின் ஆசீர்வாதங்களோடும் என் வழியில் நான் பயணித்துக் கொண்டு,,,,,,,

என்னோடு நான் இருந்த நொடிகள் சுகமானவை . என்னோடு நான் இருக்கும் ஷணங்கள் ஆனந்தமானதாகவே உள்ளது ,

என் குருநாதரோடு கழித்த ஷணங்களை விவரிக்க வார்த்தைகள் இன்னும் யாரும் கண்டுபிடிக்க வில்லை , அது மட்டுமே முழுமையானதாய் இருக்கின்றது என்றுதான் அதிக பட்சம் சொல்ல முடியும் என்னால்.

வாழ்க்கையின் ஒரு பாதி நான் இங்கு வசிப்பேன் வாழ்க்கையின் மறுபாதி நான் அதை ரசிப்பேன் என்று வைரமுத்து எழுதியிருப்பார், அது அவருக்கு வாய்த்திருக்கிறதோ இல்லையோ எனக்கு ஆனந்தமாக ஆசீர்வாதமாக அழகாக வாய்த்திருக்கிறது என்பது வரமே

பொதுவாக எத்தகைய அனுபவமானாலும் சரி அது எனக்கு ஏற்பட்டதாக இருப்பின் அதற்கு நான்  எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை,  ஆனால் அதையே பிறர் கூற கேட்கும் போது அந்த அனுபவங்களை விட அந்த மனிதருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைதியாகி விட நினைப்பது உண்டு. 

ஒன்றை சரியென்றும் தவறென்றும் சொல்லிட நமக்கு என்ன உரிமை உள்ளது என்பதே காரணம். எது எப்படியானாலும் சில அனுபவங்கள் மறக்க முடியாதவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை , நாம் நினைக்க தவறினாலும் அது நினைவில் நின்று கொண்டே இருக்கும். அப்படித்தான் கேதார்

 நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ --- சிவவாக்கியர்

கேதார் என்றவுடன் 96ம் வருடம் விஜி அக்கா மற்றும் சத்குருவோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டது முதலில் நினைவிற்கு வரும், அதன் பின்னர் நாங்கள் எழுவர் 2001ல் வந்த தரிசித்து பின் வாழ்வில் முதல் முதலில் பிக்க்ஷாதிகாரம் பெற்றது, அடுத்து பரிவரார்ஜகா காலத்தில் நடைபயணமாக திருவடி அடைந்தது என நினைவுகள் சுழன்றோடும்,

நான் 2003ம் ஆண்டு பரிவார்ஜகா வாழ்க்கையில் பயணித்து திரும்பிய பின் பலரும் என்னுடைய அனுபவங்களை தெரிந்து கொள்ள விரும்பினார்கள். இப்படி இருக்குமா? அப்படி நடக்குமா ? என்றெல்லாம் கேட்பார்கள், இன்றும் ஒரு சில அன்புள்ளங்கள் அனுபவக் கட்டுரை எழுத சொல்லிக் கொண்டுதான் உள்ளனர், ஒருவர் புத்தகமாக கூட வெளியிட முன்வந்துள்ளார். ஆனால் ஏனோ அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை இன்னமும். இறையருளுக்கு விட்டு விட்டு அமைதியாக கவனித்து கடந்து செல்கிறேன்,

இதற்கு காரணம் இரண்டு உள்ளது. இப்படி நமது ஆன்மீக அனுபவங்களை பகிர்வது கூட ஒரு வகையில் அறியாமையே . ஆன்மீகத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை, ஆனால் அனுபவங்கள் என்பது நாம் ஒரு நூலை மூலத்தில் இருந்து மொழி பெயர்ப்பது போலத்தான். மொழி பெயர்ப்பு எவ்வளவு அழகாகவே அமைய நேரிட்டாலும் மூலத்தின் அழகும் நடையும் வரவே வராது , அதை அனுவித்தவருக்குத்தான் புரியும்,

அடுத்து இதில் உள்ள சிக்கல் இத்தகைய அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்பவருக்கும் , அதை பகிர்ந்து கொள்பவருக்கும் உள்ள சிக்கல்கள்,
முதலில் நமது அனுபவங்களை ஆர்வமாக கேட்பவர்கள் நம்மை ஏதோ அவதார புருஷர்கள் போல எண்ணி ஆராதிக்க ஆரம்பிப்பார்கள் , நாமும் கடந்து போன அந்த பழைய நொடிகளையே பேசி வாழ்ந்திருப்போம். பெரும்பாலனவர்கள் அதிலேயே சிக்கி போய்விடுவார்கள், இதுதான் மனதின் இயல்பு, ஏனெனில் கடந்த காலம் என்கிற ஒன்று இல்லையெனில் மனதால் செயல்பட முடியாது,

எப்போதுமே அது இந்த ஷணத்தில் இருப்பதில்லை, ஒன்று கடந்த காலத்தை அசை போடுகிறது அல்லது எதிர்காலத்திற்கு கனவு காண்கிறது. ஆனால் வாழ்வோ இந்த ஷணத்தில் , நிகழ்காலத்திலேயே நடக்கிறது,

நாம் அனைவரும் கிரிகெட் விளையாட்டை மிகவும் ரசிக்கின்றோம். நமக்கு டென்டுல்கரோ அல்லது டிராவிட்டோ அவர்கள் விளையாடும் போது அவர்களுடைய கடந்த காலம் மூழுவதும் டிவியில் காட்டப்படுகிறது அல்லது சொல்லப்படுகிறது. ஆனால் எண்ணிப்பாருங்கள் அவர் நான் இவ்வளவு பெரிய விளையாட்டு வீரன் என்கிற ரீதியில் அடுத்த பந்தை சந்திக்க இயலுமா?  எவ்வளவு பெரிய மூட்டாள்தனம்,

ஒரே வேகத்தில் வீசப்பட்டாலும் ஒரே பௌலராலேயே வீசப்பட்டாலும் எவ்வளவு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது, அது எத்தனை வாய்ப்புக்களை தன்னுள் உள்ளடக்கிக் கொண்டு வருகிறது ,

எப்படி ஒரு நொடியும் , நதியும் மீண்டும் தான் கடந்த பாதையை மீண்டும் கடப்பதில்லையோ அப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு ஆன்மீகப் பயணமும் கூட……………………….

அடுத்து கேட்பவருக்கும் தனக்கும் இப்படி யெல்லாம் நடக்காதா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது , அதற்கு காரணம் மனதின் ஒப்பிட்டு பார்க்கும் தன்மைதான் என்பதை சொல்லவேண்டியது இல்லை, பெரும்பாலோர்க்கு இந்த எதிர்ப்பார்ப்பே  அவரது ஆன்மீக சாதனைகளுக்கும் , முன்னேற்றத்திற்கும் தடையாகிவிடுகிறது,

எப்படி நாம் காதால் கேட்கும் சப்தங்களையும் கண்ணால் பார்க்கும் பொருட்களையும்  ஒன்றோடு ஒன்று தொடர்ப்பு படுத்தி இரவு தூக்கத்தில் கனவுகளாய் மனம் தருகிறதோ அதுபோல தியானத்திற்கு அமரும் போதெல்லாம் ஒரு சிறு உணர்வு ஏற்பட்டவுடனே அடுத்து இதுவா , அதுவா என்று எண்ணங்கள் மேலெழும்பி கவனத்தை சிதற அடிக்கும், 

மனம் ஒரு விந்தையான கருவி, அழகானதும் கூட, சேகரிப்பதும் சேகரித்ததில் இருந்து செயல்படவும் மட்டும்தான் அதற்கு தெரியும். இத்தகைய விஷயங்கள் தனக்கும் நிகழ்ந்ததைப் போலவே , நிகழ்வதைப் போலவே ஒரு பிரமையையும் ஏற்படுத்திவிடுகிறது ,

ஒரு அனுபவத்தை எழுத்தில் கொண்டு வருவது ஒரு அற்புதமான கலை. அதை கையாளுவதில்  பலரை அதிகம் ரசித்திருக்கிறேன். ஒரு கதாசரியனும் கவிஞனும் மனிதனின் அற்புதமான பரிமாணங்கள் .. 

அனுபவத்திற்குள் செல்லாமலே அனுபவத்திற்குள் பயணிக்க முடியும். உணர்வுகளை கையாளமுடியும். அதே விஷயங்களை அனுபவத்தோடு கலந்து சொல்லும் போது அது அழகான பரிமாற்றம்.

இதன் தாக்கமும் ஆழமும் அளவிடமுடியாது. பஞ்சின் பக்கத்தில் நெருப்பை கொண்டு போவது போல, வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறமையும் மொழியின் மீது ஆளுமையும் வந்து விட்டால் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதுவும் ஆன்மீக அனுபவங்களை எழுதும் போது பலரும் பலவிதமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு. சரியான வார்த்தைகளை கையாளாவிட்டால் அவ்வளவுதான். இதை கையாளுவதில் எனக்கு தெரிந்த வரை என்னை அதிகம் ஈர்த்தவர் திரு பாலகுமாரன் மட்டும்தான்.. ஆகையால் எனது முயற்சியை ரசனையின் எல்லையோடு பெரும்பாலும் நிறுத்திக் கொள்கிறேன்.

அது மட்டுமே எனக்கு தேவையானது. அவரின் எழுத்துக்களை  ரசித்தாலும் கூட அவரது கருத்துக்களில் அவ்வப்போது எனக்குள் முரண்படுவதும் நிகழும். அதுதான் எழுத்தின் பரிமாணம். ஒரு எழுத்து பல பரிமாணங்களை காட்டக் கூடியது. ஒவ்வொரு சமயம் படிக்கும் போதும் ஒவ்வொரு ஆழத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியது. முரண்பாடுகளை ரசிப்பதே வாழ்க்கையின் அழகு. அங்கு போராட்டம் என்பதே இல்லை. அது அது அதனதன் பரிமாணத்தில் அது அதுவாகவே உள்ளது . அதை மட்டுமே ரசிக்கிறேன்.

பெரும்பாலானவர்களால் எழுத்துக்களை தாண்டி பார்க்க முடியாத முடியாமல் போகிறதால் எழுத்துக்களோடும் , வார்த்தைகளோடும் வாழ்நாள் மூழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். அது முடியாத போது எழுதுபவனோடு போராடுகிறார்கள் என்பதே எக்காலத்திலும் நிகழ்கிறது, எழுத்தை அதன் முரண்பாடுகளை நேசிக்க கற்றுக் கொள்ளுபவன் எழுதுபவனையும் அவனது வேறுபாடுகளை கடந்து நேசிக்க கற்றுக் கொள்கிறான்.

இப்படி அனுபவங்கள் முதலில் ஊக்குவிக்கும் கருவியாக உந்து சக்தியாக செயல்பட்டாலும் சில தருணங்களில் அதுவே அடுத்த நிலைக்கு கடந்து செல்ல தடையாகவும் ஆகிவிடுகிறது.

இப்படிப்பட்ட காரணங்கள் எல்லாவற்றையும் விட , இப்பயணத்தில் அனைத்து விதமான முரண்பாடான சூழ்நிலைகளிலும் இருந்துள்ளேன். ஆகையால் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமாக அலங்கரிக்கப்பட்டு அலங்கோலமாக ஆனால் அழகாக ஜோடிக்கப்பட்டிருந்தது,அவையவை அந்தந்த பரிமாணத்தில் அதற்கான பார்வையில் அழகாகவே இருந்தன ,

பஞ்சு மெத்தையிலும் படுத்து உறங்கியுள்ளேன் பாதையின் ஓரத்திலும் உறங்கியுள்ளேன் . ஒரு நாளில் பலமுறை உண்டும் உள்ளேன் வாரக்கணக்கில் ஒரு டீயில் வாழ்ந்தும் உள்ளேன் ,

இப்படி பல பல நினைவுகள் பல பல நொடிகளோடு கைகோர்த்து கண் திறந்திருக்கும் போதே கனவாய் எழும்பி சுழன்றியடித்தாலும் பார்வை மட்டும் இந்த ஷண்த்தில் இருக்க விழிப்பை வேண்டியிருக்கேன் .

கேதார் காலடியில் கடந்த ஒன்னறை வருடம் ஏதோ ஒன்னறை நொடிகளைப் போல நீண்டு சுருங்கி கடந்துள்ளது, எனது மனக்கணக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் இன்னும் இவ்வளவு நாள்தான் என்கிற போக்கில் வாழத் தொடங்கியிருந்தேன்

ஆனால் அப்போதுதான் அந்த பிரளயம் நிகழ்ந்தது , பலரின் கடைசி ஓலங்கள் ஓம்காரமாகவே ஒலித்தன என்றால் சற்றும் மிகையில்லை. வாழ்விற்கும் சாவிற்கும் என எதற்கானாலும் சரி இறைவனை இறைஞ்சுவதை தவிர வேறு வாய்ப்பை யவருக்கும் அந்த நொடி தன்னகத்தே வழங்கவில்லை,

இறைநாமத்தால் உயிர் தப்பியவர்களைப் விட  இறைநாமத்தோடே அவன் திருவடி அடைந்தவர்களே பெருமளவு அதிகம் என்பேன், மந்தாகினியின் சீற்றம் என்று சொல்ல முடியவில்லை , நதி அது தன் போக்கில் போய்கொண்டிருக்கிறது காலத்தின் நொடிகளைப் போலவே ,,,,,,,,,,,,,,,

ஆனால் அது தன் பயணத்தை மாற்றி இருந்தது . ஒரு புதிய பாதையில் எவ்வளவு ஆனந்தமாக ஆக்ரோஷமாக ஓடிவருமோ அப்படித்தான் அது பிரவாகமெடுத்தது, அதுவும் எம்பெருமான் ஈசனாரின் பாதம் தொட முடியும் என்றால் அதற்குத்தான் ஆசை இருக்காதா என்ன ? எத்தனை காலம் காத்திருந்ததோ என்னவோ ?

அன்றைய நாட்களில் இன்றைய குக்கிராமத்தைப் போலவே இருந்த நாமக்கல்லில் பிறந்து வளர்ந்து , தப்பும் தவறுமாய் படித்து வாழ்க்கை பயணத்தின் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த போது நம் குடும்பத்தில் நீதானப்பா மூதல் ஆள் என்பது எல்லாவற்றிலும் பொருந்தியே இருந்தது,

தமிழே தடுமாற்றம் என்கிற நிலை கடந்து , ஆங்கிலம் அறை குறைதான் என்பதையும் கடந்து , முயற்சியுடையோர் இகழ்ச்சி யடையோர் என்பதையே பக்கபலமாய் கொண்டு தமிழ் அறியாத மக்களிடம் பேச முயன்று தோற்று , பின் திக்கு வாய் அவதாரமாய் தப்பும் தவறுமாய் இலக்கணமின்றி பேசி , இன்று ஒரளவு பேச கற்று இருக்கிறன் என்பதை என் ஆரம்ப கால நட்புக்களும் சொந்தகளுமே அறிவார்கள்,

சீசரை சொல்லிக் கொடுத்த சுப்பு பெரியப்பாவும் ஆங்கில நாவல்களை படிக்க வாய்ப்பு தந்த நடராஜ் சித்தப்பாவும் முன்னோடிகள் என்றே நான் கூறுவேன், அதன் பின் சுவாமி நிசர்கா , ஹோடா அம்மா , டக் ஆகியோர் பெரும்பங்காற்றினார் என்பேன்,

இப்படியாக என்னோடு வளர்ந்த ஆங்கிலம் இன்று இந்த உத்தரகாண்டில் எனக்கு பிரதான மொழியாகவே உள்ளது . நான் வியந்த பார்த்த மனிதர்களைப் போல என்னை வியந்து பார்க்கும் குழந்தைகளின் நண்பனாகவே மாறிவிட்டேன் நான்.

என் பூமி பரந்து விரிந்து அழகானது . மொழிகள் கடந்த பரிபாஷை விழிகளை விரித்தே பார்க்க வைத்திருக்கிறது. மலை முகடுகளில் முட்டிக் கொள்ளும் காற்றைப் போலவே எங்களது மொழிகள் முட்டி மோதி மௌனத்தில் சங்கமித்து பின் பிரவாகமெடுக்கும்.

தப்பும் தவறுமாய் எங்களது இருவரின் மொழிகளும் இருந்தாலும் தவறாது ஆனந்தத்தையும் அன்பையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள தவறுவதில்லை. அப்படிப்பட்ட உலகில் மொழிகள் அனைத்தும் வெற்று சப்தமாகி பின் அதையும் கடந்து வெறுமையாகிப் போன நொடிகளில் வெறுமனே சுமார் 36 மணிநேரம் வாழ்ந்திருந்தேன்,

ஏன் எதையுமே தேடிப்பார்க்க கூட தோன்றவில்லை என்பதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது , எவரையும் தேடக் கூட இல்லை, என்னைப் போலவே அனைவரும் ஆங்காங்கு பத்திரமாகி இருப்பார்கள் என்றே அடுத்த நாள் காலை வரை நினைத்திருந்தேன் .

நிச்சயம் இனி மழையும் வராது தண்ணீரும் வராது என்று உணர்வு ஏற்பட்ட பிறகே அந்த மயான பூமியில் நடமாட்டம் துவங்க ஆரம்பித்தது . இதோ 6 மாதங்கள் கடந்து விட்டன , இன்னமும் என் மனம் பலரையும் தேடிக் கொண்டுதான் உள்ளது , என்றுமே இனி காண முடியாது என்று உணர்ந்தாலும் என்றாவது ஒரு நாள் இவர்களை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை சற்றும் குறையவில்லை,

என்னைப் போலவே நம்பிக்கை கொண்ட மனிதர்கள் நிறைய நிறைய . தினமும் ஒன்றிரண்டு நோட்டிஸ்கள் வந்து கொண்டுதான் உள்ளன. இதை யாராலும் தகர்க்கவே முடியாது என்றே தோன்றுகிறது. ரீடர்ஸ் டைஜிஸ்ட் கதைகளில் வருவது போல இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள் என்று சில கதைகள் வரும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு நாளும் உணவருந்தும் போது நந்துவின் முகம் ஞாபகத்தோடு தவறாமல் வருகிறது. ஹன்ஸா புலித்தோலை போர்த்திய சிவனை பற்றி கூறினால் அறைவிநாடிக்கும் குறைவான நேரத்தில் அங்கிருந்த சாதுவின் முகம் வந்து அப்பிக் கொள்கிறது ,

எண்ணற்ற முகங்கள் கலந்து என் முகமாய். எண்ணற்றவர்களின் உடலும் உயிரும் எனக்குள் பாகமாய் . எங்கு செல்வது எப்படி வாழ்வது என்று எதுவும் யோசிக்க கூட உணர்வில்லாத ஒரு நிலை. அடுத்த நொடி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத ஷணத்தில் சுற்றி நடப்பவைகளின் தாக்கத்தால் தீயாய் பற்றி எரிந்த கணங்கள் ,

பிரளயதை விட , மரணத்தை விட மீட்பு பணிகளின் போது கண்ணில் கண்ட காட்சிகளால் கொதித்துப் போயிருந்த என் உள்ளம் ஒவ்வொரு டீவியாய் தேடியது . என் கோபம் அவர்களால் உணரப்பட்டிருக்க வேண்டும். உணரப்பட்டிருந்தது என்றே சொல்வேன். என்னை ஏதோ ஒரு எதிர் கட்சி உறுப்பினராகவே அத்தனை டீவி காமெராக்களும் கண்டன. ஆனால் அவர்களுக்கு தேவை அவர்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தும அடுத்தவர்களின் பரிதாப கூக்குரல்கள் மட்டுமே.

அந்த நேரத்தில்தான் ஞான ஆலயம் இதழின் ஆசிரியர் மஞ்சுளா ரமேஷ் எனது பேஸ்புக்கில் ஒரு செய்தி அனுப்பி இருந்தார். அவரை முன்பே அறிந்திருந்தாலும் பழக்கமில்லை. அவருக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாது . ஆனால் அவரது தொடர்ப்புகள் நான் நன்கு அறிவேன். அவர்கள் மூலமாகத்தான் அவர் என்னை கண்டு பிடித்திருக்க வேண்டும்.

அவருக்கும் எனது அனுபவம் தனது பத்திரிக்கைக்கு கட்டுரையாக தேவைப்பட்டது . இத்தனைக்கும் அப்போது என்னிடத்தில் இருந்ததெல்லாம் ஒரு அன்பர் வாங்கி தந்த ஒற்றை காவி வேட்டி மட்டும்தான் . 

அவர் பேசிய உரையாடல்களில் ஒன்றில் கூட என் நிலை பற்றியோ அல்லது எனக்கு எவ்வித உதவி தேவைப்படுகிறது என்பதை பற்றியோ (இன்று வரை) ஒரு வார்த்தை கேட்கவில்லை. கட்டுரை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார்.

எப்படியும் நான் எழுதுவதை எடிட் செய்துதான் போடுவார்கள் என்பது நான் அறிவேன், ஆனால் எப்படி எழுதுவது . யாரிடம் சென்று பேப்பர் , பேனா போன்றவற்றை வாங்க காசு கேட்பது . ஏதோ ஒரு நினைவில் சரி முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டாலும் எத்தகைய வழியும் புலப்படாமலே நாள் கழிந்து கொண்டிருந்தது,

குப்தகாசியாக இருந்திருப்பின் யாரிடமாவது கம்யூட்டர் கேட்டிருப்பேன் .இங்கு அதற்கும் வழி இல்லாது இருந்தது, அடுத்து ஒவ்வொரு நாளும் உணவிற்கு எந்த ஆசிரமத்திற்கு செல்வது என்கிற நிலை மறுபுறம்.

சில ஆசிரமங்கள் எனக்கான ஆதரவை அளிக்க முன்வந்திருந்தாலும் அங்கு சென்று இத்தகைய பணிகள் எல்லாம் செய்ய முடியாது என்பதால் இறைவனே வழி காட்டட்டும் என அமைதியாய் இருந்தேன். அதே சமயம் எழுத்துக்கள் எனக்கு வடிகாலாய் இருக்கும் என்று நினைத்தேன், என் கட்டுப்பாட்டில் இல்லாத அரசியல் களத்தில் இருந்து என் கவனத்தை திருப்ப உதவி புரியும் என்று எண்ணினேன்.

அடுத்த வேளை உணவு அல்லது எதிர்காலம் பற்றி பயம் , நாளை பற்றி கனவுகள் என்னை ஆக்ரமிக்காமல் இருக்க எழுத்தில் முழ்குவது உதவும் என்று எண்ணினேன். அதனால் ஆர்வம் கொண்டேன். எனக்கும் உயிர் வாழ ஏதோ ஒரு பிடிப்பு தேவை பட்டது. நாளை காலை கண்விழிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் பிடிப்பாக உணர்ந்த தருணங்கள் அவை.

நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே என் நம்பிக்கையின் ஆதாரமாக செயல்பட்ட தருணம். ஆனால் செயலுக்கு இவை போதாதே. அந்த நேரத்தில்தான் என்னை கேதாரத்தில் கண்டு சென்றிருந்த டெல்லி அன்பர் உதவ முன்வந்தார்.

இடம் பெயர்ந்தேன் . அங்கு சில தினங்கள் இருந்து அவர்கள் கேட்ட படி சுருக்கமாக சொல்ல முயற்சித்து , திருப்தி பெறாவிட்டாலும் நேரமின்மை காரணமாக ஒருவழியாய் கட்டுரையை ஞான ஆலயத்திற்கு அனுப்ப தயாராகி இருந்தேன் . அப்போதுதான் தினமணியின் ஆர்விஎஸ் தொடர்ப்பு கொண்டார்.

ஏற்கனவே எனது எழுத்துக்களை பேஸ்புக் மூலம் படித்திருந்ததால் நல்ல ஊக்கமளித்தார். ஏற்கனவே மஞ்சுளா ரமேஷ் வேண்டுகோளுக்கு பணி செய்த போதும் எனக்கு திருப்தி அளிக்க வில்லை என்று கூறினேன், என்னால் சிறு கட்டுரையாக எழுத முடியாது அண்ணா என்கிற போது , கவலைப்படாதீர்கள் தாரளமாக தங்களது போக்கில் எழுதுங்கள் நமது வெப்பத்திரிக்கையில் தொடராக வெளியிட ஏற்பாடு செய்கிறேன் என்று ஆசிர்வதித்தார்,

மேற்கொண்டு  அந்த அன்பருக்கு தொந்தரவாய் இருக்க விரும்பாததால் டெல்லியில் தங்க முடியாத நிலை. தங்கியிருந்த ஆசிரமத்திலோ உணவுக் கூடம் எங்கு உள்ளது , எத்தனை மணிக்கு என்பதையே 2, 3 தினங்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலை. 

அவர் அறிமுகப் படுத்திய நபரோ தனது கம்யூட்டரை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததே பெரிதாக இருந்தது, ஆனால் அவர்கள் இருவரிடத்திலும் சரி அல்லது வேறு எவரிடத்திலும் சரி என் பசியை பற்றி பேசவில்லை. பட்டினியால் நாட்களை கழிக்க முடியாது என்பது கட்டுரையை முடித்த போது மூளைக்கு உறைத்தது. நன்றாக சாப்பிட்டு வாழ்பவனைப் போலவே நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஹரித்துவாருக்கு திரும்ப எத்தனித்தேன். குறைந்த பட்சம் சாப்பாடும் தங்குமிடமுமாவது உத்திரவாதம் என்பதுதான் ஒரே காரணம்.

ஆனால் வாழ்க்கை அதற்கே உரிய அம்சத்தோடு விரிய ஆரம்பித்தது, அடுத்த விநாடி சுமந்து கொண்டிருக்கும் ஆச்சரியங்களை அளவிட முடியாது என்கிற சினிமா வசனம் அழகானதுதான்,  20 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ப்பில் வந்த எனது நண்பரும் பள்ளித் தோழனும் உறவும் ஆகிய ஒருவர் அந்த ஷணத்தில் அடுத்த படிகட்டாய் உதவ முன்வந்தார்.

ஞான ஆலயத்தில் ஜுலை மற்றும ஆகஸ்ட் இதழ்களில் வெளிவந்தது கட்டுரை, ஜுலை மாத கட்டுரையை பிடிஎப் பைலாக அனுப்பி வைத்தவர்கள் ஏனோ அதன் பின் ஆர்வம் காட்டவில்லை, இந்த புத்தகத்தை படித்து என்னோடு தொடர்ப்பு கொண்ட முன்பின் அறியாத அந்த சிவனடியார்கள் பெற்ற இன்பம் எனக்கு கொடுத்து வைக்க வில்லை,

பலமுறை மஞ்சுளா ரமேஷிற்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பியும் , அவரது மொபைலுக்கு பேசியும் கூட இன்று வரை பதில் வரவே இல்லை. இதற்குள் சில அன்பர்கள் பத்திரிக்கையில் எழுதியதற்கு என்ன சன்மானம் பெற்றீர்கள் என்கிற விசாரிப்பு வேறு

நான் செலவு செய்யாவிடினும் அந்த டெல்லி அன்பர் எனக்காக செய்த செலவு(ஆசிரமத்திற்கு அளித்த நன்கொடை) கூட நான் பெறவில்லை என்பதுதான் உண்மை. அப்படி எதையும் எதிர்பார்த்தும் நான் அதை எழுதவில்லை .

என்ன குறைந்த பட்சம் இரண்டாவது பாகத்தையும் ஒரு பிடிஎப் பைலாக அனுப்பி வைத்திருந்தால் அதை படித்து இப்படித்தான் வந்திருக்கிறது என்கிற  சந்தோஷமாவது பெற்றிருப்பேன், அவ்வளவுதான். ஆனால் அதற்கு எனக்கு கொடுப்பினை இருக்கவில்லை. 

அவரைப் போன்ற ஆன்மீக பத்திரிக்கை நடத்துபவர்கள் தங்களது வாசகர்களோடு இணைந்து  ஒரு சிறிய ஆசிரமம் அமைத்து தர முன்வருவார்கள் என்று எண்ணம் கூட இருந்தது உண்மை. அதை இங்குள்ள சாதுக்களுக்கு பயன்படும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என்றெல்லாம் கூட மனம் கற்பனை செய்தது. 

ஆயினும் அவர்களுக்கு ஒரு வகையில் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு திசை காட்டியது போல அமைந்தது அவர்களது விண்ணப்பம், அதே போல் இந்த கற்பனைகள் என்னை எனக்குள் ரசிக்க வைத்தன. வாழ்க்கையின் திசை அறியாத காலத்திலும் கனவுகள் வழிநடத்தின என்றால் அது மிகையாகாது.

அதற்கு மாறாக தினமணியில் இருந்து ஆர்விஎஸ்ம் ஸ்ரீராமும் (சன்மானம் எதுவும தராவிட்டாலும் J – இங்கும் நான் அப்படி எதையும் எதிர்பார்க்கவில்லை ) தங்களது அன்பையும் ஊக்குவிப்பையும் இன்றுவரை தொடர்ந்து தந்து வருவது எத்தனையோ மனிதர்கள் இழந்து நின்ற இத்தருணங்களில் அற்புதமான இருமனிதர்களை வரமாக பெற்றது போல உணர்வு. (மஞ்சுளா ரமேஷ் உள்பட இத்தகைய அழகான மனிதர்களே அவர்களது தொடர்ப்புகளே எனது வாழ்க்கைக்கு சன்மானம்தான்))

முதல் எழுத்து தினமணி தரத்தில் அதுவும் எடிட் செய்யப்படாது அவர்களது ஆசியோடு வந்தது எனது தமிழாசிரியர்களுக்கும் , தங்களது எழுத்துக்ளின் மூலம் நடை சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் , என்னை எழுத ஊக்குவித்தவர்களுக்கும் அர்பணிப்பு

இப்படிபட்ட சூழுலில்தான் டிஸ்கவரி சேனலுக்கான அழைப்பு வந்தது. இதோ செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நடத்திய நேர்காணல் மற்ற இதர அம்சங்களோடு இணைத்து எடிட் செய்யப்பட்டு இன்னும் சில தினங்களில் ஒலிபரப்பாகப் போகிறது, 

அது எப்படி இருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக ஒரு டிவியில் அதுவும் உலகெங்கும் ரிலிஸ் செய்யப்படும் ஒரு டாகுமென்டரியில் , ஆங்கிலத்தில்(எனது ஆங்கில புலமை பற்றி அல்ல) நான் பேசியுள்ளது என்பது நிச்சயம் என் வாழ்வில் ஒரு மைல் கல்தான். இந்த மைல் கல் உருவாக காரணமாக இருந்த என் வாழ்வில் பங்கு கொண்ட அனைத்து மனிதர்களுக்கும் இது அர்ப்பணம்தான்,

இத்தகவலை பேஸ்புக்கில் போட்டவுடன் பலரது வாழ்த்துக்கள் (போனிலும். தனி மெசேஜ்களிலும் என இன்று முழுவதும் நிரம்பி வழிந்தது) ஒரு சராசரி மனிதனாக,  வாழ்வதற்காக வாழ்ந்துள்ளது ,  அற்புதமான அனுபவமாக உள்ளது., 

வானத்தில் என்னை பெற்றவர்கள் அடையும் ஆனந்தத்தை ஆழ்மனம் உணருகிறது, ஒரு தாய்க்கு தன் மகன் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் சிறப்பாக செயல்புரிய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். எனது மழலை பேச்சுக்களிலேயே ஆனந்தம் கண்டவர்கள் டிவியில் அதுவும் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணும் போது பேரானந்தம் அடையமாட்டார்களா என்ன? 

இன்று எனது அடிப்படை தேவைகள் மீண்டும் பல அன்பர்களின் ஆசீர்வாதமாக உருவெடுத்து உடன் இருக்கிறது. இத்தனைக்கும் எவரிடமூம் எதுவும் யாசித்து நிற்கவில்லை. குருவின் கருணையும் ஆசிகளும் கங்கையைப் போல் பிரவாகமாக்கி நன்றியில் நனைக்கின்றது.

ஆனால் எனக்குள் ஆனந்தம் மட்டும் இல்லை. கனவுகள் மட்டூம் நிறைந்து உள்ளது. எனது உடன் பிறவா சகோதரிகளின் வாழ்க்கை , அவர்கள் சந்திக்க வேண்டிய சவால்கள் எண்ணங்களை ஆக்ரமிக்கின்றன. தந்தையை இழந்து வாழ்க்கை பயணத்தில் அநாதைகள் என்று பெயர் சூட்டப்பட்டு , என் உலகில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வேதனைகளை மனம் எண்ணுகின்றது,

ஊட்டச்சத்து குறைபாடுகளினாலும் மலைவாழ் கலாசாரத்திலும் வாழும் இளம் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் விழிப்பிணர்விற்கும் எத்தகைய செயல்களை செய்யலாம் என்று அவ்வப்போது சிந்தனை ஒடுகிறது. காணாமல் போன மனிதர்களின் சுவடுகளை தேடிக் கொண்டே இருக்கிறேன். அது ஒன்றே நான் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது.

என்னோடு வாழ்ந்த மனிதர்களின் பிரதிநிதியாக உலகம் முழுவதும் சில தினங்களில் தெரியப் போகிறேன். அவர்களை பற்றிய பல நினைவுகள் என்னை உறக்கத்தில் ஆழ்த்தவில்லை. பேரும் அறியாது ஊரும் அறியாது முகமும் தெரியாது எண்ணற்ற மனிதர்களின் நேசம், உயிர் வரமாய் என்னுள் வாழ்கிறது

நான் இல்லாது அவர்கள் அனைவரும் இருந்திருக்க முடியும் ஆனால் அவர்களும் நீங்களும் இல்லாது நான் இல்லை , வாழ்வின் இந்த தருணமும் இல்லை. இது கேதாரத்தில் என்னோடு வாழ்ந்தவர்களுக்கும் என் உத்திரகாண்டின் அன்பான மக்களுக்கும் , உங்களுக்கும் கூட பொருந்தும்

ஆயினும் அந்த காலவெள்ளத்தில் தங்களை கரைத்துக் கொண்டவர்களுக்கு இந்த நன்றிகளை அர்ப்பணிக்கின்றேன்

ஆலயத்தில் பரசுராமனின் நேசம் இனி கிடைக்காது
திவாரியின் திகட்டாத அன்பு தேடினாலும் எங்கும் பொழீயாது
குழந்தை நந்து இனி உணவு பரிமாறமாட்டான்
சந்திரகிரி சுவாமி ஆரத்திக்கு இனி வரமாட்டார்
அடைக்கலம் அளிக்க பாரத் சேவா ஆஸ்ரமம் இனி இல்லை
அந்த கடைசி இரவு பாடம் சொல்லிக் கொடுத்தவனை தேடுகிறேன்
புலித்தோலோடு சுற்றிய சிவனும் கண்ணுக்குள் வாழ்கிறான்
ஆயினும் இந்த குழந்தைகளின் அன்பில் அவர்களை காண்கிறேன்
அவர்களோடு நானும் என்னுள் வாழ்கிறேன் என் உடல் பிரியும் வரை


Sunday 1 December 2013

முத்தான மூன்று செயல்கள் -- இதுவே இன்றைய தேவை

சட்டம் , நீதித்துறை , வக்கீல் , ஜட்ஜ் அய்யா என அனைவரும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெளிவாக பேசுகிறோம் , அப்படி பேசும் போது எல்லாம் நம்மை எல்லாம் தெரிந்த ஏகாம்பரனாகவும், சமத்துவம் பேசும் சமுதாய பிரதிநிதியாகவும் காட்டிக் கொள்ள முயல்கிறோம் என்று படுகிறது

ஆனால் நாம் ஏதாவது ஒரு பிரச்சினையிலோ அல்லது வில்லங்கத்திலோ மாட்டிக் கொண்டால் அல்லது மாட்டிக் கொள்வோம் என்று யூகித்தோமேயானால் உடனே அதே சட்டத்தை எப்படி உடைப்பது அல்லது வளைப்பது என்பதை அதே வக்கீல்கள் கொண்டே அதே பணத்தை கொண்டே (எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க) தயார் செய்கிறோம்

ஆனால் இப்போது நாம் அதை விரும்பா வில்லையென்றும் நமது நண்பர்களும் உறவினர்களும் உதவ முன் வந்தது போலவும் நாம் எந்த விதத்திலும் குறைபாடு இல்லாதவர்களாய் காட்டிக் கொள்ள முயல்கிறோம்

இதே விதமாகத்தானே மற்றவர்களும் செயல்படுகின்றனர் , ஆனால் ............. எண்ணிப்பாருங்கள் மக்களே எவ்வளவு ஏமாற்றத்தில் வாழ்கிறோம் என்று .

இதனால்தான் சத்தியாகிரக போராட்டத்தின் போது காந்தி , இன்று அந்த சட்டத்தை எதிர்த்து போராடும் நாம் , அந்த சட்டத்தின் அடிப்படையில் அதற்கு கட்டுப்படாவிட்டால் நாளை எதிர்காலத்தில் நாம் இயற்றும் சட்டத்திற்கு மட்டும் மற்றவர்கள் கட்டுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியதியாகும் என்று கேட்டார்.

தனிமனித வளர்ச்சியே சமுதாய வளர்ச்சி

தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் ஒழுக்கத்தின் பிம்பம் ஆகிறது

தனிமனிதனுக்குள் விழிப்பை கொண்டு வருவோம்

நாளைய எதிர்காலம் நீங்கள் விரும்புவது போன்று இருக்கவேண்டுமானால் மூன்று செயல்கள் மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்

1, இன்றிலிருந்து வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வையும் பரப்பி வாருங்கள்

2, தங்களுக்குள்ளும் , சமுகத்திலும்  களைகளை கண்டெறிந்து களைகளின் தன்மைக்கேற்ப புத்திசாலித்தனமாய் பிடுங்கி எறியுங்கள்

3, புதிய விதைகளை விதையுங்கள் ( இந்த விழிப்புணர்வையும் ஒழுக்கத்தையும் தங்களை சுற்றியுள்ள இளைஞர்களிடம் பதியச் செய்யுங்கள்)

எந்த அரசியல் கட்சியையும் சார வேண்டாம்

ஒரு புதிய சமுதாயம் படைப்போம்

என்ன செயல் பட தயாரா ? அதை விடுத்து வெற்று விவாதங்கள் கதைக்குதவாது

நேர்மையாய் வாழ முயற்சி செய்வோம் நிச்சயம் ஒருநாள் இருட்டை வெல்வோம்

மனித சமுதாயத்திற்கான இச் செயலை ஜாதி , மதம் கடந்து , அரசியல் கட்சிகள் அனைத்தையும் கடந்து எடுத்துச் செல்வோம்

### பரமானந்த பாபாஜி பேசியதில் இருந்து புரிந்ததை பகிர்ந்தேன்