Life is always a puzzle and strange for few
It makes to look up the sky with exclamation
whenever it reveals its puzzles. One such recent incident , how a poem has
discovered me again after 12 + years.
It was written by me in 2000 or 2001, I go in
tamil to add the spicy to my writing
thanks to swami tanamaya who initiated the process for this offering .
thanks to his grace and blessings to preserve , offer and upload
வாழ்க்கை ஒரு புரியாத
புதிர்தான். எது எப்போது எப்படி நிகழும் என்பதை எவராலும் கணிக்க முடியாத வேகத்தில்
ஷணப் பொழுதில் பலதை தொலைத்து விடுகிறோம் , அதே போல் சிலதை பெறவும் நேருகிறது அதுவும்
எதிர்பாராத பொழுது….
அப்படித்தான் இந்த
ஒரு தருணமும். முழுதுவமாய் அப்படியே சொல்ல நினைத்தாலும் ..............கதாநாயகன் நானேதான்,,,,,,,,,
2000 ஆ அல்லது
2001ஆ என்பது தற்போது சரியாக நினைவில்லை (பதிவேட்டுகளை பார்க்க நேர்ந்தால் கண்டுபிடித்து
விடலாம்) ஈஷா திருவிழாவிற்கு பாடகர் உன்னிகிருஷ்ணன் வந்த வருடம்,
ஒரு நாள் ஸ்வாமி
தனமயா வந்து தியானலிங்கத்திற்கு ஒரு ஆரத்தி பாடல் எழுதி தரும்படி கேட்டார். மெட்டுக்கு
வார்த்தைகளை போடுவது என்பதற்கு பெரிய கவித்துவம் தேவையில்லை. எதுகை மோனையும் அழகான
பதங்களும் அறிந்தால் போதுமானது. இங்கொன்றும் அங்கொன்றுமாக நாம் படித்தவைகளில் இருந்து
நமது மனமே எடுத்துத் தந்துவிடும்.
ஆனாலும் கொஞ்சம்
முயற்சி வேண்டும். வார்த்தைகளை கையாளுவதற்கு. அப்போது முக்கோண பில்டிங்கில் அனைவரும்
இருந்தோம். அவர் எப்போதுமே ஒரு பீடிகையோடும் நம்மை பற்றி ஒரு புகழ்வோடுமே நாராயண போடுவார்.
நாரதர் கலகம் நன்மையில்
முடியும் என்பதைப் போல , நம்மை அல்லது நமது திறமைகளை புகழ ஆரம்பித்தாலே நமக்கு அடுத்த
பணி தருவதற்கு சித்தமாகிவிட்டார் என்று அந்த அழகான பக்தரை அற்புதமாக ரசிக்க ஆரம்பித்து
விடலாம்.
ஸ்வாமி தனமயாவை
பக்தர் என்கிற ஒற்றைச் சொல்லில் அடக்கி விடமுடியாது. சமயோசிதமும் புத்தி கூர்மையும்
சமஅளவு கலந்து பிரயோகிக்கும் போது எதிராளி வீழ்ந்தே ஆகவேண்டும். அதுவும் அவரது அன்போடு
கலந்து வரும் போது நாம் வாலி முன் நின்ற கதைதான்.
அப்படி அழகான குசல
விசாரிப்புக்களுக்கு பிறகு , தியானலிங்கத்தை பற்றி ஜெயஜெகதீச ஹரே என்கிற வட இந்திய
ஆரத்தி மெட்டில் ஒரு கவிதை எழுதித் தரவேண்டும் என்று என்னை கேட்டார்.
கவனிக்க. அவர்
என்னை அணுகும் நிலை ஏற்பட்டு விட்டதென்றால் நல்ல கவிஞர்கள் அனைவரும் அவருக்கு கைவிரித்து
விட்டார்கள் அல்லது அவரால் அப்போதைக்கு அணுக முடியாத சூழல் என்று பொருள். என்னை கட்டிப்
போடும் மந்திரத்தை அவர் நன்கு அறிந்தவர்.
சத்குருவுடனான
அவரது அனுபவங்களோடு அவர் எழுதச் சொன்னதாக கூறினார். இவர் சத்குருவிற்கு இப்படி
ஒரு பாடல் எழுதி நாத ஆராதனையில் பாடலாமா என்று கேட்டு இருப்பார். அல்லது சத்குருவே கூட இவரிடம் அப்படி சொல்லியிருக்கவும் வாய்ப்பும் உண்டு (அது நாத ஆராதனைக்கு
முந்தைய காலம்)
2001 ஆகஸ்ட் மாதத்திற்கு
பிறகே நாத ஆராதனை துவங்கப் பட்டது. அதற்கு முன்னர் வரை தியானலிங்க திருக்கோயிலின் ஆஸ்தான பாடகர் நாமதான். (அது
எப்படி ஆனேன் அதை பிறகு சொல்றேன் , அதுதான் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் துவக்கம்)
அமாவாசை மற்றும்
பௌர்ணமி தினங்களில் உச்சி வெயில் தலைக்கு மேலே நின்று மண்டையை பிளக்க முற்படும் போது
தியானலிங்க சர்வேஸ்வரன் என்னிடம் தப்ப முடியாது என்கிற ஒரே காரணத்தால் எனது அன்பில்
சிக்கி தவிப்பார்.
எங்கள் குழுவில்
வரும் விநாயகரும் , சுப்ரமண்யரும் இதர கடவுள்களும் அவரை பாடாய் படுத்து விடுவார்கள்
என்றே நினைக்கிறேன் . ஆனால் சத்குரு முன்னால் யாரவது எதாவது சொல்லமுடியுமா அல்லது செய்ய
முடியுமா ?
மனிதர்களின் முட்டாள்தனத்தினால்
மட்டுமே, எவர் முன்னிலையில் இருந்தாலும் சரி
, தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயற்சித்து மற்றவரை அவமானப்படுத்துவதாக நினைத்து
தம்மையே அவமானப் படுத்திக் கொள்ள முடியும். மற்றவை எவையானாலும் சரி சத்குரு முன்னால்
செயல்படாது அமைதியாக அமர்ந்திருக்கும்.
சில சமயம் அத்தகைய முட்டாள்தனங்கள்தான் அழகான விஷயங்களை உலகுகிற்கு பரிசளிக்கின்றது, சரி விஷயத்திற்கு வருகிறேன்.
அப்படி குழந்தைத்தனமான
பக்தியோடு ஸ்வாமி தனமயா தன் இறைவனுக்கு செலுத்த நினைத்த காணிக்கைக்கு என்னை கருவியாக்க
திருவுளம் கொண்டார். எனக்கு அப்பாடல் தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாத வகையில்
தன்னுடன் உன்னி கிருஷ்ணன் பாடிய ஒரு ஒலிப் பேழையை எடுத்து வந்து திணித்து , இதை மீண்டும்
மீண்டும் கேளுங்கள் அதன் பின் தங்களுக்கு தோன்றுகிற வார்த்தைகளை வைத்து எழுதிக் கொடுங்கள்
என்று கூறினார்,
இவை அனைத்தையும்
விட சத்குரு இப்படி ஒரு பாடலை எழுதச் சொல்லி உள்ளார் என்கிற செய்தியே எனக்கு பேராணந்தம்
கொடுத்தது. அதுவும் என் முயற்சியிலா …. என்று நினைக்கையிலேயே நான் மூவுலகமும் என் காலடியில்
இருப்பது போல் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக எழுதி
பாடி காண்பித்தேன். தேனைக் ருசித்த வண்டினைப் போல ஸ்வாமி ஆனந்தமடைந்தார். அனைவரோடும்
அந்த ஆனந்தத்தையும மறவாது பகிர்ந்து கொண்டார். அந்த சிவராத்திரியில் எங்களது பஜனைக்
குழுவின் மூலம் சிவராத்திரி சபையில் சத்குரு அதை அரங்கேற்றம் செய்யச் சொன்னதாக ஸ்வாமி
சொன்னபோது மிகுந்த ஆனந்தமடைந்தேன்.
அதற்கான முயற்சிகளை
அனைத்தும் அவரே முன்னின்று நிகழ்த்தினார். ஆனால் சத்குருவின் அருளுரை அதிக நேரம் எடுத்துக்
கொண்டமையால் இறுதி நேரத்தில் நேரமின்மை காரணமாக எங்களது கட்சேரியை முடித்துக் கொள்ள
ஓலை வந்த காரணத்தால் ஆரத்தியை அரகேற்றம் செய்ய முடியாது போனது எங்களை விட ஸ்வாமிக்கு
அதிக வருத்தமே.
அதைத் தொடர்ந்து
அடுத்த ஈஷா திருவிழாவிற்கு பாடகர் உன்னி கிருஷ்ணனே வந்த போது அவரிடமும் முயற்சித்தார்.
ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பை தர இறைவனுக்கு மனமில்லை போலும். பாடுகிறேன் என்று சொன்ன
அவர் பாடாமல் சென்று விட்டார்.
அதன் பின் இருவரும்
மறந்தே போய்விட்டோம். வாழ்க்கையின் போக்கில் நான் ஆனந்தமாக சென்று கொண்டிருந்தாலும்
அவ்வப்போது இதன் சில வரிகள் என் மனதை ஆக்ரமிக்கும். அன்றைய காலத்தில் எனது நட்புக்களிடமும்
இன்னும் சிலரிடமும் இதை பகிர்ந்து வைத்திருந்தேன். எப்போதோ ஒரு முறை எனது மெயிலிலும்
சேகரித்து வைத்திருந்ததாக ஞாபகம்.
ஆனால் இதுவரை எவ்வளவு
தேடியும் அது கிடைக்க வில்லை. வெகு சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு எனது பழைய கவிதை
தொகுப்புகளை மீண்டும் தேட ஆரம்பித்த போது அதில் இந்த பொக்கிஷம் மீண்டும் கிடைத்தது,
அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. ஆனால் பகிர்ந்து கொள்ள ஸ்வாமி தனமயா வெகுதூரத்தில்….
அதற்கேற்றார் போல
அடுத்த நாள் ஒரு மகானின் அதிஷ்டானத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அதுவும்
எப்படிப் பட்ட ஒருவர். அவர் தம் காலடி பட்ட அந்த இடத்தை என் கால்கள் தொட்டு வணங்ககூட
தகுதியில்லை. அந்த மகானின்
முன்னால் நானே இதை பாடி அரங்கேற்றம் செய்யும் வாய்ப்பு பெற்றேன்.
அதற்காக இந்த பாடல்
சுமார் 12 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றது என்பதை அறிய நேரும் போது நெக்குருகி நிற்கிறேன்.
அதன் எழுத்து வடிவமும் ஒலி வடிவமும் இத்தோடு இணைத்துள்ளேன். பாடி மகிழுங்கள். பரவசம்
பெறுங்கள்.
நன்றிகள் ஸ்வாமி
தனமயாவிற்கு.
நன்றிகள் அவரது திருவடிகளுக்கு.
இதை யூடுயூப்லயும் அரங்கேற்ற வாய்ப்பளித்த அந்த தயாளனுக்கும் நன்றிகள்
for video and audio pls visit the link
ஆரத்தி
ஒம் குரு சத்குருவே
சச்சிதானந்த சதாசிவனே
சரணம் என்றடைந்தேன் உன்னை (2)
சன்னதி எனக்கருள்வாய்
சத்குரு சதாசிவனே
(1)
பிரணவமாய் நிறைந்தவனே--- எந்தன்
சம்போ சங்கரனே
பிரம்மத்தை நானும் உணர்ந்திட அருள்புரி (2)
யோகத்தின் முதல் குருவே
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (2)
மௌனத்தில் மலர்ந்தவன் தியானத்தை தருபவன்
குருவென அமர்ந்தவனே – ஞான
மாய வினோதங்கள் மனதில் அகன்றிட (2)
ஜோதியாய் எழுந்தருள்வாய்
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (3)
கணங்களின் அதிபதி குணங்களை கடந்தவன்
மனத்தினில் மலர்ந்தவனே – எந்தன்
சரணம் என்றடைந்தேன் உன்னை (2)
தஞ்சமே தயாநிதியே
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (4)
உள்ளோளி சுடரென உண்மையின் பொருளென
நாதமாய் ஒலிப்பவனே – பொங்கும்
வேதங்கள் யாவும் போற்றிடும் உன்னை (2)
பணிந்தேன் பரமேஷா
தியானலிங்கமாய் ஒளிர்ப்பவனே (5)
யோகத்தின் கலையென தியானத்தின் நிலையென
உணர்வினில் வந்தவனே – எந்தன்
யுகங்களின் தவமாய் மலர்ந்திட்ட உன்னை (2)
முழுமையாய் உணரச் செய்வாய்
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (6)
சேவைகள் புரிந்திட தேவைகள் நிறைந்திட
குருவென வந்தவனே – அருள்
எந்தனின் இதயம் வாகனம்தானே (2)
ஏறிட மனமில்லையோ
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (7)
தானென தந்தென ஜண்டைகள் ஒலித்திட
ஆடிடும் கூத்தரசே – என்னுள்
தாண்டவமாடிட நீ எழுந்தருள்வாய் (2)
தருணமே தயாநிதியே
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (8)
எல்லைகள் கடந்தவன் எம்மினுள் மலர்ந்தவன்
உயிரினுள் கலந்தவனே – எந்தன்
அர்ப்பணமாய் என்னை அணிந்து மகிழ்ந்திட (2)
ஆரத்தி ஏற்றுக் கொள்வாய்
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (9)
ஒம் குரு ஜெயகுருவே
சச்சிதானந்த சத்குருவே
சரணம் என்றடைந்தேன் உன்னை (2)
ஆரத்தி ஏற்றுக் கொள்வாய்
தியானலிங்கமாய் ஒளிர்பவனே (10)
ஒம் குரு சத்குருவே
சச்சிதானந்த சதாசிவனே
சரண கமலத்தை நமஸ்கரித்தேனே (2)
சன்னதி எனக்கருள்வாய்
சத்குரு சதாசிவனே
(1)
for audio and video pls visit youtube page