Saturday, 22 March 2014

இமயத்தில் இமயத்தோடு இணைந்த ஒரு பயணம்

பயணங்கள் சுகமானவை , பயம் தருபவை கூட , அடுத்து என்ன என்பதையே அறியாதவை

நினைவு மலர்களுக்கு  மத்தியில் நிம்மதியும் ஆனந்தமும் நொடிகளுக்குள்ளும் அதன் விநாடிகளுக்குள்ளும் என்னை என்னுள் பயணிக்க வைக்கின்றன

ஏராளமான மனிதர்கள் அவர் தம் தந்த நொடிகள் என்னுள் , அவர்களில் சிலர் இறந்த பின்னர் கூட தான் இறக்காது என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன

ஆனால் அதை பற்றி எல்லாம் சிந்திக்க கூட நேரமின்றி வேகமாக பயணித்துக் கொண்டே இருக்கிறேன் , பயணத்தின் போதே கண்களும் , காதுகளும் 
சுற்றுப்புறத்தை பதிவு செய்வதைப் போல நினைவுகளும் தனது பதிவுகளில் இருந்து எதையாவது கிளறிப் போட்டுக் கொண்டே இருப்பதை நான் கவனிக்கிறேன் ஆனால் இவை அனைத்திற்கும் சம்பந்தமில்லாது நானும் எனது பயணமும் தொடர்ந்து

அது நிற்பதற்குள் அடைந்து விட வேண்டூம் என்கிற வேகம் அல்லது அது நின்ற பிறகு இந்த நினைவுகளில் ஏதேனும் மிச்சமிருப்பின் அதை பகிர்ந்திட யோசனை

முகநூலில் பலரது எழுத்துக்களை அவர்தம் பார்வைகளை படிக்கும் போது ஒன்று தெளிவாக புரிகிறது . எத்தனை படித்தாலும் எத்தனை எழுதினாலும்  எல்லாம் ஒரு சுவாசத்தோடு நின்று விடும். 

அப்போது கூட ஒன்றையாவது முழுமையாக படித்தவனோ அல்லதை படித்ததை எழுதியவனோ இருப்பானோ என்பது என் சிற்றறிவில் சந்தேகமே எழுத முற்படும் போது எழுத்தையும் என்னையும் கூட சேர்ந்து புடம் போடுகிறது. கண்டதை , கேட்டதை பகிர்ந்து கொள்ள முடிகிறது. 

படிப்பவனைக் காட்டிலும் எழுதியவனே அதிகம் பலன் பெறுகிறான். எண்ண ஓட்டமும் சுவாசக் காற்றும் கூட சீராகிப் போகிறது .
அப்படி எழுத நம்முள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் . பயணம் தொடர்ந்தாலும் உள்ளும் புறமும் கவனமும் விழீப்பும் கூட தொடர வேண்டும்.

அப்படி ஒரு காலகட்டத்தில் என்னுள் நானாக , எனக்கு நானேயாக இருக்க வேண்டி அனைத்தோடும் தொடர்ப்பில் அதே சமயம் எதனோடும் தொடர்ப்பின்று தனித்து …

பயணம் அழகானது. பயணத்தின் போது பார்வை காட்சிகள் மாறுகின்றன. பிரதேசங்கள் மாறுகின்றன. ஒவ்வொன்றிற்கும் ஏற்ப நாமும் மாற வேண்டி , புறச்சூழலில் நதியாய் பயணிக்கும் வேகத்தில் அகச்சூழலில் அமைதியாய் இமயம் போன்று ஸ்திரமில்லாது ஸ்திரமாய்

வெளிப்படுத்த எத்தனையோ இருப்பினும் அத்தனையும் புறந்தள்ளி அமைதியாய் நொடிகளை கடந்து விநாடிக்குள் புகுந்து மறைந்து மறுபடி பிறக்கிறேன்

நினைவுகள் உள்ள வரை நீங்களும் இருப்பீர்கள் உங்களுக்கான எனது நன்றிகளும் அன்பும் கூட மாறாதிருக்கும் ஆனால் நான் மாறி இருப்பேன்.

நீங்கள் சுவாசிக்கும் காற்றில் என் சுவாசமும் கலந்திருக்கும். உணரும் போது அமைதியும் அதன் பின்னால் உள்ள நாராசமும் கூட இணைபிரியாது கலந்திருக்கும்,

வார்த்தைகளின் இடையில் மௌனத்தையும் , மௌனத்தின் வெளியில் வார்த்தை நட்சத்திரங்களையும் இரவாய் நீங்கள் இருக்கும் போது காண்பீர்கள்.

வெளிச்சமாய் விரியும் போதோ வெப்பமாகவும் சப்தங்களாவும் எதிரொலிப்பதை காண்பீர்கள்.

சமயம் கிடைக்கும் போது வாழ்க்கையின் சில நொடிகளை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .