Monday, 4 December 2017

Turn the page and learn the work

டிசம்பர் 5
அது 1990ம் ஆண்டு
இந்தியன் வங்கியின் சிங்காரப்பேட்டை கிளையில் முதன் முதலாக வருகை பதிவேட்டில் கையெழுத்து இடுகிறேன்.
சங்கர்லால் , மணிவண்ணன் , ராஜகோபால் ஆகியவர்களோடு நான்காவது குமாஸ்தாவாக
ராமலிங்கம் உதவியாளராகவும் எப்போதும் புன்னகைக்கும் தங்கமணி தற்காலிக ஊழியராகவும் இருந்தார்கள்

அங்கிருந்த புகழ் பெற்ற அய்யர் ஹோட்டலில் காலை உணவு எடுக்கச் செல்லும் போது எமெனேரும் வாகனமாம் எருமை மாடு மிரண்டு வந்து தூக்கி வீசியிருந்தது. கிரிக்கெட் பயிற்சி (விக்கெட் கீப்பரும் கூட )அதன் கூர்மையான கொம்புகளை திசை திருப்பியதால் குடல் கிழிபடலில் தப்பித்தேன். தூக்கி வீசியது என்னைத்தான் என்றாலும் நால்வராக சென்ற நாங்கள் ஆளுக்கொரு திசையில் பிரிந்திருந்தோம்.

பின் அலுவலகத்திற்கு வந்து தனகோடி எனும் மேலாளர் முன்னிலையில் கையெழுத்துப் படலம் .

இன்னுமொறு அலுவலரும் இருந்தார் அவரும் தஞ்சாவூர் காரர். அவரும் ராஜகோபாலும் பாங்க் ஆஃப் தஞ்சாவூரில் இருந்து இணைந்தவர்கள்.

எல்லோரும் சூழ்ந்திருக்க கையெழுத்து போட தயாராகிறேன்.

இருப்பா . பகவான வேண்டிகிட்ட மொத கையெழுத்தை போட ஒரு சேர சங்கர்லாலும் ராஜகோபாலும் சொல்ல.
ஒரு ஷணம் இதுகாறும் என் வாழ்வில் பயணித்த அனைவருக்கும் கண்களை மூடி நன்றிகளை கூறினேன்.

பணக்காகிதங்களை சேமிக்கவே தெரியாத எனக்கு சேமிப்பு கணக்கில் இடம் அளிக்கப்பட்டது.  ராஜகோபால் . சங்கர்லால் , மேலாளர் தனகோடி , ராஜகோபால் ஆகியோர் ஒரே வயதுடையோர். (40+)

சங்கர்லால் விமானப்படையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அற்புதமான மனிதர். சர்குலர் (சுற்றறிக்கைகள் )எது வந்தாலும் தவறாது படித்து தனது அறிவை ஆழமாக்கிக் கொள்பவர்.  கிரிகெட் , பாட்மிட்டன் , ஷட்டில் என மைதான விளையாட்டுகளில் ஆர்வம் . இரு பெண் குழந்தைகளின் தந்தை.

ராஜகோபாலுக்கு இங்கு மாற்றலாகி வந்த பிறகு அவரது மனைவி கருவுற்றிருந்தார்கள் கடைசி வரை இங்கேயே வாழ்ந்துவிட்டார்

மணிவண்ணனுக்கு ஒரிரு மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்திருந்தது.

ஆக இருக்கையில் அமர்ந்தேன். பக்கத்தில் ராஜகோபால். அவருக்கும் எனக்கும் பார்த்தவுடன் பிடித்துப் போனது வகை. காரணம் அவர் ,நான் , அலுவலர் காவிரி கரை பழக்கம் உடையவர்கள். ஒன்றுமில்லை கும்பகோணம் கொழுந்து வெத்தலைதான்.

மேலும் புகையிலை சேர்க்காதவர்களும் கூட...

என்ன படிச்சிருக்க ?
அக்கவுன்ட்ஸ் படிச்சிருக்கியா ? இது ராஜகோபால்

சார் ஈவினிங் காலேஞ்தான் . கணக்கு மெயின் . அக்கவுன்ட்ஸூம் உண்டு. எப்படியோ ஒருதடவை அரியர் வைச்சி பாஸ் போட்டுட்டாங்க.

அதென்ன பாஸ் போட்டுடாங்க .

கரெக்டா 35 வாங்கினா போட்டது தெரியாதா சார் .

வெடிச்சிரிப்பு மத்தப்பாய் அனைவரும் இணைந்தனர்

பரவாயில்லை ஜோக்கா பேசறயே.

உண்மை பேசறதே ஜோக்காகி போன இத்தேசத்தில இப்படியாவது சந்தோஷமா இருப்போமே சார்.

சரி சொல்லு செக் , டிமாண்ட் டிராப்ட் , கிரிடிட் , டெபிட் இதாவது தெரியுமா ?

இன்டர்வியூலயே இதெல்லாம் தெரியாதுனு சொல்லிட்டேனே. டிரியினிங் கொடுத்தா கத்துகுவேன் அப்படினு சொன்னேனே. அவங்க இங்க பிராஞ்சுக்கு தகவல் சொல்லலையா சார். அப்பாவியாய் நான்.

மறுபடி சிரிப்பு. சரி கவுண்டர் டைம் ஆகுது. நான் சிம்பிளா ஒன்னு சொல்லி தர்றேன். சந்தேகம் வந்தா கேளு.

பணம் எடுக்க வந்தா லெட்ஜர்ல இந்த பக்கம் எழுது

பணம் போட்டாங்கன்னா இந்த பககம் எழுது. இதுக்கு நேர்மாறா அவங்க பாஸ்புக்ல எழுது.

இவ்வளவுதானா . இதுக்கு எதுக்கு சார் அத்தனை டிபிட் கிரிடிட் எல்லாம். தமிழ்ல பாருங்க எவ்ளோ சுலபமா இருக்கு. கேட்டது இன்னமும் நினைவில்

முக்கியமா சந்தேகம் வந்தா , கேட்கறதுக்கு முன்னாடி பக்கத்துல இருக்கற அக்கவுண்டல நாங்க எழுதியிருக்கறத பாரு. அதுவும் புரியலன்னா அப்புறம் கேளு.

ட்ர்ன் த பேஜ் லேர்ன் த வொர்க்

ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டு போயிட்டீங்க ராஜகோபால்

உங்க கிட்ட சொன்ன மாதிரியே வங்கியோ , ஈஷாவோ எங்கயுமே இவரை வைச்சி என்ன பன்றதுனு யோசிக்கறதுக்கு முன்னாடி (சரியான சமயத்துவ டென்டுல்கரும் நினைவு படுத்தினார் ) ரிசைன் (நிறைவாய் நிறைந்து வெளியே வந்துட்டேன் சார் ) பண்ணிட்டேன் சார்

இதோ அடுத்த ஒரு இலக்குக்கு இன்னும் இரண்டு வருசம் இருக்கு. 50 வயது வரை ஏதோ ஒரு வகையில் யாருக்கேனும் பரோபகாரமாக இருப்பேன் அதன் பின் எனக்காக மட்டுமே என் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் கொண்டாடிக் கொண்டு அடைந்த நிறைவை பரிமாறிக் கொண்டு என்கிற என் கனவு.

இன்னும் எனக்கு எதுவும் தெரியாது.
அதனால்தான் உங்கள் வாசகம் உயிரோட்டமாய்.

அன்று லெட்ஜரை திருப்பி பார்த்து கற்றுக் கொள்ள கற்று கொடுத்தீர்கள். அதை விளையாட்டிற்கும் அங்கிருந்து வாழ்க்கையிலும் கூட விரிவு படுத்திக கொண்டேன் யான்.

அதை பார்த்து ஆனந்தப் படுவதற்குத்தான் தாங்கள் இவ்வுலகில் இல்லை.

இந்த நாள் இனிய நாள்

இதையும் எழுத வாய்ப்பு தந்த நாள்

No comments:

Post a Comment