Tuesday 29 October 2013

sharing the poem of kavingar Ramanan - from his fb post

எங்கே நின்றுகொண்டிருக்கிறேன்?

மரணத்தின் தறுவாயா?
மரிக்கவிடாமல் சித்திரவதை செய்யும்
சீரழிவின் தறுவாயா? “நீ
கரணமிட்டது போதும்! என்
காலடியில் வந்து சேர்,” என்னும்
கடவுளின் தறுவாயா?
“சீட்டைக் கலைத்துப் போட்டால்தான்
ஆட்டம் தொடர முடியும்” என்று
சிரித்தபடித் தீர்ப்பெழுதும்
குருவின் தறுவாயா?

எங்கே நின்றுகொண்டிருக்கிறேன்?
எங்கோ நின்றுகொண்டுதானிருக்கிறேன்
நிலைவாயில்களில் சில
உலைவாயாக இருக்கலாம்
ஊர்வாயாக இருக்கலாம்
உயிரைப் பருகும் வாயாக இருக்கலாம்
ஒரு வெட்ட வெளியைத் தொட்டுக் காட்டும்
குறியீடாகவும் இருக்கலாம்

இங்கே
நின்றது நான்தான் என்றாலும், என்னை
நிறுத்திவைத்தது யார்?
என்று கேட்பதற்கு
எனக்கு இன்றும் உரிமையுண்டு

உயிரும் உடலும் உள்ளும் மனமும்
ஒன்று கூடிப் பழக உலகமும்
பல்கிப் பெருகும் பற்பல சுவைகளும்
படைப்பதும், கதவை
அடைப்பதும், ஓட்டை
உடைப்பதும், பறவை
விடைபெற்று உன்றன்
வீடு சேர்வதும்
எல்லாம் உன் செயலன்றோ?

எந்தன் சிந்தனை எந்தன் செய்கை
என்பதாக எதுவுமே இல்லையே!
அத்தனையும் உனது!
அனுபவம் மட்டும் எனது
அது புரியும்போது, உன்னில்
அடங்கிப் போகும் மனது!

சந்தேகிக்காதே!
கடமையிலிருந்து நழுவுவதற்கோ
சட்டங்களினை மீறுவதற்கோ
சாக்குச் சொல்லும் தத்துவம் இல்லை!

சிந்தனையும் செயலும்
உனதே உனதே என்று ஒப்புக்கொள்
எந்த விளைவையும் இப்போதும் கூட, நீ
தந்த பரிசென்றே தாங்கித் தணிகிறேன்

உன்னிடமிருந்து
என்னவேண்டும் எனக்கு
உன்னைத் தவிர?

இன்பம் துன்பம் என்று நிலைமாறும்
அத்தனை அனுபவங்கள் மூலமும்
உன்னைத்தானே பருகிக்கொண்டிருக்கிறேன்
என்
உயிர் உதிர உதிர.


written by கவிஞர் ரமணன் --shared from his fb post

No comments:

Post a Comment