Sunday 22 December 2013

விலை -- வாழ்வின் ஒரு ஷணத்திற்கு

நாம் பெறுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாவோ ஏதோ ஒரு விலை தரத்தான் செய்கிறோம். விலையின்றி இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைத் தவிர….. அதற்கு கூட அடுத்த 5 ஆண்டுகளுக்கு விலையை சமர்ப்பிக்கின்றோம் . ஆனால் பெரும்பாலோனர்களுக்கு தாங்கள் அளித்த அல்லது அளிக்கும் விலையை குறித்த கவனமில்லை ,

அப்படியே இருந்தாலும் அந்த விலைக்கான மதிப்பு அந்த பொருளிடம் இருக்கிறதா என்பது தெரியவே தெரியாது. வெகுசிலரே விலையின் மதிப்பையும் பொருளின் மதிப்பையும் எடை போடுகின்றனர். இத்தகையோர் மிக மிகச் சிலரே. அவர்களுக்கும் கூட தாங்கள் அளிக்கும் விலைக்கு சமமான விலை மதிப்பு மிகுந்த பொருள் கிடைப்பதில்லை. அதனால் ஒரளவு சில மாற்றுக்கள் குறைந்திருந்தாலும் அதன் மூலம் தங்களை பரிமாறுகின்றனர்.

இதோ இன்று இரவு 9 மணிக்கு எனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு டிவி பெட்டியில் அதுவும் நல்ல விதமாகவே தோன்றுகிறேன். ஆம் டிஸ்கவரி சேனலில் நிஜமாலுமே உலகளாவிய நிலையில் முதல் முறையாக ஒளிப்பரப்பாகும் அவர்களது குறும்படத்தில் நானும் வருகிறேன். என் ………கதையை கூறுகிறேன்.

கேதார்நாத்தில் ஏற்பட்ட பிரளயம் என்னிடம் நேரத்தையும் வாழ்க்கையையும் மட்டும் விட்டு விட்டு மற்றவை அனைத்தும் என் கரங்களுக்கு அப்பால் கொண்டு சென்ற தருணம் அது. அடுத்து என்ன? எங்கு ? எப்படி? எப்போது ? என எதுவும் அறியாவிட்டாலும் ஆனந்தமாய் அர்பணிப்பாய் நொடிகள் கொண்டு வந்தததை செய்து கொண்டிருந்த காலம் அது.

அப்போதுதான் குப்தகாசியிலிருக்கும் எனது நண்பர் ஓஸ்வால் அவர்களின் தொலைபேசி அழைப்பு , நலம் விசாரித்தலுக்கு பிறகு டிஸ்கவரி சேனலுக்கு கேதார்நாத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றத்தை குறித்து அவர்கள் எடுக்கப் போகும் படத்திற்காக என்னை பற்றிய தகவல்களை தந்துள்ளதாக கூறி , தங்களுக்கு அழைப்பு விரைவில் வரும் , கலந்து கொள்ளச் சொன்னார். அந்த உரையாடல் முடிந்த சில ஷணங்களில் டெல்லியில் டிஸ்கவரி சேனலில் இருந்து என்னை பற்றிய தகவல்களை கேட்டறிந்து உறுதி செய்தார்கள்.

சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட அனுபவத் திவலைகள் கேட்ட அவர்களுக்கும் கண்களை குளமாக்கியிருந்தது. இதோ இன்னும் பல அனுபவஸ்தர்கள் மற்றும் தொழிற்நுட்ப வல்லுனர்கள் , இயற்கை ஆர்வலர்கள் என அனைவரின் கருத்தோடு எனது அனுபவத்தை தொடர்ப்பு படுத்தி இன்று இரவு 9 மணிக்கு வெளியிடப்படப் போவதாக …………

சமீபத்தில் பார்த்த சுனாமி பற்றிய கொரிய மொழி திரைப்படமும் சரி, லைப் ஆஃப் பை ஆனாலும் சரி இரண்டையுமே என்னால் ஒரு திரைப்படமாக காணவே முடியவில்லை. நிச்சயம் அத்தகைய சூழல்களில் அதுவும் தண்ணீரோடு இல்லாத கணங்களில் , நிலத்தில் வாழுபவர்களுக்கு நிச்சயம் உணர முடிவதேயில்லை.

கடல் தண்ணீர் உப்பு கரிக்கும் என்றால் கங்கையின் நீரோ ஐஸ் உருகியதுதான். அதில் நிலச்சரிவால் ஏற்பட்ட மண்ணும் டன் கணக்கில் சேர்ந்தால் ,,,,,,,,,,, டன் கணக்கில் உள்ள மிகப் பெரிய பாறைகளே மிதந்து வரும் அளவு நீரின் சக்தியும் வேகமும் இருக்குமானால் ………. எந்த அனிமேஷனும் இதை விவரிக்கவே முடியாது.

உயிர் பிழைத்திருப்பதும் உயிரை நொடியில் சமர்ப்பித்ததும் இரண்டுமே தெய்வாதீனம்தான். அதுவும் கேதார்நாத்தில் தெய்வத்தின் அருளாலேயே இரண்டும் நிகழ்ந்தன. பிரளயத்திற்கும் தெய்வத்திற்கும் சம்பந்தமில்லை , இதை என் காரண அறிவு கொண்டு , என் ரிலேடிவிடி தியரி மூலம் செயல்படும் மனதைக் கொண்டு என்னால் இப்படித்தான் பேச முடியும் என்றுணர்ந்தாலும் ………….. இதையே உண்மை என்று கூற முடிகிறது.

இறக்கும் தருவாயில் இறந்து போன மனிதர்களின் கடைசி ஓலத்திற்கு முன்பாக வந்த ஒலியும் சரி , பிழைத்தால் போதும் என்று தொங்கிக் கொண்டிருந்து ( என்னைப் போன்ற ) பின் பிழைத்தவர்களின் அந்த நேரத்து ஒலியும் சரி இரண்டும் ஒரு சேர கேதாரநாதனுக்கே ஜே போட்டன.

மரணத்தின் வாயிலில் மரணத்தை தருகிறவனை போற்றிட மனதுக்கு துணிவும் பெருந்தன்மையும் பயமின்மையும் நிச்சயம் வேண்டும். அதை அவர்கள் இறையருளால் பெற்றிருந்தார்கள் .

அப்படி எண்ணற்ற மனிதர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து என் வாழ்வை ஒரு நிலைக்கு கொண்டு வந்து உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இந்த தருணம் அவர்களது திருவடிக்கு சமர்ப்பணம். இந்த தருணம் அவர்களது பக்திக்கு சமர்ப்பணம். இந்த தருணம் உயிர் பிழைத்திருக்கிறார்களா இல்லையா என்றே அறியாது தங்களுக்கு தெரிந்த கடவுள்களுக்கு எல்லாம் தங்கள் அறிந்த வார்த்தைகளை கொண்டு தாங்கள் அறிந்த முறையில் வேண்டிக் கொண்ட அந்த முன்பின் அறியாத அன்பு உள்ளங்களின் நேரத்தின் விலைக்கு சமர்ப்பணம்.

இதோ இன்று எனது டெல்லி நண்பர் ஷாஜகான் ஒரு மரணத்தை குறித்து எழுதியுள்ளார். இதோ நேற்று வரை உயிரோடு இருந்து இந்த 6 மாத காலத்திற்கு எனது ஒவ்வொரு படியையும் அர்ப்பணிப்போடு எடுக்க வைத்த திரு பொன்னுசாமி தியாகராஜன் ………

இவரை பற்றி சொல்லவேண்டும். திருச்சிக்காரர். சமுகசேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவர். துப்பாக்கி தொழிற்ச்சாலையில் பணிபுரிகின்றவர். தனது நண்பர்களோடு கடந்த வருடம் இமாலயத்திற்கு முதல் முதலாக வந்த போது அவர்களது தரிசனம் குப்தகாசியில் எதேச்சையாக திருவாசத்தின் மூலம் அமைந்தது.

எப்படி கேதாரத்திற்கு செல்ல அனுமதி கிடைக்குமோ என்று கேள்விகளோடு இருந்த அந்த தருணத்தில் நான் வாங்கித் தருகிறேன் என்று தேவையான விபரங்களை பெற்றுச் சென்று முயற்சி எடுக்க முனைந்தவர். இறுதியில் தேவைப்படாது போனதால் முயற்சிகளை கைவிட்டோம். முதல் முதலாக அன்போடு நம்பிக்கையும் இந்த தமிழ் அறியாத அன்னிய பூமியில் தன்னோடு சேர்த்து விதைத்தவர்,

அன்றிலிருந்து இன்று வரை அவரது அன்பிற்கு அளவில்லை. அவ்வப்போது தொடர்ப்பு கொள்வார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு இமாலய பயணத்திற்கு பேசிக் கொண்டு இருந்தோம். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகப் போகிற விஷயத்தை தனது நண்பர்களுக்கு எல்லாம் எடுத்து சொல்லி அது சம்பந்தமாக எனது சகோதரனைப் போலவே , என்னை என் ஆரம்ப கால கிராம வாழ்க்கை நிலைகளை அறிந்தவனைப் போலவே , ஆனந்தப்பட்டவர்.

என்னை டீவியில் காண்பதற்காக ஏராளமான ஆர்வத்தோடு இருந்தவர். ஆனால் ஒரு நாள் முந்தைய காலை விடியல் இப்படி அமையும் என எதிர்ப்பார்க்கவில்லை. சில காலை விடியல்கள் இப்படி அமைந்து விடுகின்றன. அதுவும் இன்று அவரது பிறந்த நாள், நேற்று முன்தினம் வரை இருந்தவர், எப்படிச் சொல்வது அல்லது எதைச் சொல்வது 

வெற்று பிம்பங்கள்தாம் நாம் , மழையின் நீர்குமிழிகள் போல எது எப்போது உடைகிறது அதை உள்ளிருக்கும் காற்று உடைக்கிறதா அல்லது வெளியிலிருக்கும் பார்வையாளர் உடைக்கிறாரா என்பது அந்த குமிழிக்கு மட்டுமே தெரியக்கூடியது , ஆனால் அது பெரும்பாலும் தெரியாமலே போய்விடுகிறது,

நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவோ அல்லது முட்டாள்தனமான ஒரு நிலையை அடையக்கூட நாம் கொடுக்கும் விலையை மறந்து விடக்கூடாது என்பதற்காகவோ இப்படி சில விலைகள் அமைந்து விடுகின்றன. அதனாலே இந்த மைல்கற்கள் மேலும் மதிப்பை பெறுகின்றன, இல்லையெனில் அவை ஒரு சாதாரண நிகழ்வுகளே,

இருந்தாலும் இவ்விலைகள் அதிகமானவைதான். அதற்காகவே அத்தகைய விலை மதிப்பில்லாத ஒன்றை பெற்றே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் ஏற்படுகிறது.

மரணத்தை  விட மரணமடைந்தவர்களின் அன்பு என்னை கலங்க வைக்கிறது. வாழ்ந்த நொடிகளின் நினைவுகள்,  நெஞ்சில் சுரக்கும் அன்பு  ஆகியவை கண்ணுக்கு ஒன்றாக இரு கண்களிலும் பொங்கி சில நிமிடங்களாவது வழிந்தோடுகிறது.

தாயுமானவனாக மாறும் இக்கணங்களில் எனக்குள்ளும் கருப்பை ஒன்று சூல் கொள்கிறது. எதிர்கால குழந்தைக்காக எனக்கும் எதோ ஒரு மார்ப்பகம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.

இப்போதெல்லாம் மார்பகம் என்னை கலவரப்படுத்துவதில்லை. மாறாக  தாய்மை உணர்வை தருகிறது. அதில் சேகரிக்கப்படும் பால் ஏதோ ஒரு காலகட்டத்தில் எங்கோ என்னை எதிர்கொள்ளும் குழந்தைகாக தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கிறது.


இந்த தருணத்தை தங்கள் உயிரை விலையாக அர்ப்பணித்து என் பயணத்தை தொடரச் செய்யும் அந்த அற்புத தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

No comments:

Post a Comment