Tuesday 28 November 2017

மாதம் 15000 போதுமானதாக இருக்க எதற்காக 25 லட்சம்

மாதம் 15000 தானே மொத்த வாடகை அதை சுமார் 15 நபர்கள் மாதம் 1000 கொடுத்தால் போதுமே.
5 வருடங்களுக்கு என எடுத்துக் கொண்டாலும் கூட மொத்தம் ரூ 9,00,000 மட்டும்தானே . எதற்கு ரூ 25 லகரங்கள் என போட்டிருக்கிறீர்கள் ? எதற்காக 2500 அன்பர்கள் ? அறியலாமா தொலைபேசியில் சென்னையை சேர்ந்த அன்பர் ஒருவர்

அந்த பதிவிலேயே தெளிவாக எழுதியுள்ளேன் ஐந்தாண்டுகள் கழிந்த பிறகும் இப்போது எடுக்கும் முயற்சிகள் தொடர வேண்டி இந்த வகையில் செயல்படுகிறோம் என்று.

குழந்தைகளுக்கான கல்விப் பணிகள் என்பது ஒரு ஐந்தாண்டுகளில் முடிந்து விடக் கூடியது மட்டுமல்ல.

துவங்குவதற்கே ஓரிரண்டு ஆண்டுகள் ஆகிப் போகலாம். அவர்களோடு பழகி அவர்கள் உலகில் நுழைந்து அவர்களுக்கான கற்கும் ஆர்வத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் தருணம் வரும் போது நாம் மூட்டையை கட்ட வேண்டிய சூழல் வருமேயானால் ... அதுவும் பொருளாதாரத்தினால் .... அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

இது நீங்கள் தந்த ஐடியாதான் என்றேன் . இதற்கான விதையே தாங்கள்தான் என்றேன்.  மிகுந்த ஆச்சரியமானார்.

ஆமாம் . சொல்கிறேன் கேளுங்கள்.

கடந்த இரு வருடமாகவே , குறிப்பாக கடந்த 6 மாதங்களாக உடல் ஆரோக்கியம் (விளையாட்டில் அடிபட்ட முதுகு தண்டு பிரச்சினைகள் என்னை முடக்கிய போதும் , எதிரும் புதிருமான சீதோஷண நிலை , கடல் மட்ட உயரங்களுக்கு யாத்திரை காலத்தில் சேவை பணிக்காக இடைவளியின்றி பயணித்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் ) அடிக்கடி சீர்குலைய ஆரம்பிப்பதால் யாத்திரை காலத்திலும்  என்னை ஓரிடத்தில்  நிலை நிறுத்த பலவிதமாய் வலியுறுத்தியது மறந்திருக்க மாட்டீர்கள் என்றேன்

ஆமாம் .

தற்போது மிகுந்த சிரமத்திற்கு இடையில் இந்த வீடு கிடைத்திருப்பதை கூறிய போது வாடகை பற்றி யோசிக்காது உடனடியாக முடிக்கச் சொன்னீர்கள்.

அதற்கு தகுந்தாற் போல வாடகையின் சிறு பகுதியை பகிர்ந்து கொள்ள தங்களோடு இணைந்து மேலும் ஒருவர் இணைந்துள்ளார் என்ற போதும் இன்னும் இரண்டு மூன்று நபர்களை சேர்த்திடலாம் என்றீர் இல்லையா .

ஆம் என்றார்.

அதன் பிறகே உரிமையாளருக்கு தகவல் கூறப்பட்டது. கால அவகாசமும் பெறப்பட்டது. 

இந்த நிலையில் அன்று மாலை இன்னொரு பகுதியையும் வாடகைக்கு விடப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார் என்ற போது ,  கேதார் அடியார் சங்கம் சார்பாகவோ அல்லது கேதார்நாத் சேவா சமிதி சார்பாகவே  ஏன் நாமே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டீர்கள்

விருப்பம் கொண்ட நபர்களாயினும் , குடும்ப மற்றும் அலுவலக பொறுப்புக்களை கடந்து பொதுச் சேவைக்காக ஒரு குழுவாக இயங்கும் பொழுது , அதுவும் அரசு விதிகளை சரியான முறையில் கடைபிடித்து சரியான நிர்வாகத்தை உருவாக்கிட ஆகும் காலத்தை பற்றி , நடைமுறையில் நிதானமாக செயல்பட வேண்டியிருப்பதை பற்றி கூறினேன் .

இந்த நிலையில் அவர்கள் குழுவாக இயங்குவதில்  ஏற்கனவே ஒப்புக் கொண்ட பணிக்கே ஆகும் காலத்தை அருகில் இருந்து கவனித்து கொண்டிருக்கும் போது , எப்படி அவர்களுக்கு மேலும் அழுத்தம் ஏற்படும் வகையில் என்னால் செயல்பட இயலும் என்பதை கூறிய போது ஒப்புக் கொண்டீர்கள்

ஆம் அதிலென்ன சந்தேகம் ஆனால்
அந்த இரண்டாவது பகுதியும் கிடைக்கப் பெற்றால் நாம் ஏதாவது சேவையும் செய்ய வாய்ப்பு கிடைக்குமே என்றீர்கள் . உடனே உங்களுக்கு பிடித்த அன்னதானம் பற்றி பேசினீர்கள்

ஆனால் உங்களோடு பேசி முடித்த பிறகு இந்த சிந்தனை தொடர் ஒட்டமாகிப் போனது எனக்குள்

குறைந்த பட்சம் ஒரு சிறிய நூலகம் உருவாக்கலாம். அல்லது இடம் இருப்பதால் விருப்பப் படும் தன்னார்வ தொண்டர்களில் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து அவருக்கு உகந்த காலத்தில் சில வாரங்கள் வந்து தங்க அழைப்பு விடுக்கலாம். அப்படி தங்கியிருக்கும் பொழுது அருகிலுள்ள கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இதர பாடங்களில் சிறிதேனும் வழிகாட்டலாய் சில விதைகளை விதைக்கலாம்

ஆனால் ஒரு முயற்சியை தொடங்கி விட்டு தொடர முடியாமல் போனால் என்ன செய்வது. ஏற்கனவே கூறிய படி அறக்கட்டளைகள் தயாராக இன்னும் சில வருடங்கள் ஆகும்

அதனால்தான் இப்படி ஒரு யோசனை உதித்தது. ஒருவேளை மாதந்திர வாடகை என்பதை வங்கியிலிருந்து வரும் வட்டியில் இருந்து செய்தால் குறைந்த பட்சம் எத்தனை வருடமாயினும் தங்களது நம்பிக்கையும் உழைப்பும் வீணாகாதே.

நான் குறைந்த பட்சமாக ரூ 1000 என்றேன். அவரவர்கள் இயன்றதை அளித்தால் ஒரு உறுதியான பாலத்தை உருவாக்கிடலாமே. சில வருடங்களை அறக்கட்டளையின் பொறுப்புக்களை ஏறறுக் கொண்ட அடியார்களுக்கு தருவதன் மூலம் அவர்களுக்கும் உறுதணையாக அமையலாமே

வாங்கினோம் செலவழித்தோம் கடந்து சென்றோம் என்பதை காட்டிலும் , வாங்கினோம் அதை வைப்பில் வைத்தோம் . வட்டியில் இருந்து செலவை சமாளித்தோம். அதே சமயம் இவற்றை வைத்து எதிர்கால சந்ததியினருக்கு சில மெழுகுவர்த்திகளையாவது ஏற்றி வைத்தோம் என்பது எனக்கு நிறைவை தருமே.

1985களில் ஜேஸிஸ் இயக்க பணிகளில் தொண்டாற்றுவேன். அப்போது ஒரு பயிற்சி வகுப்பில்..  சாப்பாடு அளிப்பதை விட சமைக்க கற்று கொடுத்து விட்டால் இன்னும் அழகான ஆனந்தமான சமையற் கலைஞனை உருவாக்கிடலாம் என்கிற கருத்து எனக்குள் மிக ஆழமாக இன்றும் பசுமரத்தாணி போல...

குறைந்த பட்சம் இன்னொரூவரை அழைத்து வந்து அவருக்கு உணவு மற்றும் இதர இதர செல்வதற்கு கூட கூடுதல் பொருளாதாரம் மற்றும் பல விஷயங்கள் உள்ளன.

மிக குறைந்த பட்சமாக நானே என்னை இயன்ற போதல்லாம் ஈடுபடுத்திக் கொள்ள இயலும்.

அதே போல ஒரு அறையை நல்ல அற்புதமான புத்தங்களால் அழகாக்கவும் இயலும்

25 லட்சம் என்பது பெரிய தொகையல்ல.
இதை படிப்பவர்கள் ஆளுக்கு ஒரு 5000, அல்லது 10000 ஒரு முறை அளித்தால் சேர்ந்திடாதா என்ன.

சாது சம்ரோக்ஷணமாகவே இருக்கட்டுமே. பிச்சை போட்டதாகவே இருக்கட்டுமே. ஆனால் மெதுவாக சில பிள்ளைகளக்கு நம்பிக்கையையும் ஔியையும் உங்களின் சார்பாக அளித்திட சேவகனாக வாழ்ந்திட ஒரு வாய்ப்பாகிறதே.

மேலும் யாரிடத்திலும் இவ்வளவு கொடுங்கள் என கையேந்தவில்லை. இறைவனிடம் கையேந்துகிறேன். அதை இங்கு எழுத்தாய் செதுக்குகிறேன்.

நிகழ்ந்தால் அது அவன் அனுக்கிரஹம்
நிகழாவிடினும் என் முயற்சியை நான் முழுவதுமாய் செய்த நிறைவு.

இந்த நிறைவில் என்றும் நான் நிறைய வேண்டும்.

உங்களுக்கு தெரியாதா. ?

எத்தனை பேர் என் புத்தகத்தை படித்து விட்டார்கள். ரூ 350 கொடுத்து புத்தகத்தை வாங்கி ஈஷாவில் வளர்ந்த , தங்களால் வளர்க்கப்பட்ட , சத்குருவின் அருகில் கிட்டதட்ட இரு பத்தாண்டுகளை  செலவழித்த  ஒரு நபரின் பார்வையும்  உலகும் எப்படி உள்ளது என அறிந்திருக்கலாமே .

அதை விடுத்து ஈஷா தங்களூக்கு செய்திடாதா ? சத்குரு தங்களுக்கு செய்ய மாட்டார்களா என்றெல்லாம் கேள்விகளை கேட்டு நேரம் வீணடிப்பவர்கள் முன்னியிலையில் நின்று கையேந்த தன்மானம் இடம் தராதது மட்டுமல்ல அது என் குருவிற்கு அவமானம் .

ஈஷாவும் சத்குருவின் அண்மையும் எனக்களித்தது விலை மதிப்பில்லாதது  எதனாலும் அளவிடமுடியாதது. என்னை எனக்குள் நிறைவடைய வைத்துக் கொண்டிருப்பது. அதற்காகத்தான் அந்த இயக்கத்தில் தன்னார்வத்தில் தொண்டனாக என்னை இணைத்துக் கொண்டேன்.

இன்று வரை ஒரு சாதாரண தன்னார்வ தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். ஆன்மீகம் தேடியோ , சமுதாய சேவைகளுக்காகவோ , முக்தி நிலை வேண்டியோ, ஞானோதயம் தேடியோ அடியேன் அங்கு வரவில்லை. இன்று வரை அதை பற்றியெல்லாம் கல்விஞானம் எனக்கு கிடையாது.

ஆனால் விழிப்பை அருளுவது மட்டுமே தனிமனிதனுக்கோ சமுதாயத்திற்கோ செய்யும் சேவையாக இருக்கும் என்பதை எனது முந்தைய காலத்து சமுக சேவை இயக்கங்களால் உணர்ந்திருந்தேன். அதற்கு சரியான வழிகாட்டியாக அம்மனிதன் வந்தருள் புரிந்தான் .

இன்று வரை விழிப்பில் , இப்பயணத்தில் எவ்வளவு தூரம் சென்றுள்ளேன் என்றெல்லாம் எண்ணியதில்லை. ஆனால் பயணம் பாதைகளை கடந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நிறைவான பயணத்தில் நெகிழ்வான நினைவுகளோடு இயன்ற வரை  இருக்கும் ஆனந்தத்தை பிறரோடு பகிர்ந்து செல்கிறேன் அவ்வளவுதான்.

மூச்சும் பேச்சும் சேவையாகிப் போனதால் சேவைக்கென தனியாக எச்செயலும் தேவைப்படுவதில்லை.  எல்லோரும் இந்த நிறைவால் நிறைந்திட விருப்பம் சூல்கிறது.

இருக்கும் காலத்தில் இறந்த காலத்தை போட்டு கலக்காது இனிதான நொடிகளை அன்றாடம் பிறரோடு பகிர்ந்து செல்கிறேன்.

போக எந்த ஊரும் இல்லை . செய்வதற்க்கென குறிப்பிட்ட செயல்களும் இலக்குகளும் இல்லை. ஆனால் லோக ஷேமத்திற்காக செயல்களையும் இலக்குகளையும் விழிப்பாய் உருவாக்கிக் கொள்கிறேன். என்னை நானே நியாயப்படுத்திக் கொள்கிறேன். என்னை நானே செயல்படுத்திக் கொள்ள கருவிகளை உருவாக்கிக் கொள்கிறேன்.

இந்த ஷணம் என்னிடம் இருக்கும் வரை இப்படித்தான் செயல்படுவேன்.

நாளை இங்கு செய்வதற்கு ஒரு குழு தயாராகிவிட்டால் அவர்களிடம் அர்ப்பணித்துவிட்டு வேறு தளம் /இடம் நோக்கி  பயணப்படுவேன்.

காலத்தோடு காலமாக கடந்த சென்று கொண்டே இருப்பேன்.  காலம் கடந்து செல்ல இயலாவிடினும் , கடந்து போன காலத்தை தேடியலைய மாட்டேன் .

என் ஈஷா மிக பிரம்மாண்டமானது. என் குருவின் அருளைப் போலவே எங்கும் அது நிறைந்துள்ளது. அதன் பல பரிமாணங்களை அழகை ரசித்திட பயணப்படுகிறேன் . அவ்வளவுதான்.

சாதாரண மாணவன். சாதாரண தொண்டனாகவே இருக்க ஆசைப்படுபவன்.

தன்னார்வ தொண்டின் அடிப்படைகளை சொல்லித் தந்த அந்த பெரியவர்களின் , அந்த தொண்டர்களின் பாத தூளிக்கு இன்னமும் அடியேன் தயாராகவில்லை.

இது போன்றவைகளைத்தான் சத்குருவின் அண்மையும் ஈஷாவும் எனக்களித்துள்ளது.

தேடுதல் நின்று பகிர்தலாய் ஒரு வாழ்வு . பயணமாய் ஒரு பரவசம்.

அதனால்தான் வியாபார விஷயங்களில் ஈடுபட விரும்புவதில்லை. புத்தக விற்பனைக்காக ஈஷா நிர்வாகத்திடமும் கேட்கவில்லை.

அதை நான் தூக்கிச் செல்லும் அற்புதமான வாய்ப்பை வழங்கியது. அதற்கு தொண்டு செய்யும் வாய்ப்பை பெற்றது நிறைவு. அதுவும் எந்த வளர்ச்சியும் உருவடுததிடாத அந்த காலத்தில் அஸ்திவாரமாக இருக்க வைத்தது இறையருளின் பெருங்கருணை. 

அது விருப்பம் கொண்டால் என்னை தூக்கி செல்வது அதற்கு என் அனுமதி கூட அதற்கு தேவையில்லை என்பதுதான் அதன் பிரம்மாண்டம் .

ஈசனிடம் என்னை காத்து ரஷிக்க என வேண்டுவது ஏதோ இதுவரை அவன் காக்காது கை விட்டு விட்டதாக குறை சொல்வதற்கு சமம்.

50% மக்கள் ஈஷாவும் அதன் அன்பர்களும் எனை பார்த்துக் கொள்வதாக (எனக்கான தேவைகளுக்கு நிதியளிப்பதாக ) நினைத்துள்ளார்கள் மீதி 50% (ஈஷா அன்பர்கள் ) சுவாமி தனக்கென ஒரு பக்தர் கூட்டத்தை உருவாக்கி அவர்கள் தயவில் வாழ்வதாய் நினைக்கிறார்கள்.

ஆக மொத்தம் (விரல் வி்ட்டு எண்ணும் அளவு மனிதர் தவிர ) யாரும் குருவருளிலும் ஈசனருளிலும் ஒருவர் வாழ இயலும் என்கிற நம்பிக்கையை நம்பிக்கையாக கூட வெளிப்படுத்தவில்லை என்பதுதானே நி_தர்சனம் .

350 ரூ கொடுத்து புத்தகம் வாங்கி படித்து குறைந்த பட்சம்  இந்துத்வா தீவரவாதி என முத்திரை குத்தியிருந்தால் கூட ஆனந்தப்பட்டிருப்பேன். ஆனாலும் அதே சமூகத்தில் அதே மனிதர்கள் தலா ரூ3000 மாவது அளித்திடுவார்கள் என்று நம்பி முகநூலில் எழுதியது எனது நம்பிக்கையை என்றும் பறைசாற்றும்.

இதோ இப்போது கூட தங்களோடு பேசிய உரையாடலையும் தங்களின் கேள்வியையும் கூட பதிவாகவே நாளை எழுதுகிறேன்.

இந்தி மொழியாக்கம் செய்து தந்த திருமதி முத்துலட்சுமி மீனாட்சி அவர்கள் மிக அற்புதமான பாடத்தை எனக்கு சொல்லி தந்திருக்கிறார்.

72 + வயதிலும் கணணியும் கணணியில் ஹிந்தி தட்டச்சும் கற்றுக் கொள்ள இயலும் என்பதன் உருவம் அவர்கள்.

அவரைக் காட்டிலும்  அவரோடு இணை பிரியா தோழரும் 80+ வயது இளைஞரும் ,திரு ஜோதிபாசு போன்ற பெரியோர்களோடு இணைந்து பணியாற்றிய அவரது கணவரும்.

இந்தி மொழியாக்கம் செய்த பிறகு .... இந்த புத்தகம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழியாக்கப் பட வேண்டும் என்றதோடு இன்னும் சில ஆசியுரைகள் அருளினார் .

எல்லோரும் வாங்கி பயனுறும் வகையில் குறைந்த விலையில் அச்சிட ஆலோசனைகளையும் அருளினார்.

ஒரு வருட காலமாகிறது. மெதுவாகவே பயணிக்கிறேன் அவர்களூக்கு தந்த வாக்குறுதியில். 

தமிழ் புத்தகம் இவர்களில் நிறைய பேர் இன்னும் படிக்க வில்லையே என வருத்தம் கொள்ளவில்லை.

இன்னும் சொல்லப் போனால் ஈஷாவில் விற்பனைக்கு வைத்திட கேட்டு எழுதிட ஆலோசனை கூட வந்தது. அதற்கு கூட இன்று வரை அவர்களிடமும் கூட விண்ணப்பிக்கவில்லை.

காரணம் என்னளவில் கேதாரை நிச்சயமாக ஒரு 800 பேருக்காவது கொண்டு சேர்க்க முடிந்ததில் நிறைவு கொண்டதுதான். அது கூட உங்களைப் போன்ற ஒரு சில அன்பர்களின் உதவியால்தான்.

இலவசமாக தருவதும் / பெருவதும் அதன் மதிப்பை உணர இயலாமல் செய்து விடும் என்பதை இன்றும் இந்த இந்தி புத்தக முயற்சியிலும் சிலர் எனக்கு பாடம் சொல்லி தந்தாலும் என்னை மாற்றிக் கொள்ளவில்லை .

காரணம் நம்பிக்கையின் வடிவமாக நான் எனக்கிருப்பதும் , நன்றியின் உருவமாக எனது மூச்சுக் காற்று ஆனந்தமாய் வெளிப்படுவதாலும்தான். அது தங்களைப் போன்றோரின் ஆசியும் கருணையும்.  குருவாகி அருள் புரிந்த ஈசனின் அருள்.

ஆதலால் 25 லட்சம் என்பது ஆரம்பிக்கும் சேவையை ஐந்தாண்டுகள் கடந்தும் எடுத்துச் செல்வதற்காகத் தானே அன்றி எனக்கான இருப்பிடம் மட்டும்  உருவாக்குவது என்றால் அதற்கு என் தந்தையும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்த படிப்பு இருக்கிறது.

நம்பிக்கையையும் தங்களைப் போன்ற ஆத்மார்த்தமான மனிதர்களை பெற தன்னலமற்ற சேவையும் என்னிடம் நிரம்பவே உள்ளது

அடியேன் செய்கிறேன் என்பதற்காக அனைவரும் அள்ளி தந்து விட வேண்டுமா என்ன ? இயன்றவர்கள் பகிர்வதும் பகிராமல் செல்வதும் அவர்கள் விருப்பம். அதை மதிக்கிறேன்.

ஆனால் அவரவர்களால் இயன்றதை அவர்கள் செய்யாமல் சென்றால் அதுவே அவர்களுக்கு இழப்பு.

இயலாததை யாரும் செய்திடல் இயலாது. ஆனால் இயன்றதை செய்திடாது திண்ணைப் பேச்சு பேசினால் அறம் வளராது.

அதுவும் இது மதிப்பானது , இவர் செயல் மதிப்பானது  என்று முழங்கிவிட்டு அதை கை கொண்டு பயணிக்காவிடில் அவர்களை என்னவென்று பெயர் சொல்லி அழைப்பது .

ஒன்றே செய்
நன்றே செய் அதுவும்
இன்றே செய் என்பது முதுமொழி

ஆகவே தாங்கள் விதைத்த எண்ணமும் அடியேன் கொண்ட ஆசையும் மதிப்பானது என்று உணர்ந்தீர்களென்றால் தங்களால் இயன்றதை இன்முகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இல்லையென்றாலும் அதுவே ஈசனின் விருப்பம் என்று அமைதியாக ஆனந்தமாக பூமியில் வலம் வருவேன்.

காலம் தன் பணியை செவ்வனே  செய்யும். ஆனால் அது செய்யும் பொழுது உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா இல்லையா என்பது நீங்கள் அந்த காலத்தில் , காலத்தோடு பயணிக்கறீர்களா இல்லையா என்பதை பொறுத்தது

ஒரு கேள்வியில் ஒரு மணி நேரம் பேசியதை செவி கொடுத்து கேட்டமைக்கு நன்றி.

அன்போடு

தங்கள் சுவாமி
29/11/2017

கூடிய விரைவில்

No comments:

Post a Comment