Wednesday 27 August 2014

சமாதி பூஜை அனுபவம் -- கேதார்நாத்தில்

கேதாரத்தில் எனது நிமிடங்கள் (2012ம் ஆண்டு ஆலயம் நடைசாத்தும் போது – சமாதி பூஜை பங்குகொண்ட அனுபவம் )

ஒருவர் தான் மதிப்பானதாக கருதுவதை அடைய காத்துக் கொண்டு இருக்கும் போது, அல்லது தன்னை ஈர்த்தவரை பார்க்க காத்துக் கொண்டு இருக்கும் போது , நேரத்தைப் போன்று நம்மை சோதிக்கும் கொடுங்கோலன் வேறு எவரும் இல்லை.

கணங்கள் யுகங்கள் ஆவதும் , யுகங்கள் கணங்கள் ஆவதும் இங்கு மட்டும்தான், ஒருவரது இருப்பைக் காட்டிலும் அவர் இல்லாதது போன்று இருப்பது மிக வலிமையானது, ஒருவரது இருப்பைக் கூட , நாம் தவற விடக் கூடும், ஆனால் அவர் நம்மிடையே உடலளவில் தூரத்தில் இருக்கும் போது, நமது நினைவுகளும் , உணர்வுகளும் அவரது இருப்பால் நம்மை ஆக்ரமித்து இருக்கும்.

அந்த ஆக்ரமிப்பாளரே எல்லையற்ற கருணையுடையவராகவும், அதே சமயம் இரக்கமில்லாதவராகவும் தோன்றினால்,,,,,,,,, அறிவுப் பூர்வமாக யோசித்தால் இரண்டும் ஒரு சேர ஒரே நேரத்தில் ஒருவரிடம் உணர இயலாது , ஆனால் வாழ்வின் அற்புதமே இதுதான்,

அறிவால் காண முடியாததை அனுபவத்தால் மனிதன் பெறுகிறான், அனுபவத்தால் மனிதன் பெற்றதை அறிவால் விளக்க முயன்று தோற்கிறான், இந்த முரண்பாடுகள் முழுமை பெற்றவை, தன்னுள் தான் பூரணமடைந்தவர் இந்த முரண்பாடுகளுடன் முழுமையாக ஒத்து போகின்றார், மற்றவர்களோ,,,,,,,,,,

அவர்களது வழிகாட்டுதலினாலும், அருளினாலுமே மற்றொருவருக்கு இப்பரிமாணத்தை தரிசனம் பெற வாய்ப்பு கிடைக்கிறது, அத்தகையவன் ஈசனுக்கும் மேலானவன் , குருவெனப் போற்றப்படுகிறவன்,

திருவாசகத்தில் மணிவாசகர் ,
 கசிந்துருகி நலம்தான் இலாத சிறியேற்கு,
 நிலம்தன் மேல் வந்தருளி நீழ்கழல்கள் காட்டி,
நாயிற்கடையாய் கிடந்த அடியேற்கு ,
தாயிற் சிறந்த தயாவன தத்துவனே என சிவபெருமான் குருவான பெருமையை பாடுகின்றார்.

கடந்த முறை கேதார் சென்று., சில சாதுக்களின் அறிவுரையால் கீழிறங்கி பின் மீண்டும் ஒருமுறையாவது சென்றிட காத்திருந்தேன், எப்போது செல்வது, எப்படி செல்வது? என்னால் இயலுமா ? என்றெல்லாம் மனதில் எண்ணங்கள்,
அதே சமயம் சமாதி பூஜை குறித்து அறிந்த பிறகு ஆர்வம், நடுவில் சில சமயங்கள் செல்ல முயன்று கௌரி குண்ட் சென்று திரும்பினேன், என்னால் லக்கேஜ் சுமந்து கொண்டு நடக்க இயலுமா எனத் தயக்கம்,

மேலும் கேதாரத்தின் குளிர் ஒருபுறம் -12 , -14 என பயமுறுத்தியது, அத்தகைய குளிரை தாங்கிட என்னிடம் உள்ள பொருட்கள் போதுமா எனவும் தெரியவில்லை, ஆனாலும் எப்படியானாலும் சரி மெதுவாகவேனும் சென்று தீருவது என சங்கல்பம் கொண்டேன்,

அங்கு சென்ற போது எல்லாரும் மந்திரங்களை முழங்கிக் கொண்டும், பூஜையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போதும் , என் மனத்திலோ முத்துக்குமார் மற்றும் பாடகர் குழு , மதராசப்பட்டினத்தில் ஒலித்துக் கொண்டு இருந்தது,

 "நேற்று வரை நேரம் போகவில்லையே 
உனதருகே நேரம் போதவில்லையே 
எதுவும் பேசவில்லையே இன்று 
ஏனோ எதுவும் தோன்றவில்லையே - இது ஏதுவோ"

குளிர்காலம் 6 மாத காலம் இங்கு ஈசனார் , சமாதி நிலையில் இருக்கின்றார், அவர் அத்தகை சமாதி நிலை அடைவதற்காக அனாதி காலத்தில் இருந்து ஒரு பூஜை முறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, அதன் வரலாறு அறிய முடியவில்லை, இந்த 6 மாத காலம் , கோவில் முடும் முன்பு , ஆலயத்தினுள் நந்தியின் முன்னால் ஒரு அகண்ட தீபம் ஏற்றி வைத்து வருகின்றனர், மீண்டும் ஆலயம் திறக்கும் போது, அந்த தீபத்தின் எண்ணை அளவு சற்றும் குறையாது இருக்குமாம்,

 அதாவது இந்த 6 மாத காலம், சிவனார் சமாதி நிலையில் இருக்கும் போது, நந்திகேசுவரரும், நாரதரும் மற்றும் காலபைரவரும் அவரை கவனித்துக் கொள்வதாக பெரியவர்கள் கூறினார்கள்,

இதே போன்று வெள்ளியங்கிரியிலும், ஜுன் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை தேவர்கள் வழிபடுவதாக கேள்விப்பட்டுள்ளேன், சித்தர்கள் மற்றும் தேவர்களின் நடமாட்டத்தை உணர்ந்தவர்கள் சொல்லவும் கேள்விபட்டுள்ளேன்,

ஒருவேளை இவர்கள் நம்மைப் போலவே . நாம் செல்லாத இந்த காலங்களில் மட்டும் இங்கு வருகிறார்களோ என்னவோ அல்லது இவர்கள் வருவதால் இவர்களுக்கு இடையூறு இன்றி இருக்க இத்தகைய நடைமுறையை ஏற்படுத்தினார்களா என தெரியவில்லை,

எது எப்படியோ எனது ஆர்வத்தினால் கௌரி குண்டை அடைந்தேன், ஆயினும் பனி தூவ ஆரம்பிக்கும் முன்பு , சுமார் 12 மணிக்கு முன்பு என்னால் ஏறிவிட முடியுமா என சந்தேகம் இருந்தது, அதனால் ஒரு உறுதியான எண்ணத்தில் நான் இல்லை,

குப்தகாசியில் இருந்து பஸ்ஸில் சென்ற போது தென்னிந்தியாவில் இருந்து வந்த 3 பேரை சந்திக்க நேர்ந்தது, அவர்களோ இங்கு நிலவும் குளிர் பற்றி அறியாமல் வந்து இருந்தனர், அவர்களிடம் குளிருக்கு தேவையான துணிமணிகள் இல்லை, எனக்கு அருள் செய்த கடைக்காரரிடம் கூட்டிச் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளச் செய்தேன்.
சமாதி பூஜை குறித்து அறிந்த போது , அவர்கள் தங்க விருப்பப்பட்டாலும் , ஒருவர் அவரது வேலையின் காரணமாக திரும்ப வேண்டியது இருந்தது, மற்ற இருவரோ அங்கு நிலவும் குளிரைப் பொருத்து முடிவு செய்வதாக கூறினார்கள்,

நடக்கும் நேரத்தை மிச்சப்படுத்தவும், அதே சமயம் அங்கிருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், ஒருவேளை பனி தூவ ஆரம்பித்தால் என்ன செய்வது என்று, அதற்கு முன்னதாக சென்று சேர்ந்திட குதிரையில் செல்வது என முடிவு செய்தார்கள்,

இரவு நாயன்மார்களின் கதையில் கதகதப்பு பெற்றோம், நெகிழ்ந்த நிமிடங்களில் என்னையும் அவர்களோடு இணைந்திட வேண்டினர், ஆனால் எனக்குள் இருந்த தயக்கத்தின் காரணமாக அமைதி கொண்டிருந்தேன், ஏனெனில் நான் மெதுவாக நடப்பதால் அவர்களது பயணத் திட்டம் பாதிக்க கூடாது என்று எண்ணினேன், இறைவனோ வேறு வகையில் எண்ணினான் என்பதை அவர்கள் மூலம் அறிந்தேன், அனுமதித்தேன்,

சற்று நேரத்திற்கு முன்பே சந்தித்து இருந்த என்னையும் அவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு, அவர்களோடு அழைத்துச் சென்று , எனது வாழ்க்கை தருணங்களை ஆசீர்வதித்து அழகுபடுத்தினர், என்னே ஈசனின் லீலையும் , கருணையும்,

கேதாரநாதனும் தட்பவெப்பத்தை -14 ல் இருந்து -8 ஆக குறைத்து ஆனந்தப்படுத்தினான், ருத்ரப்பிரயாகையில் இருந்து வந்திருந்த சீக்கிய பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர் , உற்சவ மூர்த்தி அழுது அடம்பிடிக்காது அலங்காரம் செய்து கொள்ள வேண்டி இசைத்துக் கொண்டு இருந்தனர், அது தாய், குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வது போன்று இருந்தது,

தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலனவர்கள் கீழிறங்கி விட்டதால் கேதார் பெருமளவு வெறிச்சோடியது, குறைந்த தங்குமிடங்கள், ஒரே ஒரு கேண்டீன், எதிர்பாராத கூட்டம் ( 150 பேர்) என இருந்ததால் அனைத்தும் நிமிடத்தில் விலையேற்றத்தை சந்தித்தன, பற்றாக்குறைக்கு போலீஸ் மற்றும் அதிகாரிகள் கூட்டமும் சேர்ந்து கொண்டது,

குளிர்காலத்தில் 15 முதல் 20 அடி ஐஸ் டெபாசிட் ஆவதால் ஒருவர் விடாமல் அனைவரையும் வெளியேற்றி உறுதி செய்கின்றனர், இதன் தாக்கம் கடந்த 2003ம் ஆண்டு , தமிழகத்தில் இருந்து நடந்து வந்த போது கண்டுள்ளேன்,
இரவு ஆரத்தி மிக அற்புதமான வைபவம் மற்றும் அழகு. காண கண்கோடி வேண்டும். முடிந்து வந்ததும் ஏனோ படுக்க தோன்றவில்லை, மிக புத்துணர்வாக இருந்தது

சுமார் 8,30 மணிக்கு கண்மூடி அமர்ந்த நான் , சில நிமிடங்கள் ஆன உணர்வில் கண்விழித்தால் அதிகாலை மணி 2, சமாதி பூஜைக்கு முன் தரிசனத்திற்காக ஆலயம் திறக்கும் ஓசை கேட்டது,

இந்த குளிரிலும் , இரவிலும் முத்துக்குமார் மற்றும் பாடகர் குழு என்னுள் பணி செய்தது "இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே" அதிகாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு சென்றேன்,

கடும் இருட்டும் , குளிரும் , ஆலயத்தின் சூழலும் எனக்குள் ஏதோ செய்தது, குருபூஜை முடிந்து உள்பிராகாரத்தில் தியானத்திற்கு அமர்ந்தேன், மீண்டும் நொடிகளாகப் போனது யூகங்கள், சமாதி பூஜைக்காக நடை சாத்தப்பட்டது,
வெளியில் வந்து சாதுக்களுடனும், அவர்கள் வைத்திருந்த தீயின் வெப்பத்திலும் சங்கமானேன்

மீண்டூம் திறந்த போது , 1 மணி நேரத்திற்கு குறைவின்றி நடக்கும் அந்த அழகு வைபவத்தை கண்டு களித்திட கூட்டம் நிரம்பி வழிந்தது, கூட்டத்தின் சலசலப்பில் கலந்திடாமல் . தூணோடு தூணாக சாய்ந்து , அந்த அற்புத தருணத்தில் நான் நானாக நின்றிருந்தேன், ஒரு துளியேனும் கண்டிட பக்தர்கள் முண்டியடித்த போது , ஏனோ பகவான் ரமணரின் சீடர் , திண்ணை சுவாமிகளை குறித்து படித்தது நினைவிற்கு வந்தது, அந்நிலையை(சமாதி) எனக்கு அருளாமல் அவன் செல்வது எனக்குள் குழந்தைத்தனமான பொறாமையை உண்டு பண்ணியது, அந்நிலை எனக்குள் மலர்ந்தால் அதுவே என் குருநாதனுக்கு நான் அளிக்கும் காணிக்கையாக இருக்க முடியும் எனத் தோன்றியது,

ஆனால் அந்த சூழல், காற்றில் ஊடுறுவிய பனி , பக்தர்களின் மூச்சுக்காற்றால் உண்டான வெப்பம், பூஜையின் ஓசை, மந்திரத்தின் ஒலி, வெண்கல மணியின் நாதம், மலை முகடுகளின் நிச்சலனம், நதியின் ஆரவாரம் என அனைத்தும் கலந்து என்னுள் மயக்கம் கலந்த விழிப்பை தந்தது,

ஈசனுக்கு தமது அன்பை வெளிப்படுத்த எல்லோரும் ஏதோ ஒன்றை கற்றிருந்தனர், நானோ வெறுமையாய்,,,,,,,,,,,, மாலை நேரத்து மயக்கத்தைப் போல காலை நேரத்து விழிப்பு என்னுள் வார்த்தையை கோர்வையாக்கியது, பின் கவிதையாக்கியது, அதை ராகமாக்கியது, ( தனியாய் போஸ்ட் செய்கிறேன்)

நெகிழ்ந்து கண்மூடிய தருணத்தில் என் மனத்தின் மூலையில் எங்கோ முத்துக்குமார் குழு இசைத்தது
" வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
குருவின் மௌன மொழி பேசுமே
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
 இன்று இந்த நொடி போதுமே "
பூஜை முடிந்து சமாதி தரிசனத்தில் என்னை மறந்தேன்,

அப்போது கூட குளிர்காற்று என் காதில் அவர்கள் பாட்டை பாடியது

"வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையென்று
இது என்ன இவன் தோற்றம் பூபூக்குதே
வாளின்றி போரின்றி வலிதின்ற யுக்தமின்றி
 இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே" இமைகளின் ஓரத்தில் விழிநீர் அனைவருக்கும் நன்றியாய்,,,, குளிரோடு சேர்ந்து என்னுள் ஊடுறுவும் மௌனத்தில், வெறுமையை சுமந்து , சத்குருவின் நினைவில் நடந்தேன்,


மலைமுகடுகள் அனைத்தும் முத்துக்குமார் குழுவில் இணைந்தது போல் இசைத்தன
"எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவதே
எந்த உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் என் பயணம் முடியவில்லையே
அதில் பறந்த பறவை மறைந்த பிறகும்,,,,,,,,,,,,,,,,,," 

திரும்பி வந்து குப்தகாசியில் ஈசனை வரவேற்க காத்திருந்தேன்,
ஊகிமத் செல்லும் வழியில் இங்கு ஒரு இரவு ஓய்வெடுக்கின்றார்

விஸ்வநாதருடன் கிராம மக்களும் ஒன்று கூடி வரவேற்க நின்றிருந்தனர், 6 மாத கால இடைவெளிக்க பிறகு நுழைந்தவரோ , நேரே விஸ்வநாதரிடம் சென்று பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு, மக்களின் அன்பிலும் , பரிசிலும் சில நிமிடங்கள் நணைந்தார், பின் தனது ஓய்வறைக்கு சென்று அருள் பாலித்தார்,

கேதாரத்தின் பூஜைக்கான அதிகாரத்தை பெற்ற ராவல் . உற்சவ மூர்த்தியுடன் வந்த போது, நான் நின்றிருந்த இடத்துக்கு அருகே வந்த போது, தனது பாதுகைகளை கழற்றி விட்டு , இறையனாரோடு ஓடிச் சென்றார், அந்த திருவடிகளை சிரமேற்கொண்டு சேகரித்து பாதுகாத்தேன்,



















ஈசனார் ஓய்வறைக்கு சென்ற பின் அவரது உதவியாளர் வந்து என்னிடம் அதை பெற்றுக் கொண்டார், அது, அக்காலத்தில் சத்குருவின் திருவடி பாதுகைகளை , சேகரித்து, சுமந்து வைத்திருந்து பின் ஸ்வாமி புஜங்காவிடம் ஒப்படைப்பதை நினைவு கூர்ந்தது,

கனிந்த, கசிந்து , அவரது இமாலய எல்லைக்குள் , அவரது காலடியில் , அவரின் அடுத்த தரிசனத்திற்காக காத்திருக்கின்றேன்


(ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்த 2ம் நாள் கேதார்நாத் ஆலயம் குளிர் காலத்திற்காக அடுத்த 6 மாதத்திற்கு நடை சாத்தப்படும், அதற்கு முன்பாக ஈசனை சமாதிநிலையில் ஆழ்த்துவதற்காக வெகுவிமரிசையாக ஒரு பூஜை முறை நிகழ்த்துகின்றனர். இந்த 6 மாத காலமும் காலபைரவரும் நாரதரும் ஈசனாரின் தேவைகளை கவனித்து வருவதாக ஐதீகம். இந்த வருடம் அக்டோபர் 24ம் தேதி நடை சாத்தப்படுகிறது,)

No comments:

Post a Comment