Wednesday, 9 April 2014

அவனுக்கு என் நன்றிகள்

என் முகத்தில் ஒட்டியிருக்கும் சாணியை நான் காண முடியாது . பிறர் காட்டினால் மட்டுமே. அவர்கள் கருணை கொண்டு அதை துடைத்து விட்டால் மட்டுமே. ஆனால் அதற்கு நான் அவர்களை அனுமதித்தால் மட்டுமே சாத்தியம். என் முடிவுகளாலும் , என் தகவல்களாலும், விருப்பு வெறுப்புக்களினாலும் என் முகத்தை மூடிக் கொண்டு இருந்தேனாயாகில் எவராலும் என் அசிங்கத்தை துடைத்தெறிய முடியாது. அதனாலேயே எனக்கு பிடிக்காவிடினும் , வலித்தாலும் அந்த அவரை அனுமதிக்க சித்தம் கொள்கிறேன். துடைத்தெறிபவரை பற்றி எனக்கு கவலையில்லை. என் கவலையெல்லாம் என் கவனமெல்லாம் என் அசிங்கம் போக்குவதே. என்னை பற்றிய என் கருத்துக்கள் களைவதே. என்னை பற்றிய என் கருத்துக்களே வேண்டாம் என்றிருக்கும் போது அடுத்தவர் பற்றி எக்கருத்தும் நான் சுமக்க வில்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள் . அது உங்கள் விருப்பம். என் சுமைகளின் பாரம் அறிந்தவன் நான். அவன் அறைகூவலை கேட்டு அவனிடத்தில் செல்கிறேன். அவனே என் பாரத்தை இறக்கி வைக்க கூடியவன். அவன் பெயர் என்ன என்பதில் எனக்கு ஆர்வமில்லை. அவனில் மட்டுமே என் ஆர்வம். அவன் யாராய் இருந்தால் எனக்கென்ன ? எப்படி இருந்தால் எனக்கென்ன? வழியில்லாத வழியில் பயணிக்கும் நான் , என் பயணத்தையும், பாதையையும் முடிந்த வரை ஆனந்தமாக்குறேன். என் அசிங்கத்தை பெற்றுக் கொண்டு எனக்கழகை தரும் அவனுக்கு என் நன்றிகள்.

No comments:

Post a Comment