Saturday, 9 November 2013

மௌனம் பேசுகிறது

அவனா இவனா என ஆராயாது
அருகில் அமர்ந்திருந்தேன்
அப்போதே அழகாய் புரிய வைத்தான்
அவனென்றும் இவனென்பதும்
அறியாதவன் மொழி என்பதை,,,,

உடனிருந்த போது இவனென்றேன்
உயிரிலோ இவனை அவனென்றேன்
உணர்ந்த தருணங்கள்
மீண்டும் அவனிடம் அழைத்துச் சென்றபோது
அழகாய் பேசவிட்டு அதை
அக்கக்காய் பிரித்து மேய்ந்தான்

வேதாந்தமோ சிந்தாந்தமோ அறியாத எனக்கு
என்பேச்சில் தானே வெளிப்பட்டு
தன்னை சிக்கல்படுத்தாமல் இருக்க கருணையோடு
எனக்கழகாய் உணர்த்தி என்னுள் என்னை மௌனமாக்கினான்

எதை நான் செய்தாலும் - அதை
எப்படி எப்படியோ செய்தாலும்
அதில் என்னை நானே பிரதியெடுப்பதை
எனக்கழகாய் உணர்த்தி
குருவென்றும் உருவென்றும்
கருவாகிப் போன பொருளை
மெருகேற்றி ஒளிர வைத்தான்

அதையும் இதையும் என
எதையும் பேசாமல்
அதுவாக நின்று அவனாக மௌனம் பேசினான்

அவனது பேச்சில் தெரித்த மௌனம்
கண்ணாடியாய் எதிர்நின்று
என்னை எனக்கே பிரதிபலித்தது

அதில் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
எண்ணத்தின் நீர்குமிழி
கவனத்தின் அலைஒசை
சப்தங்களை நிசப்தமாக்கி
நிசப்தத்தை கங்கையின் பிரவாகமாக்கியது

ஒற்றைக் கேள்வியின் முற்றுப்புள்ளியாய்
ஒடுக்கி அடங்கி ஓங்காரமாய் விரிவெடுத்தான்
சப்தங்கள் செவிப்பறையோடு அடங்கி
நிசப்தங்கள் நீராவியாய் நீண்டு மேல்எழுந்தன
கொதிக்கும் அணுஉலைச் சத்தத்தை
கொஞ்சம் கருணையோடு கேட்டிருக்கவேண்டும்
குளிர்நிலவாய் அடுப்பை அணைத்து
கருணையோடு மௌனமாக்கினான்

பேசிய மௌனமும் பேசாத வார்த்தைகளும்
பேரலையாய் எழுந்து என்னை என்னுள்
மூழ்கடிக்கின்றன
அடித்துச் செல்லப்படும் வெள்ளக்காற்றில்
அணைத்து கொண்ட கரங்களின் ஸ்பரிசத்தால்
இனம் புரியாத மௌனம்
இதமாய் என்னுள் பேசுகிறது


No comments:

Post a Comment