Saturday 21 December 2013

நினைவலைகள் --- 1 (14/12/2013)

பாஷை புரியாத மக்களோடு சில மணி நேரம் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது, அதுவும் அதில் ஒரிரு முகங்கள் தவிர மற்றவை புதிதாக் இருக்கும் போது அனுபவிக்கும் நொடிகள் அழகானவை, பரஸ்பரம் கதைகளும் லோகாயித விஷயங்களும் பேச வழியில்லை.என்றாலும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள ஏற்படும் போராட்டம் அற்புதமாக ரசிக்கத் தக்கவை, இன்று அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் இங்குள்ள மக்களுக்கு நடுவில் அதிக நேரம் இருக்க வேண்டியிருந்தது,

தமிழ்நாட்டில் இருக்கும் வரை நான் சகுனங்களை கவனிப்பவன் இல்லையென்றாலும் , முக்கியமான பயணங்களின் மற்றும் ஒரு பணிக்கான முதல் பயணங்களின் துவக்கம் சகுனம் உரைப்பது போல ,  பார்ப்பது போல பாடல்கள் துவங்கும், சினிமா பாடல்களாகவே பெரும்பாலும் இருந்தாலும் அது குருவின் செய்தியை உணர்த்துவது போலவே அது இருப்பது ஆச்சரியமான விஷயம்தான் ,

இங்கு ஹிமாலயத்திற்கு வந்த பிறகு  கையில் உள்ள எம்பி3 பிளேயரில் ( அற்புதமான – அதாவது என்னை அதிகம் ரசிக்க வைத்த கர்னாடக சங்கீத பாடல்கள் (பலரும் கொடுத்த பாடல்களில் செலக்ட் செய்து வைத்திருப்பேன்) மற்றும் தெய்வீக ஸ்லோகங்கள் பாடல்கள் கேட்பேன் ) ஆன் செய்யும் போது வரும் முதல் பாடல் பெரும்பாலும் (தானாக எதோ ஒரு பாடல் முதல் பாடலாக வந்து நிற்கும்) இதே விதமாக வருவதை உணர்ந்தேன்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்பது போல பேருந்தின் மூடிய கண்ணாடியை ஊடுருவி வீசிய குளிரின் சுவாசம் உடலை இழுத்துப் போர்த்திக் கொள்ள வைத்தது. நல்ல முன்பனிக் காலம் அதுவும் பனிமலைகளுக்கு நடுவே மீண்டும் ஒரு முறை என் வாழ்வில் நெருங்குவதை குளிரில் மார்கழியின் வாடை உணர்த்தியது.

கிருஷ்ணார்ஞ்சுன யுக்தம் கதையில் பாலகுமாரன் அவர்கள் மிக அழகாக முன்பனிக் காலத்தில் கதையை ஆரம்பிபப்பது நினைவில் வந்தது. அர்ஜுனன் குளிர்காலத்தின் இரவுநேரத்தில் உப்பரிகையில் நின்று….. கதையை ஆரம்பிப்பார்.

அர்ஜுனனோடு சேர்ந்து அவரது பல எழுத்துக்கள் பலமாக எண்ண அலைகள் எழும்ப ஆரம்பித்தன. எனக்குள் கேள்விகளும் புரிந்து கொள்ள முடியாத அனுபவங்களோடும் ஒரு தேடலை தேடிக்கொண்டு இருந்த காலம் அது,

சுந்தராவின் கேள்விகளோடு  தலையணையில் அவர் வரைந்த பூக்களை வாழ்க்கை தோட்டம் காட்ட ஆரம்பித்து இருந்தது. எப்படி சலங்கை ஒலி படம் கணக்கின்றி பார்த்திருப்பேனோ அதே போல் தலையணைப் பூக்கள் கதையும் கணக்கில்லாமல் படித்திருப்பேன்.

வீட்டில் பெரியவர்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலம் உணர்ந்ததை காட்டிலும் காஞ்சி பெரியவரை அவரது எழுத்துக்கள் அருகே கொண்டுவந்தன. இதே கதையில் அவரை தாமரை என்று குறிப்பிடுவார் என்பது நினைவில் வந்தது.

சுந்தராவின் தந்தையைப் போல உரிமையோடு தாமரையோடு பேசும் நாள் என் வாழ்க்கையிலும் வருமா என்று ஏக்கத்தை கொண்டு வந்த போதை எழுத்துக்கள் அது. அக்கதை வந்த வருடம் எனது அக்காவின் (சித்தப்பா மகள்) திருமணம். எங்களது தலைமுறையில் எங்களது குடும்பத்தில் முதல் வைபவம்.

ஆசி வாங்க காஞ்சி மடம் சென்றோம். நானும்கூட அழைத்துச் செல்லப்பட்டேன், எனக்கோ நடைமுறைகள் தெரியாது . எந்த சந்நியாசியை நேரில் சந்தித்தது கூட கிடையாது  அல்லது சந்தித்தவர்களிடம் இவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டு அறிந்ததும் கூட கிடையாது,

மடாதிபதிகள் அனைவரும் சந்நியாச மார்க்த்தில் இருந்த காரணத்தால் சந்நியாசி என்றால் ஆஸ்ரமத்தை சார்ந்தோ அல்லது மடங்களை சார்ந்தோ இருப்பவர்கள் என்கிற ஒரு புரிதல் காலம் காலமாக ஏற்பட்டு விட்டது.

சந்நியாசம் என்பது ஒரு உள்நிலை. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் உள்ளன. பல மகான்கள் இல்லறத்தில் இருந்தே அடைந்து உள்ளனர். சந்நியாசம் என்கிற துறவு குறித்து சத்குரு பேசியது நினைவிற்கு வந்தது. அப்போதுதான் பிளேயரில் கண்ணனின் அலை பாய்ந்து வந்து காதுகளை நனைக்க ஆரம்பித்தது.

அலைப்பாயுதே கண்ணா….. பெரும்பாலும் திருமண ஜானவாசத்தில் கேட்டு பழக்கமான எனக்கு , சுந்தராவின் இருதி கணங்களோடு கொண்டு சேர்த்த நேர்த்தி ….. எந்தன் மரணமும் இப்படி அழகாக அமைதியாக நிகழவேண்டும் என்று எண்ணத்தை தோற்றுவித்து இருந்தது.  

இந்த பாடலும் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் என்கிற டிஎம்எஸ் குரலும் நினைவலைகளில் எதிரொலித்தன. இந்த இரு பாடல்கள்தான் என் பாட்டி மிக விரும்பி கேட்பாள். அவளுக்காகவே டேப்ரிக்கார்டர் வந்த காலத்தில் முதல் கேசட் இதுதான் வாங்கி வந்தது ஞாபகம் இருந்தது.

ஓட்டு வீடு, வாயிலில் இருக்கும் கதவு முதல் புழக்கடை என்றைழைக்கப்படும் தோட்டத்தின் கடைசி சுவரும் நேரான பாதையாக இருக்கும் .வலதுபுறம் ஒருவர் படுத்துறங்கும் திண்ணையும் இடதுபுறம் பெரிய திண்ணையும் (பாதி சுவருடன்) இருக்கும். தெற்கு பார்த்த வீடு ஆகையால் காலைச் சூரியன் கண்சிமிட்டி உஷ்ணப்படுத்துவான்.

மார்கழியின் குளிரில் இதமான காலைப் பொழுதுகள் அவை. அந்த குளிரை அந்த அதிகாலை வெயிலிலும் அல்லது குளிப்பதற்காக அடுப்பு மூட்டி எரிக்கப்படும் விறகுகளிலும்தான் அழகாக உணரமுடியும்.

மார்கழியின் நினைவு மறுபடி என் மனதை கலைத்தது. என்னை எப்படியாவது எழுப்பி படிக்க வைத்துவிட வேண்டும் என்று அப்பா செய்த பகீரத பிரயத்தனம் . நானே இறுதியில் வெற்றி கொண்டேன். ஆனால் அவர் தோற்கவில்லை என்பதை அழகாக இந்த முப்பது நாட்களும் அன்பு கலந்து வெண்பொங்கல் கோயில் பிரசாதமாக வரும்.

இந்த ஒரு மாதம் மட்டுமே காலை நேரத்தில் டிபன் கிடைக்கும், மற்றபடி பழைய சாதமும் அடி ரசமும்தான் அற்புதம். இந்த பொங்கலை பெறுவதற்காகவே காலையில் மலைமேல் இருக்கும் அரங்கநாதர் கோவிலுக்கு சென்றுவிடுவேன்.

நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாலும் கூட அதிகாலை 4 மணிக்கு மார்கழித் திங்கள் மலை மீது ஓங்கி எதிரொலித்து சுகமான கனவுகளைத் தரும். அதை தொடர்ந்து அன்பர்கள் குளிரை பொருட்படுத்தாது குளித்து நடுங்கும் குரலின் நடுக்கத்தை வெளிப்டுத்தாது அழகாய் பாடும் அற்புத பஜனைகள். அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரிக்கும் அரங்கநாதனுக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பிப் போனாலும் பனித்துகளின் அழகில் மயங்கி மறந்து விடுவேன்.

ஏதோ வைகுண்ட ஏகாதசிக்கும் கார்த்திகை தீபத்திற்கும் மட்டும்தான் இக்கோவிலை திறப்பது போல அழகும் கூட்டமும் கூடும். அதுவும் வைகுண்ட ஏகாதசி அன்ற அந்த வயதிற்கேற்ப அழகிய வண்ணத் தாவணிகளை ரசித்ததம் நினைவில் எட்டிப் பார்த்தத. ஒரு முறை ஸ்கவுட் பணியில் இருந்த போது யாரோ ஒரு போலீஸ்காரருக்காக அவருக்கு ஒரு சிகரெட் வாங்கி வருவதற்காக மலை இறங்கி மீண்டும் ஏறிப் போன என் சிரத்தையும் பக்தியும் இந்த நினைவுகளில் கூட வெளிப்பட்டது.

யோக மையத்திற்கு வந்த பிறகு முங்கில் இலைகளின் நுனியில் உருண்டோடும் பனித்துளிகள் பரவசப்படுத்தும். கண்ணாடி பதித்த பாவாடை அணிந்து துள்ளிக் குதித்து மார்கழிப் பூவே மார்கழிப் பூவே என்று ஒடி வந்த பெண்ணை (நடிகையைப்) போல நானும் என் மனதுக்குள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தேன்.

வாழ்க்கையின் ஒரு பாதி அழகானது . அதன் மறுபாதி ரசனையானது, ஏனோ அது பலருக்கு கிடைப்பதில்லை. எனக்கு கிடைத்தது போல இந்த ஆருத்ரா தரிசனம் அனைவருக்கும் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்.

அவர்களும் புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி என்று ரசனையோடு ஒடி வருவார்கள் என்பது நிச்சயம் . என்ன ஒரு ஆச்சரியம். மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும்  ஒரு இளம் வயது பெண் திருமணத்திற்கு முன்போ அல்லது காதலனை சந்திப்பதற்கு முன்னரோ துள்ளிக் குதித்து பாடி வருவாள்.

விஸ்வநாத்தின் இயக்கத்திலோ எப்போதும் ஒரு பிளாஷ்பேக் , அதுவும் ஜீனியஸ் கலைஞன் இறுதியில் இறந்து போவான். கண்டிப்பாக அவனுக்கும் நடனத்திற்கும் இசைக்கும் தொடர்ப்பு இருக்கும். இது போல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒரே மாதிரியான வெளிப்பாடுகள் எல்லா படத்திலும்.

இவைகள் ,இந்த கதாபாத்திரங்களின் வெளிப்பாடு  அந்த இயக்குநர்களின் அடிமனது ஆசைகளோ அல்லது நிறைவேறாத கனவுகளோ அறியேன், ஆனால் எப்படி ஒரே விதமாக சிந்தனை வட்டம் சுற்றி வருகிறது , எத்தனை காலமானலும் சரி எவ்வளவு அனுபவம் வந்தாலும் சரி நாம் நம் எண்ண சுழற்சிகளைத் தாண்டி வெளியே வரமுடிவதில்லையோ என்று தோன்றியது, நான் என் எண்ண சுழற்சிக்குள் இருக்கிறேனா அல்லது வெளியே நின்று அதை வெறுமனே ரசிக்கிறேனா என்ற வினா எழும்போதே , கண்மூடி கிறக்கமானேன். 

என் எண்ணங்கள் சுழன்று கழன்றதால் பரவெளிக்குள் வெறுமையானேன் . அந்த வெறுமைக்குள் வெறுமனே இருக்க முடியும் போதெல்லாம் அதை விட சுகம் வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதை உணரமுடிகிறது. அந்த சுகத்தோடு  நினைவுகளை ரசிக்க வாய்ப்பு கிடைப்பது அழகான பூஞ்சோலையில் காதலியுடன் நடக்கும் சுகம் போன்றது, 

தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்று பாம்பே ஜெயஸ்ரீ என் செவிகளுக்குள் சவால் விடுத்துக் கொண்டிருந்தார். நானோ வருவாரோ வரம் தருவாரோ என்று பதில் கேள்வியை நினைவில் ரசித்துக் கொண்டிருந்தேன்,

No comments:

Post a Comment