Sunday, 15 December 2013

பயணங்கள் மட்டுமல்ல (கற்றுக் கொள்ளவேண்டிய ) பாடங்களும் கூட முடிவு பெறுவதில்லை


எவ்வளவுதான் நாம் கவனமாக இருந்தாலும் சிலசமயம் நமது பிழைகள் நட்பு மற்றும் உறவுகளின் மனம் புண்படும்படி அமைந்து விடுகிறது. அதை அவர்கள் பெருந்தன்மையோடும் நேசத்தோடும் நமக்கு மட்டும் புரிந்து கொள்கிற மாதிரி ஒரு கருணையை என்னவென்று சொல்வது. இத்தகைய தருணங்கள் நம்மை மீண்டும் உள்நோக்கி பார்த்து திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது என்பதே எனக்கு உண்மையாக உள்ளது.

சத்குருவின் அண்மையில் இப்படி நம்மை அடியோடு புரட்டிப் போட்டு உள்நோக்கி பார்க்கும் வாய்ப்புக்கள் மட்டுமே எனக்கு நிகழும் . என்னை ஆழப்படுத்திக் கொண்டே இருக்கும்.

இப்படி இமாலயத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு தருணமும் இப்படி அமைவது என் கவனத்தை என் மேல் மட்டுமே நிலைநிறுத்துவதாக அமைகிறது. அடுத்து ஒரு முக்கியமான அம்சமாக இத்தகைய தருணங்களையும் நிகழ்வுகளையும் எழுத்தில் வடிப்பதும் எழுதுவதே பழக்கமாயிராத எனக்கு ஒரளவு நிகழ ஆரம்பிக்கிறது.

கேதாரத்தில் மரண விளிம்பில் இருந்து வந்த பிறகு இது போன்ற நிகழ்வுகளும் தருணங்களும் அதிகமாகவே வெள்ளப் பெருக்காகி என்னை மேலும் மேலும் அமைதியாக்குகின்றன. அவ்வப்போது எனது தவறுகள் புலப்பட்டு என்னை கவனிக்க வைக்கின்றன. இப்படித்தான் கடந்த இரு தின நிகழ்வுகள்.

ஏற்கனவே கடந்த மாதம் ஒரு சந்நியாசியோடு இருந்த போது ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பாக உணர்த்தினேன். அதன் பிறகு பரமானந்த பாபாஜி என்கிற ஒரு அற்புத மனிதரின் சந்திப்பும் அன்மையும். இதே காலகட்டங்களில் நான் மிகவும் ரசித்த , நேசிப்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் திரு பாலகுமாரனின் எழுத்துக்களும் நட்பும் , அதுவும் வெகுகாலத்திற்கு பிறகு மீண்டும்…………..

நேற்றைய நினைவலைகள் (அதை தனியாக பதிவு செய்கிறேன்) கிளப்பிய கவனம். அது அந்த நேசத்தின் கருணை. மீண்டும் சொல்கிறேன் , குருவருளை எவராலும் அளவிடமுடியாது. அது பலவிதங்களில் பணி செய்யும். அது பல ரூபங்களில் தரிசனம் தரும். 

அவனருளால் மட்டுமே அதை நாம் உணரமுடியும். அவனருள் இல்லையென்றால் அணுவளவு கூட நம்மால் உணரமுடியாது, அதை உணரும் போது நமது முந்தைய தவறான புரிதல்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதற்கு நம்மை  நாமே கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும், அதற்கும் கூட அவனருள் இருந்தாலே மட்டுமே சாத்தியம்.

நினைவலைகளில் சொல்லாத ஒரு விஷயத்தை நான் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். பொதுவாகவே எனது செயல்களில் சிறு வயது முதல் பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் சில செயல்கள் அவ்வப்போது தலை எட்டிக் காட்டும். இதை நான் மௌனத்தில் இருந்த காலங்களில் கவனித்திருக்கிறேன்.

நமது தவறுகள் நமக்கு பட்டவர்த்தனமாக நமக்கு மட்டுமே புரியும் படி சுட்டிக் காட்டப்படும் . அது அவரது கருணை. அது நம்மை நாமே பார்க்க வைக்கும் கண்ணாடி.

அப்படி தவறுகளை உணரும் போது எப்படி ஒத்துக் கொள்வது என்று கேள்வி எழும். மனம் கூறும் ஆயிரம் காரணங்களை / சமாதானங்களை சமரசம் கொள்ளாது ஒதுக்கி வைக்க வேண்டும்.

அப்படித்தான் நேற்றும் ஒரு தவறை உணர்ந்தேன். என்னுடைய பதிவுகளில் இப்படிப்பட்ட கருத்துக்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அதற்கு காரணம் என் எழுத்துக்கள் இன்னும் என்னால் பலமுறை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

இந்த தருணத்தில் எனது நண்பர் (லேட்) மகேஷை நான் நினைத்து பார்க்கிறேன். சிறுவயதில் இருந்தே புத்தகம் படிப்பது பழக்கமிருந்தாலும் (ஏற்கனவே நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் என்ற கட்டுரையில் பதிவு செய்திருந்தேன்) அதிகம் படித்ததும் பழகியதும் பாலகுமாரனின் எழுத்துக்கள்தான்.  இந்த தமிழார்வத்தை ஊக்குவித்தவர்களில் சௌந்தர் அண்ணாவும் மகேஷும் மிக முக்கியமானவர்கள் என்பேன்.

அவர்கள் எழுத்தார்வத்தையும் கூட ஊக்குவித்தவர்கள். எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. முதல் முறையாக 2001ம் வருடம் ஒரு பயணக் கட்டுரை மகேஷின் உந்துதலால் எழுதியது. அப்போது எல்லாம் கம்யூட்டரும் கிடையாது , தமிழ் தட்டச்சும் எனக்கு தெரியாது. கைப்பட எழுதினேன்.

எடிட்டிங் என்கிற விஷயத்தையும் அவனே எனக்கு சொல்லிக் கொடுத்தவன். சரியான வார்த்தை பிரயோகம் மற்றும் சரியான முறையான வெளிப்பாடு ஆகியவற்றிற்காக மீண்டும் மீண்டும் எழுதியதை படித்து பார்த்து திருத்தங்கள் செய்தேன். திருத்தியதை மீண்டும் படித்துப் பார்த்தேன். படித்த போது தோன்றிய திருத்தங்களை செய்தேன் . ஒரு கட்டத்தில் என்னால் எவ்வித திருத்தமும் அதற்கு மேல் செய்ய முடியவில்லை. அது அந்த கட்டுரையை 25வது தடவை எழுதிய பிறகு.

கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதை விட எனக்கு ஒன்று புரிந்தது .என் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தை கற்று கொள்ள ஆரம்பித்தேன் . அதை எத்தனை தடவை வடிகட்டத் தேவையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அந்த கட்டுரையும் அன்பான மக்களின் பாராட்டும், ஊக்குவிப்பும் என்னை எழுத்து பக்கம் திருப்பியது. அப்போதெல்லாம் பாலகுமாரன் அவர்களின் எழுத்து நினைவிற்கு வரும். பிரமிப்பாக இருக்கும்.

ஆன்மீக வாழ்க்கையில் வாழும் ஒருவர் தன் அனுபவங்களை பகிர்வது என்பது, கேட்பவருக்கு ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டி அல்லது கேட்பவருடைய சந்தேகத்தை தீர்த்து வைக்க அல்லது பிறருக்கு தெளிவு ஏற்படுத்த என பல காரணங்களுக்காக பகிரப்படுகின்றன,

இதை சில சமயம் நாம் வேறுவிதமாகவும் புரிந்து கொள்கிறோம் என்பதும் நிகழத்தான் செய்கிறது. ஆழமான அனுபவஸ்தர்கள் அதையும் உணர்ந்தே இருக்கின்றனர் என்பது என் எண்ணம். அதையும் சேர்த்தே அவர்கள் கையாளுகின்றனர்.

எப்படி இப்படி ஆழமான அனுபவங்களை அழகாக எழுத்தில் வடிக்கிறார் என்று பொறாமையாகக் கூட இருக்கும்.பகிரும் போது பலரோடு அவரது எழுத்துக்களை , கதைகளை பற்றி பேசும் போது நாமும் ஒரளவாவது எழுத மாட்டோமா என்கிற ஏக்கமூம் , எழுத்து என்பது எப்படி நம்மை , நம் எண்ண அலைகளை கவனிக்க வைக்கிறது என்பதும் நினைவிற்கு வரும்.

அதனால்தான் கேதார்நாத் அனுபவக் கட்டுரை மிக மிக குறைந்த திருத்தங்களோடு (என்னாலும் , தினமணி ஆசிரியர் குழுவாலும் சரி) வெளிவந்த போது உண்மையில் , வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெள்ளத்தில் இழந்து நின்ற போது , எழுத்து என்னோடு இருக்கிறது என்பதை எனக்கு காட்டியது.

இதிலும் சரி , வாழ்க்கையிலும் சரி , அனுபவத்திலும் சரி எழுத்திலும் சரி அல்லது அனைத்து வெளிப்பாடுகளிலும் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை அறிவேன். அதனால் எனது எழுத்துக்களிலும் ,கருத்துக்களிலும் , வெளிப்பாடுகளிலும் தவறுகள் அவ்வப்போது வெளிப்படுவதை அறிவேன்.

பெரும்பாலும் நானே அதை மீண்டும் படிக்கும் போது இதை இப்படி சொல்லியிருக்கலாமோ , அட இதை இப்படியா சொல்வது ? இது என்ன? நாம் என்ன சொல்ல வந்தோம் இந்த எழுத்துக்களில் என்ன வெளிப்பட்டு உள்ளது என்று தோன்றும்.

சில சமயம் எவ்வளவு அறியாமையுடன் சிறுபிள்ளைத்தனமாக இதை யெல்லாம் எழுதியுள்ளேமே என்று சிலது தோன்றும். அதுவும் பிறரை பற்றி சொல்ல முற்படுவதே தவறு அப்படி இருக்க அதையும் தவறாக சொல்வது என்பது மாபெரும் தவறு. பல சமயங்களில் பதிவு செய்த பிறகும் திருத்தம் செய்துள்ளேன்.

அதை உணரும் போது ……………………… என்ன விளக்கங்கள் சொன்னாலும் தகாது. எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் தகாது. அறிந்து செய்கிறோமோ அல்லது அறியாது நிகழ்ந்த தவறோ அது பிரச்சனை அல்ல. தவறு என்பதை தவறு என்று உணர்வதுதான் ஒரே தீர்வு.

நான் எழுதுவது என்பது என்னை உற்று நோக்க மட்டும்தான். அதிலும் பெரும்பாலும் நான் சந்தித்த தருணங்கள் , மக்கள் , கடந்து வந்த விஷயங்கள் , படித்த விஷயங்கள் இதை மட்டுமே எழுதிவந்தேன், பொதுவான கருத்துக்களையோ அல்லது எனது கருத்துக்களையோ அல்லது ஆன்மீக சம்பந்தபட்ட கருத்துக்களையோ எப்போதும் தவிர்க்கவே விரும்புவேன்.

சில சமயங்களில் அதை வெளிப்படுத்த நேரிடும் போது பலமுறை ஆய்விற்கு உட்படுத்துவேன். அப்படி செய்யும் போது  நிறைய வெற்று வோர்ட் பைலாகவே நின்றுவிடும். பிளாக்கிற்கோ அல்லது பேஸ்புக்கிற்கோ போகவே போகாது, அதுவும் தற்போது எனது பிளாக்கில் நான் எழுதுவதை அதிகம் படிக்கபடுவதை கவனிக்கும் போது,  மேலும் பொறுப்பு கூடுவதாக உணர்கிறேன்.  

இந்த பொறுப்பை கையாளும் முன்பு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டும். அப்படி ஒரு கவனத்தை நேற்றும் உணர்ந்தேன். அதை சரிபடுத்தும விதமாக அப்பதிவில் அதை நீக்கிவிட்டேன் .

உங்கள் கருத்துக்கள் இதை எனக்கு தெரிவிக்கின்றன என்று அதை படித்த ஒருவர் சொன்ன போது , என்னில் அப்படிபட்ட எவ்வித சிந்தனையோ அல்லது எண்ணமோ இல்லாததை ( இப்போதும் இல்லை எப்போதும் வராமலே பார்த்துக் கொள்வேன் , அதுதான் எனது நன்றி வெளிப்பாடாக இருக்கும் )  உரிய முறையில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டது சந்தோஷமாக உணர்ந்தேன்.

இதையும் அப்படிப்பட்டவர்கள் படிப்பார்கள் . இப்போதும் அதை உணர்வார்கள் என்றே நம்புகிறேன். ஆசீர்வதிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

No comments:

Post a Comment