Saturday, 6 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 14நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 14

மரணம் பரிச்சியமானது

கிராமங்களின் அமைதியும் , இயற்கை சூழலும் , இயல்பான மனிதர்களும் என்னை அதிகம் கவர்ந்த வண்ணம் இருந்தனர். நவராத்திரி , ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவை கையில் கொஞ்சம் காசை சேர்த்து இருந்த்து. இதனால் எங்காவது செல்ல வேண்டுமெனில் பொருளாதாரத்திற்கு யாரையும் எதிர்பார்க்க அவசியம் இன்றி இருந்த்து.

எங்களது பிளையிங் கிரிக்கெட் கிளப் தன் வாழ்நாளிலேயே ஒரே ஒரு வெளிநாட்டுப் பயணத்தை பிற்காலத்தில் நடத்தும் என்பதை அறியாமலே அந்த லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகே இருந்த அந்த கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தேன். ஆம் திருச்சி செல்லும் பாதையில் , வலையப்பட்டிக்கு அருகேயுள்ள மேட்டுப்பட்டிக்கு அரையாண்டு விடுமுறைக்கு சென்றேன்.

அங்கு எனது பாட்டியின் சகோதரியின் பையன் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சியாமளா வாழ்ந்து வந்தனர். ஸ்ரீதர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்தார். அவர்களது கிராமத்து வாழ்க்கை எங்கள் குடும்பத்தினரைப் போல ,ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த கெடுபடி இல்லாது இருந்த்தும் அங்கு செல்ல விரும்பியதற்கு ஒரு காரணம்.

முதன் முதலாக சின்ன வெங்காயத்தை சமையலில் பயன்படுத்துவதை இங்கேயே ரசித்து சாப்பிட ஆரம்பித்தேன். சியாமளா அத்தையின் வாழக்காய் பொடிமாஸ் சொல்லும் போதே நாக்கில் நீர் செர்ட்ட வைக்கும். இவர்களுக்கு குழந்தை இல்லாத்தால் கிருஷ்ணன் மாமாவின் பையன் சுபாஷை வளர்த்து வந்தார்கள். மாமா வருடம் தவறாது சபரிமலைக்கு செல்வார். அந்த 48 தினங்கள் சிகரெட்டிற்கு விடுமுறை அளித்து விடுவார்.

மாலை போடுவதில் உள்ள பயன் ஒரளவிற்கு எனக்கு புரிந்த்து. அவர்களது பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல வாய்ப்பு அமைகிறது. சரியான விழீப்புணர்வோடு இந்த பக்தி சாதனாவை ஒருவர் ஒரு மண்டலமான 48 நாட்கள் பின்பற்றும் போது அது அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி விடுவதுடன் , அவர்களுக்குள் ஒரு பாகமாக மாற வாய்ப்பாகிறது.

அவரது அம்மாவும் நாங்கள் அத்தை பாட்டி என்று அன்போடு அழைக்கும் சிவகாமி பாட்டியும் என்றும் என் நினைவில் இருப்பவர். காரணம் பிரிட்டானியா கம்பெனியின் சின்ன பிஸ்கெட். தற்போது வருகிறதா எனத் தெரியவில்லை. அன்றைய 10 பைசா நாணயத்தைப் போல இருக்கும். கை நிறைய அள்ளிச் சாப்பிடலாம்.

இது போல நான் இன்னொரு விலை மதிக்கமுடியாத்தாக கருதும் மற்றொரு பொருள் எக்லர்ஸ் சாக்கெலெட்தான். என்னையே விலையாக கொடுத்தாலும் எனக்கு மறுபடி கிடைக்குமா எனத் தெரியாது. சிவகாமி பாட்டி நான் குழந்தையாக இருந்த போது தந்த்து ஆனால் இது வளர்ந்த பிறகு குழந்தையாக்கி தந்த்து. தந்தவர் விஜி அம்மா. 

கோவை மாநகருக்கோ அல்லது வேறு எங்கு சென்றாலும் தேவையான அளவு மறக்காமல் வாங்கி வருவதுடன், அவரது கையாலேயே அனைவருக்கும் தந்தாலே அந்த உள்ளம் சந்தோஷப்படும். நாங்கள் தந்துவிடுகிறோம் என்றாலும் கிடைக்காது, அதை அப்படியே வைத்திருந்து அவரை தானே சந்தித்துதான் தருவார்.

பாட்டி காலத்து பெண்களை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியபட வைப்பது அவர்களது தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும்தான். படிப்பறிவு இல்லாவிடினும் யாரும் கோழையாக வாழவே இல்லை. அதைவிட எவரும் தங்கள் வாழ்வின் கஷ்டங்களுக்கு கர்மாவையோ அல்லது விதியையோ குறை சொல்ல வில்லை மாறாக  அதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்றே எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பாரத்தை இறைவனிடம் போட்டுவிட்டு அவரவர் சக்திகேற்ப வறுமையில் ஆனந்தமாக உழைத்தார்கள். அதே போல் அன்றைய பள்ளி மாணவர்களான எங்களுக்கு கிடைத்த பொருட்கள் இனி எவருக்கும் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. பள்ளியின் முன்பு கிராமத்து பொருட்கள் 5 பைசாவிற்கு கிடைக்கும்.

நெல்லிக்காய், கலாக்காய் , எழந்தப்பழம் ,தேன் மிட்டாய் , மற்றும் கொடுக்காபுளி என்ற ஒரு அற்புதமான பொருட்களை ஒரு சாக்கை விரித்து அதில் கொட்டி கடை விரித்திருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் இதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து பையன்களை படிக்க வைத்து, பெண்களை திருமணம் செய்து கொடுத்தவர்களை நான் கண்டிருக்கிறேன்.

ஒரு சலிப்போ, குறையோ வெளிப்படுத்தாது தன் வியாபாரத்திலும் அன்பை கலந்து தந்த இந்த மனிதர்களின் பெயரோ முகவரியோ எதுவும் தெரியாது. அவர்களுக்கெல்லாம் இந்த வாழ்வை இப்படி அலங்காரம் செய்யாவிட்டால் இன்று நானும் நானாக கிடையாது. இவர்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய இயலும்?. 

அப்படியே செய்ய நேர்ந்தாலும் எங்கு சென்ற தேடுவது இவர்களை?
காணும் மலைமுகடுகளில் எல்லாம் இவர் முகம் காண்கிறேன். கேட்கும் சப்தங்களில் எல்லாம் இவர்தம் மொழி உணர்கிறேன். சுவாசிக்கும் மூச்சில் இவர்தம் அன்பை உணர்கிறேன். என்னுள் அங்கமான இத்தெய்வங்களுக்கு என் வாழ்வை என் முழு அளவில் ஆனந்தமாக வாழ்வதைக் காட்டிலும் வேறு என்ன உன்னதமான அர்ப்பணமாக இருக்க இயலும்.

மேட்டுப்பட்டியின் முழு வடிவமும் எனக்குள் உணராவிடினும் , “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் “ என்பது போல ஒரு சில மனிதர்கள் இந்த மண்ணின் வாசனையை எனக்குள் பரப்பியுள்ளனர். சியாமளா அத்தையின் வீட்டுக்கு இருபுறம் இரு மகோன்னதமான குடும்பங்கள் வாழ்ந்தன.

ஒன்றில் பிற்காலத்தில் எங்கள் வீட்டிற்கு அருகே வசித்த கணபதி அய்யர் குடும்பமும் , மறுபுறம் அந்த் அத்தையின் பெயர் ஞாபகம் வரவில்லையெனினும் அவர்களது புதல்வி வைஜெயெந்தியும் அவரது சகோதர்ர் மணியும் நன்றாக தங்களை நினைவில் நிறுத்திச் சென்றுள்ளார்கள்.

மணி மோட்டார்களுக்கு எலக்ட்ரிகல் காயிலிங் செய்து வந்த போதும், எங்கள் விடுமுறையை கொண்டாட , லகான் படத்தில் வருவது போல ஒரு கட்டை பந்தையும் , பேட்டையும் தானே உருவாக்கி அளித்து எங்களோடு இணைந்து கிரிகெட் விளையாடுவார்.

எதிர்வீட்டில் குடியிருந்த ஸ்ரீதர் மாமாவின் சகோதரி லக்ஷ்மி அத்தையும் அவரது பையனும் எப்பொழுதாவது தென்படுவார்கள். அதை ஒட்டி ஒரு மாட்டுத் தொழுவத்தை சியாமளா அத்தை வைத்திருந்தார்கள். லக்ஷ்மி  அத்தை பக்கத்து கிராமத்தில் சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்தார்கள். சிவகாமி பாட்டி கடைசி காலத்தில் இக்கிராமத்திலேயே கழித்தார்கள்.

இவர்களது வீடுகளை கடந்து விட்டால் இருபுறமும் வயல்கள் விரிந்து நிற்கும். அதன் இறுதியில் ஒரு பழமையான கோவில் , சுவற்றில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து நிற்கும். வைஜெயெந்தி வீட்டை ஒட்டி ஒரு கவுண்டர் குடும்பம் இருந்த்து. அவர்களது தோட்டத்திற்கே ஆண்கள் மற்றும் பெண்கள் சென்று துணிகளை துவைத்து , பம்பு செட்டில் குளித்து வருவர்.

மணியும் அவர்களது நண்பர்களும் எங்களையும் அழைத்துச் செல்வர். அவர்கள் எல்லாம் தரையில் இருந்து 25 அடி கிணற்று நீரில் குதித்து நீச்சல் அடிப்பர். நானோ கிணற்றிற்கு முன்னால் 20 அடி தூரத்திலேயே நின்று கெர்ள்வேன். பம்பு செட்டில் இருந்து வாய்க்காலில் வழிந்தோடிவரும் நீரிலேயே குளித்துக் கொள்வேன்.

அது என்னமோ குளமோ, கடலோ, கிணறோ அமைதியாக தென்படும் நீர்தேக்கங்கள் எனக்குள் ஆரவாரம் கிளப்பும். காலுக்கடியில் பூமி வழுக்கிச் செல்வது போல் உணர்வேன். சொம்பில் மொண்டு தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டாலும், அந்த ஒரு சில நொடிகளில் என்னுள் அண்ட சராசரங்களையும் உணர்வேன். ஒரு வேளை போன ஜென்மத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பேனா என ஜென்மங்களைப் பற்றியெல்லாம் நினைப்பேன்.

அதை உறுதிப்படுத்துவது போல மரணதேவன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த்து அறியாமலே நான் ஊருக்கு திரும்பியிருந்தேன். அன்றும் வியாழக்கிழமைதான் என்று நினைவு. எப்போதும் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாத நான், அன்று வித்தியாசமாக எங்கள் வீட்டு கூடத்தில் , கட்டிலில் படுத்திருந்தேன்.

கனவும் விழிப்புமாய் இருந்த நேரத்தில் , மதியம் 3 மணி அளவில்,  வெளியே திண்ணையில் எனது பாட்டியும், அம்மாவும் யாரோ சிலருடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டும் கேட்காத்து போல ,விட்டு விட்டு என் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த்து. என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று விழீத்துக் கொண்ட நான் , வெளியே சென்று , என் அம்மாவிடம் நான் சேந்தமங்கலம் சென்று சேது மாமாவைப் பார்த்து வருகிறேன் என கிளம்பினேன்.

என் அப்பாவின் உடன் பிறந்த சகோதரி கமலா அத்தையும் சேது மாமாவும் அங்கு குடியிருந்தார்கள். அவருக்கு சட்டென்று கோபம் வந்து விடும். ஜாதகம் கணிப்பதில் மிகவும் வல்லவர். ஆனால் ஒருநாளும் ஒருவருக்கு கூட ஜாதகம் பார்ப்பது இல்லை என்பதை அறிவேன். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட விரதமே காரணம்.

உள்ளதை உள்ளபடி சொல்லும் தன்மை படைத்த அவர், தான் பார்த்த முதல் ஜாதகனுக்கு சில தினங்களில் மரணம் நிச்சயம் என்று கணித்து வைத்துள்ளார். அதைச் அவரிடம் சொல்லாவிடினும் அதே போல் நிகழ்ந்த்தால் , ஜோசியம் சொல்லுபவனுக்கு இருக்க வேண்டிய தகுதி தன்னிடத்தில் இல்லை என்று உணர்ந்து , தனது முன்  கோபத்தை காரணம் காட்டி , வாக்கு சுத்தி அடையும் வரை எவருக்கும் ஜாதக்ம் பார்ப்பதில்லை என்று விரதம் எடுத்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் நிகழ்ந்த ஒரு வைபவத்தின் போது, சாப்பிடும் போது நான் பேசினேன் என்று என்மீது கோபம் கொண்டார். அன்றிலிருந்து அவரிடம் பேசுவதை தவிர்த்திருந்தேன். அவர் மீதான அன்பும் மதிப்பும் குறையாமல் இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்த்த் தெரியாத ஒரு மனிதனாகவே அவரை பார்த்தேன். அப்படி யிருந்தும் அவர் மீது அன்பு கொண்டமைக்கு காரணம் இருந்த்து. அது கமலா அத்தைதான்.

அத்தையின் அழகைக் குறித்து அனைவரும் செர்ல்லக் கேள்விப்பட்டுள்ளேன். அப்படி இருந்தவருக்கு குட்ட நோய் தாக்கியிருந்த்து. அந்த சூழலிலும் அவரை சற்றும் வெறுக்காது , அவர் மீது எக்காரணம் கொண்டும் எந்த சூழலிலும் கோபத்தை வெளிப்படுத்தாது ஒரு குழந்தையைப் போல நேசித்து கவனித்து வந்தார். இந்த ஒரு விஷயத்தில் நான் இப்படி இருக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் இப்போதும் இருக்கிறது.

கை, கால்களில் புண் ஏற்பட்டு சீழ் வடிந்த நிலையில் அதை முகங்சுளிக்காது சுத்தம் செய்து . அவருக்காக அனைத்து பணிகளையும் தானே செய்து அவரைத் தாங்கிக் கொண்டிருந்தவர் நிச்சயம் தெய்வமாகத்தான் இருக்க இயலும். இப்படி இவரைப் பற்றி முரண்பாடான எண்ணங்களும் உணர்வுகளும் எனக்குள் இருந்தன என்பது என் அப்பா அம்மாவிற்கு தெரியுமா எனத் தெரியவில்லை.

அப்படிப்பட்ட நான் , அவரைக் காணவில்லை என்ற தகவல் கேட்டு , தேடுவதற்காக என் அப்பாவும் , எனது அப்பாவின் மற்றொமொரு மாமா பையன் ஆன கோபு மாமாவும் , (இந்த கோபு மாமாவின் அண்ணனே சேது மாமா) சேந்தமங்கலம் சென்றவர்கள் இன்னமும் வரவில்லை என்பதை கேட்டு நானும் சென்று பார்த்து வருகிறேன் என்று கிளம்பியதுதான் ஆச்சரியம். நீயா ? உன்னிடம் பணம் இருக்கிறதா? என என் அம்மா கேட்டார்,

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி என்னிடம் இருந்த 1 ரூபாயில் போவதற்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்து சேந்தமங்கலத்தில் சென்றால் .......... அஙகு எனக்கு தெரிந்த சேனாவதி அத்தையின் அப்பா வீடு, மணி குருக்கள் வீடு, அநுசியா அத்தை வீடு என அனைத்து வீடுகளும் காலியாக இருந்தன.
மாலை 6 மணி வரை தேடியும் எவரிடமும் எத்தகவலும் பெற இயலவில்லை. இவர்கள் எல்லாம் எங்கே என்பதும் அறிய முடியவில்லை. அப்போது எதிரே அங்கு மருந்து கடை வைத்திருந்த மார்த்துவ பிராமணர் (ராகவேந்திரரை குருவாகக் கொண்டு வழிபடுபவர்கள் ) ஒருவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரே என்னைக் கண்டதும் அடையாளம் கண்டு கொண்டார்.

கிணற்றில் குளிக்கப் போனவரை , அந்த கிணறு அவரை உள்வாங்கிக் கொண்டது எனவும், சில மணி நேரப் தேடுதலுக்கு  பிறகு உடலை மேலே எடுத்து வந்துள்ளனர் என்பதையும் தெரிவித்தார். எனக்கு இனிமேல் அவரிடம் சண்டை போட முடியாது என்பது மட்டுமே புரிந்த்து.

எனது அப்பாவும் அவரது தம்பியுமே அவருடைய பக்தர்களின் முன்னிலையில் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாய் கூறியதோடு , நான் ஊருக்கு திரும்பி வந்து தகவலைச் சொல்ல பஸ் கட்டணம் 1 ரூபாயை அவரே அளித்தார். பஸ் ஸ்டான்டிற்கு வந்த போது , எனது பாட்டியின் அண்ணாரை சந்தித்தேன், வயது மூப்பின் காரணமாக இருட்டுவதற்கு முன் திரும்ப போகச் சொல்லி அனுப்பி வைத்திருந்தனர்.

பஸ்ஸில் ஊருக்கு திரும்பி போது , தூரத்தே எரியும் தீயை காட்டினார் ஒருவர். அதன் பின்பு எரிகின்ற தீயை எங்கே கண்டாலும் எனக்குள் இத்தெய்வம் எழுந்து நிற்கும்.  சதி ஜுவாலைக்குள் சென்றதை காணும் வரை இது தொடர்ந்த்து

மரணதேவன் மறக்க முடியாத வகையில் எனக்குள் ஐயிக்கமானான். ஏற்கனவே 5ம் வகுப்பில் ஆதில்ஷா கொடுத்த தகவலே மறந்திராத போது  சேது மாமா புதிரை உண்டாக்கி போயிருந்தார்.

எல்லாருக்குள்ளும் ஏதேதோ எண்ணங்கள் ஒடிக் கொண்டிருக்க , எனக்குள் மட்டும் எப்படி தன் மரணத்தை சரியாக கணித்து , ஓரிருவரிடம் குறிப்பால் உணர்த்திச் சென்றார் என்பதுதான்.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தனது மரணத்தை பற்றி சொல்லாது , ஆனால் ஏதோ குடும்ப பிரச்சினையால் அழுது கொண்டிருந்தவரை நோக்கி  நான் இருக்கையில் இப்போது அழாதே அடுத்த வாரம் அழு என்று கூறியிருக்கின்றார்.

இதே போல் இன்னும் சில நபர்களிடம் , அடுத்த வாரம் நான் காணாமல் போயிவிடுவேன் உனக்கோ என்னை தேடவும் நேரமிருக்காது என்றும்  , ” நம்மால் நடப்பது ஒன்றுமில்லை எல்லாம் அவன் பாத்துக் கொள்வான் ” - என அவரது மனைவியின் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதில் சொல்லியும் சென்றுள்ளார்.

இப்படியெல்லாம் சிலர் சொன்னதாக என் பெரியவர்கள் கேள்விப்ப்ட்டார்கள் . அவர்கள் சமாதானம் அடைந்து கொள்ள வேண்டி இப்படியெல்லாம் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் கேள்வி ஜுவாலை எரிய ஆரம்பித்த்து. எவரிடம் போய் கேட்க இயலும் .

பவானி கூடுதுறையில் அவருக்கான காரியங்கள் நடந்து கொண்டிருந்த போது , சுழித்து ஓடும் நதியினிடம் இதெல்லாம் சாத்தியமா என நானும் கேட்டுக் கொண்டிருந்த்தேன் என்பதை எவர் அறிவர்.

அதை விட தன் மரணம் பற்றி அறிந்திருந்தும் எப்படி பயமில்லாது , கவலையில்லாது அந்த சில நாட்களை அவரால் இயல்பாக வாழ முடிந்த்து என்பதும் எனக்கு புதிராக இருந்த்து.

மரணத்திற்கு இணையான துன்பங்கள் வரும் சமயம் என்பதை கண்டு கொள்ளும் போதே மிருத்தியுஞ்செய ஜபத்திற்கு ஏற்பாடு செய்யும் சமுகத்தில் , மரணத்தை அஞ்சாது ஏற்றுக் கொண்ட அவர் எனக்கு மரண தேவனானார்.

காலபைரவன் வசிக்கும் பிரதேசத்திற்கு சென்றால் கணநேரமாவது கண்மூடி காலத்திற்குள்ளும் , நமக்குள்ளும் ஒடுங்க வேண்டும் என்பது நியதி.

அவரது பயணம் முடிவடைந்தாலும் எரியும் சிதையில் என் பயணம் தொடர்கிறது .

மீண்டும் தெய்வ தரிசனம் துவங்கும் வரை காத்திருங்கள்

நான் என் கண்ணில் தெரியும் அக்னியோடு சற்றே பேசிவிட்டு வருகிறேன்.

No comments:

Post a Comment