Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 4நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 4

இதே காலகட்டத்தில் நான் மறக்க முடியாத மூன்று பேர் மிகுந்த வணக்கத்துக்கு உரியவர்கள் ஆனார்கள் என்றால் அது உண்மையே.

அவர்கள் கிராமத்து முப்பெரும் தேவியர் வெள்ளையம்மா., குள்ளம்மா மற்றும் ஜீவா ஆவார்கள்.  வெள்ளையம்மாவும் , குள்ளம்மாவும் நகருக்கு அருகில் உள்ள ராமாவரம் புதூரில் இருந்து பால் ஊற்ற வருவார்கள். இதில் குள்ளம்மா இடைப்பட்ட நேரத்தில் வீட்டு வேலைக்காக வருவாள்.  அவர்களது இயற்பெயர் என்னவென்று யாருக்காவது தெரியுமோ என்னமோ. ஆனால் இந்த அடைமொழியோடே அவர்கள் வாழ்க்கை கடந்துவிட்டது,

குள்ளம்மாவின் இரு மகள்களும் பெரியவர்கள் ஆனதும் அம்மாவிற்கு உதவியாக பணி செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு படிப்பு நின்று போனது குறித்து வருத்தம் இருந்த்தா என எனக்கு தெரியவில்லை. 
ஆனால் அந்த காலகட்டத்தில் எங்கள் குடும்பங்களைப் போல அவர்கள் வீடுகளில் படிப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை என்பதை நன்றாக உணர்ந்தேன். இதை அப்பகுதியில் இருந்து வரும் எனது நண்பர்கள் மூலம் அறிய முடிந்த்து,

ஆண் பிள்ளைகளே தீடிரென பள்ளியை விட்டு நின்று லாரி வேலைக்கும் அல்லது கோழி பண்ணை வேலைக்கும் சென்று விடுவார்கள் . அப்படி இருந்தும் எந்த மாணவன் பள்ளியை விட்டு நின்றது அதிகமாக உணர முடியாது. கிராமத்து வசனம் போல சுட்டு பட்டி எட்டு கிராமத்திலிருந்தும் சுமார் 2000 மாணவர்கள் . தண்ணீர் ஊற்றிய மேர்ர் சாத்த்தை வடுமாங்காவோடோ அல்லது எலுமிச்சை ஊறுகாயோடோ எடுத்து வந்து ஒன்றாக விளையாடி வாழ்ந்த மண் அந்த பள்ளிக் கூடம்,

குள்ளம்மா வெகுநாட்களாக எங்கள் வீட்டிறகு வேலைக்கு வருவாள். பிள்ளைகள் எல்லாம் திருமணம் ஆகி சென்று விட்டாலும் , கண் ஆபரேஷ்ன் ஆகி முன்பு போல் வேலைகள் செய்ய் முடியாவிட்டாலும் எனது பாட்டியின் இறுதிக் காலம் வரை (சில வருடங்கள் முன்பு வரை) தினம் ஒரு முறையேனும் வந்து செல்வது என்பது அவளுக்கு கோவிலுக்கு செல்வது போன்ற உணர்வை கொடுத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஜீவா ஒரு புரியாத புதிர் எப்போதுமே. எங்கிருந்து வருவாள் எங்கே சென்றாள் என்பது யாருக்காவது தெரியுமா என்பது தெரியவில்லை . ஆனால் வாழ்க்கையின் வலி பேச்சில் என்னால் அந்த வயதிலும் உணரமுடியும். திட்ட ஆரம்பித்தால் எட்டு ஊருக்கு கேட்கும். அவளது அந்த திட்டுக்கள் எல்லாம் அவளது இயலாமையின் வெளிப்பாடுகளே. குடித்து குடித்து ரகளை செய்து வந்த அவளது கணவன் , அவனை எதிர்க்க முடியாமல் இறைவனை வேண்டி இருப்பாள் போலும் என நினைத்துக் கொள்வேன்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று அயராத நம்பிக்கை. அவள் வேலைக்கு வரும் போதெல்லாம் அவளது பையன் சண்முகத்திற்கு பள்ளிக் கூடம் கட். அப்படியே அவனும் வாழ பழகிக் கொண்டான், என்னை போன்ற சிறுவர்களை பள்ளிக்கு கூட்டிச் செல்வது மூலம் அவனும் அந்த நிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டான். தீடிரென ஒருநாள் காணாமல் போனான் .

பின்பு பல வருடம் கழித்து மாரியம்மன் கோவில் அருகே ஓவியர் பணியில் சேர்ந்திருந்த போது ஒரு முறை பேசினேன். எப்போது அவன் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டான் என்பது எனக்கு தெரியவே இல்லை. அவனைப் போலவே அவனது ஓவியமும் அழகாய் இருந்த்தை ரசித்தேன்.

எனது இரண்டாவது தம்பி பிறந்த போது , பள்ளிக்கு வந்து எனது டீச்சரிடம் சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது பசுமையான நினைவுகள். இப்பொழுதும் அவனும், குள்ளம்மாவின் மகள்களும் எங்காவது ஆனந்தமாய் இருக்கலாம் அல்லது சிறு வயதிலேயே கற்றுக் கொண்ட போராடும் குணத்தினால் குலவிளக்குகளாய ஒளி வீசிக் கொண்டும் இருக்கலாம். ஒருவேளை அவர் தம் குழ்ந்தைகளின் கண்கள் கொண்டு இதையும் படித்துக் கொண்டு இருக்கலாம்.

இவர்களின் செய்திகள் இக்கட்டுரையில் உள்ளது போலவே இறுதி பக்கங்களை காண இயலாத்து. ஆனால் அவர்கள் பாலுற்றி வளர்த்த அன்பும், கை பிடித்து அழைத்துச் சென்ற படிப்பும் என்னுள் வளர்ந்து , விழுது விட்டு , அவர்களின் பாத தூளிக்காக தலை வணங்கி காத்திருக்கின்றது,

இந்த பிரபஞ்சத்தில் இவர்களை யார் அறிவார் ?

நானார் என் உள்ளமார் ஞானங்கள் ஆர்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்..............
இத்தெய்வங்கள் என்னை ஆண்டிராவிடில் நான்தான் யார் ?

எதையும் எதிர்பாராது தன்னை எனக்களித்து என்னுள் பாகமாகி இருக்கும் இத்தகைய மனிதர்களின் பாதங்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த மண்ணில் நான் நடக்கும் போதெல்லாம் உங்கள் காலடி ஸ்பரிசம் நான் உணர்வேன். இந்த விண்ணை நோக்கி வியக்கும் போதெல்லாம் உங்க்ள் விழிகளை நான் கண்டு கொள்வேன்.

இப்போது சொல்லுங்கள் இவர்களும் தெய்வங்கள்தானே

இனிதே என் பயணம் தொட்ர்வேன் மேலும் பல தெய்வங்களைத் தேடி........

அதுவரை சற்றே இளைப்பாறுங்கள்

No comments:

Post a Comment