Thursday, 25 April 2013

அற்பதமான பதிவு - எனது நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணயய்ரின் ஆலய பயணம்எவர் சமைத்தால் என்ன சாப்பாடு ருசியாக இருப்பின் ஆனந்தம் அனைவருக்கும் சொந்தம்தான்
எனது பேஸ்புக் நண்பர் திரு கிருஷ்ணமுர்த்தி கிருஷ்ணய்யர் அவர்களின் பதிவு  -.மதுரை அருகே ஒருஅற்புத ஆலய தரிசனம் படியுங்கள்
படித்த பின் அந்த புண்ணிய பூமியை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தரிசனம் செய்யுங்கள்.


Status Update
By Krishnamurthy Krishnaiyer
திரு ஏடு அகம்.

திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரை பின் தள்ளி, கிருஷ்ணன் கோவிலை நெருங்கும் போது, ஒரு வளைவில் தூரத்தே தெரிந்த மலைத்தொடர், 'இங்குதான் சித்தர்கள் பூமியான சதுரகிரி இருக்கிறது, வா' என்றது. அதற்கு பெருமூச்சை பதிலாகக்கொடுத்துவிட்டு காரை விரட்டினேன். திருமங்கலம் வந்து சேர்ந்தவுடன் 'மதுரையா, சோழவந்தானா' என்ற கேள்வி எழுந்தது. பின்னதே சரியென முடிவு செய்து இடது புற ஒற்றை ரோட்டில் நுழைந்தேன். சிற்சிறு கிராமங்களை கடந்து, வைகையை தாண்டும் போதுதான் 'இங்குதானே திருவேடகம் இருக்கிறது, முயற்சிக்கலாமா?' என்கிற எண்ணம் தோன்றியது. கோவில் மதில் சுவரை ஒட்டிய வலது பக்கப்பாதையில் திரும்பி, கிழக்கு நோக்கிய ஏடக நாத சுவாமி ஆலய வாசலில் காரை நிறுத்தும் போது மணி ஒன்றை தொட்டுக்கொண்டிருந்தது. பூஜைப்பொருட்கள் கடைக்காரர் 'சீக்கிரம் போங்க சார், நடை அடைக்க டைம் ஆச்சு' என்றபடியே தேங்காய், பழத்துடன் கூடிய தட்டை நீட்டினார். வாங்கிக்கொண்டு உள்ளே ஓடுவதற்கு எடுத்துக்கொண்ட அந்த ஒரு சில நிமிடங்களை வீணாக்காமல்.....மிக முக்கிய ஸ்தல புராண குறிப்புகளை மட்டும் இப்போது பார்ப்போம் (சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பல இடங்களில் வேறு படுகிறார்கள்).

சுயம்பு லிங்கம். திருமால், பிரம்மன், ஆதிசேஷன், கருடன், ...பூஜித்த, திருமணத்தடை பரிகாரத்தலம்.........நெடுமாறன் சமணத்தை தழுவி இருந்தான். ஆலவாய் அவர்கள் வசமிருந்தது. மங்கையர்க்கரசி (திருமதி.நெடுமாறன்) சைவம் சார்ந்திருந்தாள். பிரதம மந்திரி குலச்சிறையை (சைவம்) ஞான சம்பந்தரை அழைத்து வரச்சொன்னாள். அப்பர் பெருமான் 'கோள்கள் நிலை சரியில்லை, போகதீரும்' என்றார். 'வேயுறு தோளி பங்கன்' என்று பச்சிளம் பாலகன் கோளறு பதிகம் பாடி மதுரை சென்றது. சமணர்கள், சம்பந்தர் தங்கி இருந்த இடத்திற்கு தீ வைத்தனர். அவர் 'இந்த வெப்பம் மன்னனையே தாக்கட்டும்' என்று பாடினார். அரசன் துடித்தான். சமணர்களால் அவன் துயர் தீர்க்க முடியவில்லை. ஞானக்குழந்தை 'மந்திரமாவது நீறு' எனப்பதிகம் பாடி, மீனாட்சியின் மடப்பள்ளி சாம்பலை எடுத்து கோன் மீது பூசியது. வெப்பு பணிந்தது. சமணர்கள், 'இச்சிறுவன் மாயாவி' என்றனர். வாதுக்கு அழைத்தனர். 'அத்தி நாத்தி' என்று சமணரும்,'வாழ்க அந்தணர்' என சம்பந்தரும் பதிகம் பாடி வைகைப் புனலில் இட்டனர். முன்னவர்களின் ஏடுகள் மூழ்கின. 'வன்னியும் மத்தமும்' என பின்னவர் பாட, விநாயக பெருமான் மீன்களாய் ஏடுகளை ஏந்தி, துதிக்கையால் கரை சேர்த்தார். இவர்,'வாதில் வென்ற விநாயகர்' என்ற பெயருடன் இப்போது கோவிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார். 'ஏடு அகம் சேர்ந்ததனால், சுவாமி ஏடக நாதர் எனவும், ஊர் திருவேடகம் என்றும் ஆயிற்று.....

ஏடகரை தரிசித்து, ஏலவார் குழலி சந்நிதிக்கு செல்லும் போதுதான் அந்த நடு வயதுப்பெண்மணி குறுக்கிட்டு 'சார், குடும்பத்தோடு வந்த்திருக்கீங்க, அன்ன தானம் நடக்குது, சுவாமி பிரசாதம், சாப்பிட்டு போங்க சார்' என்றாள். எனக்குப்பக்கத்தில் அமர்ந்தவர் நம் மனதில் பதிந்த சிவனடியார் பிம்பம் போல இருந்தார். கறை ஏறிய காவி வேஷ்டி. ஜடை விழுந்த முடி. நீண்ட தாடி. நெற்றி, மார்பு, வயிறு, கைகளில் திரு நீற்றுப்பட்டை. கழுத்தில் ருத்ராக்ஷம். சம்பிரதாய சம்பாஷனை. நான் எழுந்திருக்கும் போது 'கொடி மரத்துக்கு பக்கத்தில் நில்லுங்கள், வருகிறேன்' என்றார். உடனே ஜாக்ரதை உணர்வு விழித்துக்கொண்டது.

'இந்தாருங்கள் திருநீறு'. 'எக்கோவிலில் இருந்து?'. 'இது சதுரகிரி நாதனிடமிருந்து'. 'உம் பெயர்?''பாலு'. 'எவ்வாறு சிவன் அடியார் ஆனீர்?'.'உடன் பிறப்புக்கள் ஏமாற்றின, வாழ்க்கை வெறுத்துப் போயிற்று. குருவை அடைந்தேன்.ஒரு நாள் 'போய் வா' என்றார். இப்போது ஊர் ஊராய் அலைகிறேன். கேதார், பத்ரி, நேபாளம் (போட்டோ உடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டை காட்டினார்) எல்லாம் போய் இருக்கிறேன். அன்ன தானம் செய்யுமிடத்தில் சாப்பிடுகிறேன். மற்றபடி உம்போல் (!) சிலர் பணம் குடுப்பார்கள். அதை வைத்து பயணம், உணவு எல்லாம்' என்றார். நானும் பணம் கொடுத்தேன். 'உம்மை எங்கே பார்க்கலாம்?'. 'சதுரகிரிக்கு வந்தால் என்னை எப்போதும் பார்க்கலாம்' என்று அட்டகாசமாய் சிரித்தார். முதுகுத்தண்டு ஜில்லிட்டது. ஒரு துடிப்பு தவறியது. நா வறண்டது. ஒன்றும் புரியாமல் அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

1 comment:

 1. i like this saduragiri place ammavasai & powranami period. very nice place "LORD SIVA" bless for all.
  thanks
  by
  isha elango
  9787242122

  ReplyDelete