நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 10
சரோஜ் நாராயணசாமி
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து மீண்டும் அதே பாதையில்
போளுவாம்பட்டிக்கு இரவு வந்தடைந்தோம். அடிவாரத்தை விட , கோவிலை விட மடக்காடு பகுதியில் இருந்து பூண்டி ரோட்டிற்கு
சென்ற் மண்பாதையில் பார்த்த மலை கண்ணில் குடிகொண்டது அறியாமல் விளையாடிக்
கொண்டிருந்தேன்.
இக்கிராம்மும் , மரியாதை கலந்து பேசும் கொங்கு தமிழூம் ., இங்கு சந்தித்த
மக்களும், எதிர்வீட்டு சங்கரும் அவர் தம்பி கோபாலும் , ராஜாவின் பாட்டியும்,
அவர்தம் பேத்திகளும் , மாமாவின் வீட்டு உரிமையாளரும் , ஒருவகையில் அவர்களது
சொந்த்முமான பர்வதம் அத்தையும் கிராமத்து மண்ணின் மணத்தையும் ருசியையும் இன்னும்
ஆனந்தப்படுத்தி இருந்தனர்.
பர்வதம் அத்தை, ரமணி போன்றவர்கள் வயதாவதே இல்லை. குழந்தைகளும் சரி
பெரியவர்களும் சரி ஒரே உறவிலேயே அழைப்பர். வீட்டில் மாமா இருக்கும் போது , பர்வத
அத்தைக்கும், செல்லம்மா மற்றும் மாமா ஆகிய மூவருக்கும் நடைபெறும் சம்பாஷணைகள்
நாட்டு நடப்பை , முக்கியமாக ஊர் செய்திகளை
அவர்களது அன்றாட உலகை நன்றாக வெளிப்படுத்தும்.
விநாயகப் பெருமானைப் போல வீட்டிலிருந்து கொண்டே அவர்களது உலகமான அந்த ஊர்
விஷயங்களை அறியும் பேறு பெருவோம். வீடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருப்பதும்,
வீட்டின் பின்புறமும் பக்கவாட்டிலும் வயல் வெளிகளாய் போனதாலும் மாலை நேரத்தில்
மைனாக்களின் பேச்சொலிகள் பேரிறைச்சலாய் எதிரோலிக்கும்.
இரவுக்கு வெளிச்சமூட்ட வேண்டி மின்மினிப் பூச்சிகள் பறப்பதை காணும் போது நம்
கண்களையே நம்ப முடியாத்து போன்று தோன்றும். 9 மணிக்கு கடைசி பஸ் கிளம்பிய சத்தம்
கேட்ட பிறகு , வீதி பார்லிமென்ட் கலைக்கப்பட்டு அனைவரும் சாப்பிட உட்காருவோம். அது
என்னவோ தெரியவில்லை அதன் பிறகுதான் மாமாவின் வெத்திலை பாக்கு பெட்டியில்
வெற்றிடத்தை காண்பார். நான் கொஞ்சம் அதிகமாக பழக ஆரம்பித்த்தால் கடைக்கு சென்று
வாங்கி வரச் சொல்வார்.
எனக்கோ இருட்டு பயத்தை தரும். கதையில் கேட்ட பூதங்கள் எல்லாம் உயிர் பெற்று
எழுந்தோடி என்பின்னால் வருவதாக உணர்வேன். ஆனால் அவர்கள் எல்லாம் நான் யாரோடோ
பேசிக் கொண்டு செல்வதைப் போல தோற்றத்தை உண்டு பண்ண ,உரக்க பேசிக் கொண்டோ அல்லது
பாடிக் கொண்டோ ஓடிச் சென்று , அவைகள் என்னை பிடிக்கும் முன்பு தப்பித்த உணர்வாய்
வீட்டின் வாசப்படியில் திரும்பி வந்து நின்று வெற்றி களிப்பில் மிதப்பேன்.
இனி நாளை வரை அவை ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் வரும். ஒரு கருப்பு
தோல் போர்த்திய கையடக்க ரேடியோவை திருகி கர்னாடக இசை என்று வைத்து ரொம்ப
சோதனைக்குள்ளாக்குவார். ஆ ஆ என்று ஆ வை முடிப்பதற்குள்ளாகவே எங்களுக்கு உறக்கம்
வந்துவிடும். இவர்கள் பாடவே மாட்டார்களா என்ற கேள்வி எனக்குள் இருக்கும். இந்த ஆ ஆ
வை கேட்பதில் காட்டிலும் காலையில் வைக்கும் திரை இசைகளும், விவிதபாரதி
நிகழ்ச்சிகளும் ஆர்வமூட்டும்.
மாலையில் வேளாண் செய்திகளும் , இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும் இளைய பாரதம்
நிகழ்ச்சியும் கண்ணில் கண்டிராத தெய்வங்களுடன் தொடர்ப்பு படுத்தியது. இவையனைத்தும்
அந்த ரேடியோவில் வந்தாலும் மாமாவிற்கு ஏனோ அந்த இரவு நேர நிலைய ஒளிபரப்பான
கச்சேரிகள்தான் தவறாமல் கேட்பார்.
இத்தனைக்கும் அவர் ஒரு பாட்டையோ அல்லது
கீர்த்தனையோ முணுமுணுத்த்து கூட இல்லை.
மிக வேகமாக பேசும் பழக்கமுடைய இவருக்கு குழந்தைத்தனமாக பிறரைவம்புக்கு
இழுப்பதில் அலாதியான ஆர்வம். அதுவும் கூட அவரது அன்பு கலந்து வருவதால் அவர்
அமைதியாக இருக்கும் சமயங்களில் கூட பிறர் அவரை கலாய்த்து ஷணங்களை மத்த்ப்பாய்
சிரிக்கச் செய்வார்கள்.
அவரது நண்பரும் , ஆலாந்துறையில் வசித்தவருமான கோவை வானொலி நிலைய வித்வான்
நடராஜன் வீட்டிற்கு சில முறை ஆற்றைக் கடந்து என்னை அழைத்துச் சென்றுள்ளார். அப்படி
யெல்லாம் சங்கீதமும் இசையும் எனை விடாமல் துரத்திய போதும் நான் முறையாக கற்காது
ஆர்வத்தால் அனைவரையும் இம்சை செய்திருக்கிறேன் , அவ்வப்போது இப்போதும் செய்து
கொண்டிருக்கிறேன்.
இசை மற்றும் பாடல்களில் ஈர்ப்பு வந்த போதும், இன்று வரை அவர் அந்த இரவு 10 மணி
கச்சேரியை ரசித்த்தின் சூட்சும்ம் மட்டும் இன்னும் பிடிபடவில்லை. இப்படி
வானொலியில் குரலை மட்டும் ஒலிக்கும் தெய்வங்கள் முகம் அறியாவிடினும் அவர் தம்
பங்கு எம் வாழ்வில் அளவிட முடியாத்து.
முகம் காணாமலே குரலுக்காகவே காதல் கொண்டு ரசிகரானவர்கள் நிறைய பேர். அப்படி
அந்த காலத்தில் தமிழில் செய்திகளை வாசிக்கும் நியூஸ் ரீடர் சரோஜ் நாராயண்சாமி மிக
அதிக ரசிகர்களை கொண்டிருந்தார். வணக்கம் செய்திகளை வாசிப்பது சரோஜ் நாரயண்சாமி
என்கிற இந்த வார்த்தை கேட்காமல் விட்டு விட்டால் அன்றைய எந்த செய்தியும்
சுவாரஸ்யமாக இருக்காது.
தான் பேசுவதை பலர் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிற நம்பிக்கையில்
எஙகோ ஒருவர் வாழ்வ்து என்பது எனக்கு மிக ஆச்சரியமான விஷயம். இது இப்போது நான்
எழுதுவதை யாரோ ஒருவர் படிப்பார் என்ற நம்பிக்கையை போன்றது. நம்பிக்கையை விட நர்ம்
செய்யும் பணியில் நம்மை மூழ்கடிப்பது. அதிலே அதுவாகவே வாழக் கற்றுக் கொள்வது.
காலையின் இளம் சூட்டில் இது போலவே இன்னொரு விஷயமும் , மனிதரும் எனை
ஈர்த்திழுப்பார் . இந்த விடுமுறையில் யாரும் படி படி யென்று யாரும் தொந்தரவு
செய்யாத்தால் காலையின் குளிரையும், சில்லென்ற சிறுவாணி தண்ணீரையும் , பறவைகளின்
ஒலியையும் சரோஜ் நாராயணசாமியுடன் சேர்ந்து கொண்டாட முடிந்த்து.
அந்த கொண்டாட்டதை முழுமையாக மௌனமாக அனுபவிக்க விடாமல் , விடியற்காலையில்
அனைவருக்கும் முன்பாக எழுந்து , குளித்து நீறு பூசி , மந்திரங்களோடே மற்றவர்களுடன்
வம்பு செய்து கொண்டு , தென்னை மட்டையால் உருவாக்கிய நாயன்மார்கள் காலத்திய தூக்கு
போன்ற பையை எடுத்துக் கொண்டு ஒரு கைத்தடியுடன் சென்று பூக்களை பறித்துக் கொண்டு
இருக்கும் மாமாவைப் பார்க்கும் போது , சப்தங்களிடைய நிசப்தமாய் சத்தமில்லாது ஒரு
புத்துணர்வு மனதில் பிறக்கும்.
விடுமுறையின் இறுதி காலத்தில் வந்து சேர்ந்த அந்நைய்ய சித்தப்பாவும் அவர் தம்
குடும்பத்தினரும் , பவித்திரம் ல்லிதா அத்தையின் குடும்பமும் குழந்தைகளும் மேலும்
புதிய உறவுகளை கொஞ்சம் ஆழமாக புரிய வைத்தன. அந்நைய்ய சித்தப்பாவிற்கு டணால்
தங்கவேலுவை ரொம்ப பிடிக்கும்,
அவரும் சத்தி மாமாவும் , அனந்த கும்ரும் இணைந்தால் சினிமா காமெடி
நட்சத்திரங்கள் கலகலத்து பூமியை அதிர வைக்கும். இத்தகைய தங்கவேலு . பாலைய்யா
மற்றும் நாகேஷ் காமெடிகளை வெகுகாலம் கழித்து , ஸவாமி குருபிக்ஷாவுடனும் , டாக்டர்
பரத்துடனும் இணைந்து ஈஷா ஹோம் ஸ்கூலின் ஆரம்ப காலத்தில் சக்தி அண்ணாவிடம் மீண்டும்
ஒரு முறை சங்கீதம் கற்ற முயற்சித்தபோது , கேப்டன் மகாலிங்கமும் ஸவாமி அண்ணாவும்
கலாய்ப்பார்கள்.
அவையணைத்தும் காலத்தை வென்ற காமெடியன்களையும், சிரஞ்சீவியாய் வாழும்
கலைஞர்களையும் தெய்வங்களாய் மலரச் செய்து என் வாழ்வில் அவர் தம் ஆசிகளை சுகந்த
மணங்களாய் சுகம் பரப்பினர்.
விடுமுறையையும், பணி நாட்களையும் ஒன்று போல காணவும் , உணரவும் வைத்த இத்தெய்வங்களின்
பாத கமலங்களை என் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறேன்.
வாழ்க்கையின் நீரோடையில் எங்கெங்கோ இவர்கள் பயணித்துக் கொண்டிருந்தாலும் ,
மண்ணாகவும் , மனதில் விரிந்த விண்ணாகவும் நின்று கொண்டு என் சுவாசக் காற்றை
ஆசிர்வதித்து அனுக்கிரகம் செய்யும் இந்த அடியார்களுக்கு அடியாராய் பணிந்து
நிற்கிறேன்.
என் இனிய தெய்வங்களே என்னையும் ஆசீர்வதிப்பீர்களாக.
அந்த .ஆசீர்வாதங்களுடனும் , நீங்கள் அளித்த விடுமுறைக் கொண்டாடங்க்ளுடனும் நான் 1982 - 83 ம் ஆண்டு 9ம்
வகுப்பில் அடியெடுத்து வைத்தேன்.
பள்ளி வாழ்க்கை மிகப் பழமையான நூற்றாண்டு கட்டிடத்திற்குள் நுழைந்த்து. அது
கொண்டு வந்த தெய்வங்களின் எல்லையும் கருணையும் அளவிட முடியாத்து,
அத்தெய்வங்களை எல்லாம் தரிசனம் செய்யுமுன் , சற்றே மைதானத்தில் விளையாடி
வருகிறேன்
அதுவரை காத்திருங்கள்...........................................
No comments:
Post a Comment