Tuesday, 2 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 8



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 8

தேரை அலங்கரித்த புலவரும் , தேடி வந்த கதைகளும்

1981-82 ம் ஆண்டு 8ம் வகுப்பு மிக அற்புதமான ஒரு வருடம்.  த்மிழே எனக்காக கருணை கொண்டு தரணியில் இறங்கி தரிசனம் தந்த காலம். மனிதர்கள் கதை சொல்லி கேட்டு இருப்பீர்கள் . ஆனால் கதையே மனிதனாக மாறி தன் கதையை பகிர்ந்த வருடம் என எனக்கு வாரி வழங்கிய தெய்வங்களை வர்ணித்துக் கொண்டே போகலாம்.

வகுப்பறைகள் மரங்களுக்கு மத்தியில் , 4 அடி சுவற்றோடு சுற்றிலும் காற்று நுழைந்து எங்க்ளோடு கலந்து உறவாடும் வகையில் கூரை வேய்ந்த, கத்வுகள் இல்லாத கட்டிடம். ஒரு ஆசிரியர் முறையில் இருந்து ஒரு வகுப்பிற்கு பல ஆசிரியர் என்ற முறைக்கு மாறினேன்.

வகுப்பாசிரியராக கணித பாடத்தை எடுத்த திரு பழனிவேல் அவர்கள் இருந்த போதிலும் , ஹிட்ல்ர் என்று மாணவர்களாலும் ,குட்டை பாலு என்று மற்றவர்களாலும் ( நெட்டை பாலு என்று மற்றொருவர் இருந்தார்) அழைக்கப்பட்ட திரு பாலசுப்ரமணியம் அவர்கள் அறிவியல் பாடத்தை எடுத்தார். 

ஆங்கிலம் புரிந்து கொள்வதில் இருந்த சிக்கல் காரணமாக அந்த ஆசிரியரையும் அதிகம் புரிந்து கொள்ளவில்லை. வரலாறோ எப்போது பாத்தாலும் பழங்கதையையே பேசி போர் அடித்த்து.  புவியியல் வகுப்பு நடக்கும் போது , நிலப்பரப்பு பற்றி தெரிந்து கொண்டு நாம் என்ன படையெடுப்பா பண்ணப் போகிறோம் என என் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். பாடங்களை குறித்து இப்படி எண்ணங்கள் இருந்தாலும் அதை நடத்துபவர்கள் எனை ஈர்த்தார்கள்.

ஆனால் தமிழ் வாத்தியாரைத் தவிர மற்றவர்கள் மிரட்டிக் கொண்டேதான் பாட்ம் நடத்தினார்கள்.  இன்று கூட மற்றவர்களிடம் சாதரணமாக இது பற்றி பேசினால் ஆசிரியர் என்று ஒரு பயம் வேண்டாமா என்று கேட்கிறார்கள். என்னை பொருத்தவரை பயத்தினால் போர்ட்டில் எழுதியதை ஒரு எழுத்து விடாது காப்பியிடிக்கத்தான் முடிந்த்து, பேசினால் திட்டுகிறார்கள் என பேசாமல் இருப்பது போல் நடித்து எப்போது அரட்டை அடிக்கலாம் என்றே எண்ண்மிருந்த்து.

வாழ்க்கைக்கு தேவையான கணக்கு பற்றி புரிதல் இருந்த்தால் அதிகம் எப்போதும் கவனம் செலுத்தியது இல்லை . ஆனால் கண்மூடிக் கொண்டு பரிட்சையை எழுதினாலும் 80க்கு குறையாமல் வாங்குவது என்பது எனக்கே எப்போதும் ஆச்சரியமாக இருந்த்து, அறிவியல் பாடம் நடத்தும் போது எனோ அவரது சாப்ளின் மீசையை பற்றியே எனக்குள் ஆராய்ச்சி நடக்கும்.

இது இன்னமும் புரியாத புதிர்தான். ஏன் சாப்ளின் மீசை என்று சொல்லாமல் ஹிட்லர் மீசை என்று சொல்கிறோம். அது அவனை அவமானப்படுத்தும் என்பதாலா அல்லது அப்படி அவனது மீசையை புகழாவிடில் மரணம் நம்மை தழுவுமோ என்கிற அச்சத்தினால் இப்படி ஒரு சொல்வடை வந்திருக்குமா என்பது தெரியவில்லை,.

ஆனால் இவற்றில் எல்லாம் சிக்காமல் தமிழ் தனியே எனக்கு கவர்ந்து இழுத்த்து. அதற்கு காரணம் வேட்டி கட்டி . மஞ்சள் நிறை அரைக்கை சட்டை அணிந்து அதன் மேல் ஒரு அங்கவஸ்திரத்தை மடித்து போட்டு, சிறிதே ஆனாலும் அந்த வெள்ளை பூக்களை ஒழுங்காக படிய வாரி , நீறு இல்லா நெற்றி பாழ் என்று சொல்லாமல் சொல்லுவது போல் விபூதி வைத்து, பூமிக்கு வலிக்குமோ என்பது போல் நடந்து, கேட்பவர் செவிகளுக்குள் மௌனத்தை சிதைக்கிறோமோ என்பது போல் மென்மையாக பேசிய அழகில் எனை இழந்தேன்.

அத்தெய்வத்தின் பால் இருந்த ஈர்ப்பு அவருக்கு பிடித்த தமிழின் மேல் காதலாகி விரிந்த்து. கம்பனும் , வள்ளுவனும் காதல் மொழி பேசினர். தமிழின் மேல் தணியாத காதல் கொண்டேன். மற்ற பாடங்களைக் காட்டிலும் இதையே அதிக நேரம் படித்தேன்  புலவர் நடராஜன் அவர்களே இன்றும் எனது தமிழுக்கு ஆணிவேர். இக்காலகட்டத்தில் ஜமுனாவின் மேற்படிப்பிற்காக சத்தி மாமாவின் குடும்பம் மீண்டும் கோட்டை நரசிம்மர் சுவாமி தெருவில் குடியேறியது. அவர்தம் இத்ழ் கட்டுரை சேகரிப்புகள் மற்றும் புத்தகங்கள் என்னை தமிழுக்குள் மேலும் மூழகடித்தன.

ஆனால் இவர்களை யெல்லாம் விட என்னை அதிகம் ஈர்த்த்து எனது சக மாணவர்கள் இருவர்தான். ஒருவர் இராசபாண்டியன் மற்றொருவர் செல்வராஜ்.  இராசபாண்டியனின் எழுத்துக்கள் முத்து முத்தாய் இருக்கும். பேச்சுப் போட்டிகளில் நிச்சயம் பல முதல் பரிசுகள். இவனது தர்ய் தந்தை இருவரும் ஆசிரியர் ஆனதால் நிறைய படிப்பார்.

அதேசமயம் அதே முதல் பரிசுகளும், அதே முதல் தரவரிசையும் மற்றவர்களோடு அதிகம் பழக முடியாமல் அவரை தடுத்த்தாக உணர்வேன். எப்போது பார்த்தாலும பார்வையாளர்களின் கைத்தட்டலுக்காக பேச வேண்டி நிறைய படிக்க தேவையிருந்த்து. கைத்தட்டலின் ஆனந்தத்தை அனுபவித்து இருப்பாரா அல்லது அடுத்து பேச வேண்டிய விஷயத்தில் கவனம் வைத்திருப்பானா என எனக்கு தெரியவில்லை.  +2 விற்கு பிறகு மருத்துவம் படிக்க சென்றுவிட்டார். அவ்வளவு பேச்சாற்றல் இன்று எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

செல்வராஜ் இதற்கு நேர்எதிர்.  வகுப்பின் சம்பளம் வாங்காத ஆசிரியர். பல ஆசிரியர்களே அவனை பாடம் நடத்தச் சொல்லி விட்டு வியந்த கணங்களில் வகுப்பு நேரம் முடிந்துவிடும். ஆனால் ஒன்றை கூட புத்தகத்தில் இருந்து பேசமாட்டான். கையில் சிறந்த பேச்சாளனைப்போல எக்குறிப்பும் வைத்திருக்கமாட்டான்,

ஆனாலும் கதைகள் , தொடர்வண்டியாக வருடம் முழுவதும் செல்லும். அந்த ஒரு வருடம் முழுவதும் அவன் ஒரே கதையைத்தான் சொல்லி வந்தான். அது எப்படியோ எங்கே கடந்த முறை விட்டுச் சென்றானோ அதே இடத்தில் இருந்து தொட்ர்வான். சங்கர்லாலின் உதவியாளரான குள்ள கத்திரிக்காதான் நமது செல்வராஜின் முக்கிய கதாபாத்திரம். நமது அன்றாட பண்டங்கள் எல்லாம் அவனது படைப்பில் உயிர் பெற்று சாகசம் செய்யும்.

சிந்துபாத் கதை எப்படி இன்னமும் தினத்தந்தியில் முடியாமல் போய் கொண்டு இருக்கிறதோ அதற்கு அடுத்தநிலையில் இவனால் மட்டுமே கதை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.  ஒரு வருடம் முழுவதும் சொன்ன போதும், குறைந்த பட்சம் தினசரி 30 நிமிடமாவது சொன்ன போதும் (சில சமயம் 2 வகுப்புகள் கூட சேர்ந்து எடுப்பான்) அவன் அத்தியாயம் முடிந்த்து என்று சொன்னதே இல்லை. தமிழாசிரியரும் நன்றாக அவனை ஊக்குவித்தார்.

இவனது கதை சொல்லும் பாணியில் மேலும் கதை கேட்கும் பித்தனானேன். ஏற்கனவே என் பாட்டி எனக்கு மிக பிடித்த முன்னுதாரமாயிருந்தார் இந்த கதை சொல்லும் விசயத்தில்.  சில சமயம் அவர்கள் தங்கள் காலத்திய காலணா , அரையனா , வீச கதைகளை சொல்லும் போது அதில் இருந்த பொருளாதாரம் அப்போது புரியவில்லை. ஏதோ உலகம் புரியாமல் புலம்புவதைப் போன்றே தோன்றியது.

எனது பாட்டியைப் போலவே , சித்தூர் பாட்டியும் தெலுங்கு பத்யங்களோடு (செய்யுள்களை ராகமாக பாடுவது நடுநடுவே) சேர்த்து கதை சொல்வார். இக்கதைகளில் ராமாயணம், மகாபாரதம் ,நாட்டுப்புற பாடல்கள், கீர்த்தனைகள் என அனைத்தும் கலந்து வருவதை உணர முடியும். கேட்பவருக்கு சுவாரசியத்தை மட்டும் அளிக்காது அவற்றோடு சேர்த்து இன்றைய அரசியலையும் வாழ்வையும் வஞ்ச புகழ்ச்சி செய்ய இயலும்.

இவர்களது அன்னியோன்னியத்தால் வாரியார், புலவர் கீரன் மற்றும் சோ சத்தியசீலன் போன்றோர் வாழ்வில் நுழைந்து ஆசிர்வதித்தனர்.  மார்கழி மாத சொற்பொழிவும், கம்பர் விழாவும், தேர் வைபவ 15 தினங்களும் இத்தகைய மகோன்னதமான மனிதர்க்ளை வாழ்வில் சேர்த்து அழகு படுத்தியது.

டாக்டர் ஜெயராமச்சந்திரன் , ஸ்வாமி நிராகாரவின் தந்தை ஜெயராமுலு நாயுடு , போன்ற பெரியோர்கள் திரைக்கு பின்னால் பணி புரியும் டெக்னிஷியன்களாய் இருந்து அற்புதமான மனிதர்களை எல்லாம் நகருக்குள் அழைத்து வநது எங்கள் வாழ்வை அலங்கரித்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த முகமறியா மானுட தெய்வங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் இத்தருணம்.

தேரின் போது மாலை நேரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்ம சுவாமி தனது பரிவாரங்களுட்ன் ஊர்வலமாக வந்து கொலு மண்டபத்தில் வீற்றிருந்து இவர்களது ஆனந்தமான அன்பளிப்பை பெற்று கதைத்துக் கொண்டே செல்வார். மலையை ஒட்டிய பாறையின் மேலும், குளக்கரையின் மேலும் , தமது வானரங்களோடு குடும்பத்துடன் அமர்ந்தும் , நண்பர்களோடு அமர்ந்தும் , சூடான வேர்கடலையையும் பொரியையும் வாங்கி செவிகளில் உணவு போகாத இடைவெளிகளில் வாய்க்குள் போட்டுக் கொண்டு இரவு 9,30 வரை இருட்டும் வெளிச்சமும் கலந்த நிலையில் வாழ்வியலை கற்றுக் கொள்ள நேர்ந்த்து.

நகரின் மையப்பகுதியில் இது நிகழ்ந்த்தால் அனைத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வர். தெரிந்த கதைகளே ஆனாலும் அடுத்தநாள் அவர் அடுத்த பகுதியை எப்படி எடுத்துச் செல்வார் , எதோடு முடிப்பார் என்றெல்லாம் பெண்களுக்குள் கலந்துரையாடல் நடக்கும்.
ஒரே மனிதர் ஒரே கதையை சொன்ன போதும் ஒரே விதமாக ஒவ்வொரு விதமும் இருந்த்தில்லை. ஆனால் அவர் அதை அனுபவித்த விதமும் அதை பகிர்ந்து கொண்ட விதமும் ஒரே அளவில் இருந்த்து,
இவர்கள் ஏற்படுத்திய தாக்கம் உரைநடையில் இருந்து பாடல்களுக்கு தாவியது. கவிதைகளே பாடல்களாகி வருகின்றன என்பது எனக்கு புரிய வெகுநாட்களாயிற்று.

ஆனால் அதற்கு முன்னரே திருச்சி வானொலி நிலையத்தின் மூலம் கண்டசாலா , எஸ்பிபி , கே ஜேசுதாஸ் , டி ஆர் மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன் , டி எம் எஸ் , ஏ எம் ராஜா  , ஜிக்கி, ஜானகி , பிசி சுசிலா , பானுமதி, ஜென்சி , வாணி ஜெயராம் என பலரும் என் செவிகளில் நுழைந்து இதயங்களை ஆக்ரமித்து இருந்தனர்.

ஆனால் இவர்கள் இப்பாடல்களை பிரித்து ஆராய்ந்த விதம் , பொருள் படுத்தி அழகு கூட்டிய விதம் பாடல்களை கடநது , பாடுபவர்களைக் கடந்து அதை எழுதியவர்களின் அனுபவத்திற்குள் விரிந்த்து. அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்வதில் ஆர்வமூட்டியது எனலாம்.

அதே சமயம் பாடல்களின் இசையும் , பாடுபவர்களின் ரசனையும் ஒரு சேர கிறங்கடித்த்து. டிஎம்எஸ்ஸும் , சீர்காழியும் இணைந்து பட்டி தொட்டி எல்லாம் பக்தியையும் எளிமையாக பரப்பினர். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்று ஏஎம ஹனீபா பாடும்போது யாருக்குத்தான் நெகிழ்வு வராமல் போகும்,

இவர்களைப் பற்றி எல்லாம் பல பக்கங்கள் எழுதிக் கொண்டே போகலாம். கடலின் ஆழத்தைக் கூட உணராலாம் ஆனால் இவர்தம் தொண்டும் பங்கும் அளவிட முடியாது. ஆயினும் ஒரு சில பாடல்களாவது சுட்டிக் காட்டுவது என்பது இத்தெய்வங்களுக்காக எனது ஒரு சிறிய அர்ப்ணம்.

எல்லா மலர்களும் இறைவனுடையதே ஆனாலும் அதில் சில பறித்து அவனுக்கே சமர்ப்பிப்பது என்பது என் அறியாமையே ஆனாலும் அதைச் செய்யும் போது அது தரும் ஆனந்தம் அளவிட முடியாது என்பதாலேயே இதைச் செய்கிறேன். எனக்கு பக்தி அளவுகோல் அல்ல. ஆனால் ஆனந்தம் அளவுகோலாய் இருந்து வாழ்வை நான் புரிந்த எல்லைக்கு அப்பால் என்னை இட்டுச் சென்ற்து.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்த்தடா - கேட்கும் போதெல்லாம் கர்ணனைக் காட்டிலும் , அவனுக்கு சொல்லும் கிருஷ்ண்ணைக் காட்டிலும் சீர்காழியே சிரஞ்சிவியாய் வாழ்ந்து நிற்பார்.

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும கந்தனே உனை மறவேன் என்று எனக்குள் கூறும் போதெல்லாம் எதற்காக நன்றி செலுத்துகிறேன் என்பதை டிஎம்எஸ் எடுத்துரைத்து எனக்குள் விஸ்வருபம் எடுத்து நிற்பார்

சிங்காரவேலனே வேலனே தேவா என ஜானகி தனது 16 வயதில் உருகிய போது , இழைந்தோடிய காரைகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரம் இசையை தெரிந்து கொள்ளவும் , கற்கவும் ஆசையை தூண்டியது

எஸ்பிபியோ ஆயிரம் நிலவே வா என ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க வைத்தார். ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுதகீத்ம் பாடுங்கள் என வெண்உடையில் திரையில் பாடியே போது ஜென்சி இந்த மண்ணின் வண்ண மலர்கள் மேல் காதல் கொள்ள வைத்தார்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்  இதய சுரங்கத்தில் எத்தனை கேள்வி கானும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் என்று ஒரு அபூர்வ ராகமாக வாணி ஜெயராம் பாடும் போது ஸ்வரங்களின் எல்லையை பிரபஞ்சமாக விரிவுபடுத்தி உணர வைத்த்தை எழுத வார்த்தைகள் என்னிடம் இருக்குமா என தெரியவில்லை

சிந்து பைரவியில் ஜேசுதாசின் மஹாகணபதிம் இசையை அறியாதவர்களையும் இழுத்து உள்ளே அமர வைக்கும். இவர்களின் தாக்கம் திரையில் தோன்றிய பிம்பங்களையும் என்னுள் பாகமாக்கி ஆனந்தமாக்கியது என்றால் என் வாழ்வில் புகுந்த இத்தகையவர்கள் மட்டுமல்ல அவர்களை திரையில்  வெளிப்படுத்தியவர்களும் தெய்வங்கள்தானே

ஸ்வாதி கிரணம் படத்தில் வாணி ஜெயராம் , குருபௌர்ணமி நாளுக்காக ஆநாதி நீயரா (பாடல்) என்று குருவை அழைத்து அவரது காலடி ஸ்பரிசத்தில் ஆலாபனையின் உச்சத்தை அடையும் போது அவரே முன்னால் இருக்கும் போதும், அவரே அதை கேட்டு ரசிக்கும் போதும், அவரே அவனாக இருந்து வெளிப்படுத்தும் போதும், அவரது வார்த்தைகளையே அவரிடம் இருந்து கடன் வாங்கி , அதிலேயே ஆலாபனையால் ஒரு மாளிகை கட்டி , அதை அவருக்கே அர்பணிக்கும் அந்த பக்தியின் உச்ச நிலை , அறியாமையின் ஏக்கத்தில் நானுமே என் தெய்வங்களை எல்லாம் தெரிய வைத்த, அவர்களை எல்லாம் என்னுள் பாகமாக்கி உணரவைத்த,  அந்த தெய்வத்தின் தனிப்பெருங்கருணையை அந்த தெய்வத்திற்கே ., எந்தன் குருவிற்கே சமர்ப்பிக்கிறேன்.

அதே தெய்வம் தேரின் மேல் ஏறி அமர்ந்து , மலர்களும் மாலைகளும் முகம் மறையும் அளவிற்கு அர்ப்பணித்திருந்தாலும் , எமது அன்புக்கு அடிபணிந்து தன் சிரம்ம் காட்டாது ஆனந்த புன்சிரிப்பை மந்தகாசமாக வெளிப்படுத்தி, ஆரத்தியின் வெளிச்சத்தில் அனைவருக்கும் தன் முகம் காட்டி, நாரத தும்புருவாய் தேவகணங்கள் அவரோடு அதே வாகனத்தில் பின்புறம் அமர்ந்து, சன்னகட்டை போடும் மனிதருக்கு ஏற்ப  ப்ப்பாரத் தேரு நிலை வந்து சேரு என இறைவனுக்கு வேண்டுகோள் விடுக்காது அதை சுமந்த தேருக்கு (மனிதனுக்கு) அறைகூவல் விடுக்கும் அந்த அற்புத மனிதர்கள் , அரை நாழிகையே ஆனாலும் அதில் அமர்ந்திருந்த்தாலேயே வண்ணத்துணிகளால் வாழ்க்கை அலங்கரித்த அந்த தேரைப் போலவே எந்தன் எண்ணங்களையும் அலங்கரித்த அற்புத தெய்வங்களே என்றால் அது மிகையாகாது,

இந்த பங்குனி மாதம் பௌர்ணமி நிலவில் முதன் முதலாய் தேர் இழுக்க சென்றேன். ஏதோ என்னால் மட்டுமே தேர் நகர்வது போன்ற ஒரு பிரமையில் இழுக்கும் போது, வடம் பிடிக்காது நடுவில் நின்று கோபாலா கோவிந்தா என்று கூறிக் கொண்டே தானும் பங்கு கொண்டவர்களாய் சில இளைஞர்களும் , நடுத்தர வயதுக்கார்ர்களும் உறவாடிய போது உறவும் தெய்வமும் செயலிலோ அல்லது தேரிலோ இல்லை என்றே தோன்றியது, வீடுகளில் நின்றவர்கள் தண்ணிர் கொடுக்கும் போதும், என் வயதை ஒத்த பெண்கள் வேடிக்கை பார்ப்பதினாலேயே என்பலத்தை காட்டுவது போல தேரை இழுப்பதும் வேடிக்கையான நினைவுகளாய் இப்போது இருந்தாலும அன்றைய உலகில் அந்த தெய்வங்களே இச்சிவனுக்குள் சக்தி ஊட்டினார்கள் என்று உணர்ந்து என்னுள் அங்கமான அத்தெய்வங்களை கசிந்து உருகி கால் பாதங்கள் பணிந்து  நமஸ்கரிக்கின்றேன்

தேர் முடிந்த போது இனி அடுத்த வருடம் மட்டுமே அவர்களை சந்திப்போம் என்ற பிரிவும் வலியும் வரும். ஆனால் அடுத்தவருடமும் சந்திப்போம் என்கிற நம்பிக்கையும் வரும். ஒருவேளை அடுத்தவருடம் அவர் வராது போனால் என்ன செய்வது என்றுணர்ந்து தன் வாரிசுகளை அடையாளம் கண்டு வளர்த்து வைத்து செல்வர். ஆனால் அவர்தாம் நம்மை வளர்த்தார் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் அதே பணிகளை அடுத்தவர் செய்யும் போது எல்லாம் அவர்களே இவர்களுக்குள் நின்று இயக்குவர். இப்படி ஒவ்வொரு வருடமும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு விதமாய் பங்களித்து தேரை இழுத்து நிலை சேர்த்து , நாம் நம் வாழ்வில் நிலை சேர உணர்த்துவர்.

எனது தேரை இப்படி எண்ணற்ற கருணை தெய்வங்கள் பின்னால் இருந்து சன்ன கட்டையால் உந்து தள்ளியும், வேகமாக பயணிக்கும் போதும் , நிலை சென்று சேர வேண்டியும் தன்னுயிரையும் பணயம் வைத்து சங்கிலியில் ஒரு கை படித்து தொங்கிக் கொண்டே சக்கரத்தின் முன்னால் குந்தியிட்டு அமர்ந்து தெய்வத்தையோ தேரையோ பற்றி எக்கவனமும் கொள்ளாது பாதையையும், சக்கரத்தையுமே தியானமாக பின்பற்றி அவ்வ்ப்போது பிரேக் போட்டு நிலை சேர உதவிய , பேரும் ஊரும் சொல்லாது போன தெய்வங்கள் எத்தனை எத்தனையோ.

இறைவனை என்னுள் சுமக்க வேண்டும் என்ற ஆசைக்காகவே என்னை வண்ணத் தோரணங்களாலும் , துணிகளாலும் அலங்க்ரித்து எனக்கு முன் தீபமேற்றி வழிகாட்டி , தம் கரங்களால் எனை பிணைத்து ஊர் சுற்றி காண்பித்து நிலை சேர்த்த தெய்வங்களின் முகவரிகள் நான் அறியேன்.

இப்படி எத்தனை எத்தனை தெய்வங்கள் எத்தனை எத்தனை விதமாக பணி செய்தனவோ நான் அறியேன் . அதுவும் இந்த வருட ஆண்டுத் தேர்வுகள் தேர் நாளென்றே ஆரம்பித்த்தால் காலையில் நரசிம்ம சுவாமி தேரை இழுக்க ஆரம்பித்து 12 மணிக்கு பிறகு நேரடியாக பள்ளிக்கு தமிழ் தேர்வு எழுதச் செல்ல வேண்டும்.

அப்போது தேர் முதல் வளைவு மட்டுமே கடந்து இரண்டாவது தெருவில் திரும்பி வேகமாக ஓட ஆரம்பித்த்தால் , வடத்தின் நுனியில் கைநழுவி யாரோ ஒருவர் கீழே விழந்த்தால், குழப்ப்ம் ஆரம்பித்து , நடுவில் நின்ற மக்கள் கூவி பிரேக் சன்ன கட்டைக்கு தேர் எம்பிக் குதித்து ஒடிவர ஒரு தேர்ந்த மனிதா சக்கரத்தின் முன்னால் சென்று க்ஷணநேரத்தில் கட்டை வைத்து தேரை நிறுத்தினார். அவரது செயலால் தெய்வமானார்.

தேரின் போது ரோட்டில் நின்று வண்ண பலூன்களை கட்டி வைத்து கூட்டத்திற்கு வண்ணம் சேர்ப்பவர்களும், நிறைய தண்ணீரில் கொஞ்சம் மோர் கலந்து , வெள்ளரியும் மாங்காவும் சின்ன சின்னதாக வெட்டிப் போட்டு அளவில்லாமல இலவசமாய் , இன்முகத்துடன் நம்முன் வந்து நாம் கேட்காமலே தாக்ம் தணிக்கும் மகோன்னதமான மனிதர்க்ளின் பெயரோ முகவரியோ எதுவுமே நான் அறியேன் . ஆனால் இவ்ர்கள் எல்லாம் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்ற சொற்றொடருக்கு மிகப் பொருத்தமானவர்களே என்பதாலேயே என் வணக்கத்திற்குரியவர்கள் ஆகின்றனர்

மார்ச் -ஏப்ரல் மாத தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு தயாரானேன். ஆனால் அத்தனையும் சேர்ந்து இந்த விடுமுறையில் நான் அறியாமலே நான் சேரவேண்டிய இடத்தை காட்டியது.

அந்த மலைமுகட்டை ஒட்டிய வனத்திற்குள் மண்வெளிப் பாதையில்  கூட்டிச் சென்ற அந்த மகோன்னதமான தெய்வங்களை அறிமுகப்படுத்தும் வரையில் இசையோடு சேர்ந்து பிம்பங்களில் நனைந்து கவிதைகளை பகிர்ந்து தேரின் அழகை ரசித்துக் கொண்டு இருப்பீர்களாக

குளிர்ந்த கோவையின் மேற்கு மலைச் சாரலில் இக்கரை போளுவாம்பட்டிக்குள் நினைவு தெரிந்து முதல் முறையாக நானும் எனது மாமா பையன்களும் (கணேஷ், ஸ்ரீகாந்த், மற்றும் என் தம்பி) நுழைந்தோம் . மண் பாதை பயணத்திற்காக மாட்டுவண்டி கட்டிவர போயிருக்கும் என் மாமாவின் அசிஸ்டென்ட் பெரியசாமிக்காக காத்திருக்கிறேன். ஆம் இவர் நிச்சயம் பெரிய்ய சாமி தான் .
 
நீங்களும் பயணம் தொடர காத்திருங்கள்........................

No comments:

Post a Comment