Sunday, 7 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 17



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 17

215141 - எண்களும் தெய்வமாய்


10ம் வகுப்பு ஆனந்தமாய் ஆரம்பித்த்து. ஐரோப்பாவின் இரும்பு மனிதர் கரிபால்டி எங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்தார். இவரது பெயர் இராமசாமி என்றும் , ஆள் திடகாத்திரமாக இருப்பதால் மாணவர்கள் அப்பெயரை வைத்திருப்பதாக எங்களது உளவுத்துறை தகவல் சேகரித்து தந்த்து. கணிதம் மற்றும் ஆங்கிலம் எடுக்கும் இவர் எங்களுக்கு ஆங்கில பாடத்தை எடுத்தார்.

கணித்த்தை கந்தசாமி வாத்தியார் எடுத்தார். கண்ணாடி அணிந்திருந்த இவர் உண்மையிலேயே அழகாக கணித்த்தை எடுத்தார். சமயத்தில் இவர்கள் வகுப்புக்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வர். இருவருக்கும் இடையில் சரியான புரிதல் இருந்த்து.

உண்மையில் இந்த ஆசிரியர்களை எல்லாம் , பிற்காலத்தில் ஆர்டீஓ ஆபீஸ் , ரேஷன் கடை வரிசை என சந்தித்த போது எங்களது வயதை ஒத்த அவரது மகன் மற்றும் மருமகள்கள் மேல் சற்றே எனக்கு கோபம் வரத்தான் செய்த்து. இப்படித்தான் மற்றவர்களுக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை.

சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டி 10 வது முடித்தவுடன் பாலிடெக்னிக் சென்று விடுவேன் என எண்ணியிருந்தேன். பள்ளிகள் ஆரம்பித்தவுடன் சபாபதியின் தங்கை சுஜாதாவிடம் சென்று 10ம் வகுப்பிற்கான அவர் படித்த புத்தகங்களை வாங்கி வந்தேன். அடுத்த வருடம் இப்படி வாங்க முடியாது என்பதால் இனம் புரியாத சோகம் என் மனதில் படர்ந்த்து.

இதற்கு காரணம் எங்களது புத்தக செயின் உடைந்து போகப் போவதால்தான். வெங்கடேஷ் படித்த புத்தகம் ஜமுனாவிற்கு போய் , அடுத்த வருடம் அங்கிருந்த்து சிவாஜிக்கு வந்து  அவர் முடித்தவுடன் மீண்டும் ஜமுனாவின் தங்கை பிரபாவிற்கு சென்று , அவரிடம் இருந்து சபாபதியின் தங்கை சுஜாதாவிற்கு வந்து பின் எனக்கு வந்து பின் கணேஷக்கு சென்று மீண்டும் என் தம்பி அனந்துவிற்கு வரும். 1ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை இந்த சுழற்சி தடைபடவே இல்லை.

இதே போல்தான் ஆடைகளும் ஒருவருக்கொருவர் மாறும். தீபாவளிக்கு மட்டூம்தான் புதிய ஆடை. ஸ்கூல் யுனிப்பார்ம் பெரும்பாலும் டெரிகாட்டன் துணியில் டிராயரும், அம்மாவின் ரவிக்கை துணியில் அல்லது கதர் ஆடையில் வெள்ளை சர்ட் மினுமினுக்கும். அனந்து சித்தூரில் சித்தப்பாவிடம் படித்துக் கொண்டிருந்த்தால் , இப்பொழுதெல்லாம் எங்களுக்கும் 2 செட் துணிகள் தீபாவளிக்கு கிடைக்கும்.

தீபாவளி அதிக ஆவலாய் எதிர்பார்ப்பு இருக்கும். சரஸ்வதி செட்டியார் மற்றும் இன்னும் 2, 3 பேர் பட்டாசுக் கடை போட்டிருப்பார். 25 ரூபாய்க்கு பெரிய பை நிறைய பட்டாசுகளை அப்பா வாங்கி வருவார். இது தவிர சரஸ்வதி ஸ்டோர்ஸ் செட்டியார் ஒரு பை நிறைய பட்டாசுகளை தனது பரிசாக எங்கள் அப்பா மூலம் அனுப்பி வைப்பர்.

எனக்கு பட்டாசு வெடிப்பதைக் காட்டிலும், தீபாவளிக்கு ரீலிஸ் ஆன புது படத்திற்கு முண்டியடித்துக் கொண்டு செல்வதைக் காட்டிலும் கிரிகெட் விளையாட ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். காலை 10 மணிக்கு பண்டிகை நாள் ஸ்பெஷல் கிரிக்கெட் நடைபெறும்.
தீபாவளியைப் போலவே பொங்கல் நாட்களும் சிறப்பு கிரிக்கெட் காலையில் நடக்கும். 

இதற்கு காரணம் எங்கள் வீதியின் பாரம்பரிய வரலாறு கொண்ட பிளையிங் கலர்ஸ் கிரிக்கெட் கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் தவறாது ஆஜர் ஆவதால்தான். மேலும் இந்த தினங்களில்தான் எங்கள் அணிக்கு புதிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீர்ர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான கடுமையான விதிகள் எல்லாம் இருக்கும்.

அவர் எங்களை காட்டிலும் சுமாராக விளையாடா விட்டாலும் பரவாயில்லை ஆனால் சிறப்பாக விளையாடக் கூடாது. இதற்கு காரணம் எங்களது அணியின் கடைசி பேட்ஸ்மேன் கூட தன் இடம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் விளையாடக் கூடாது என்பதற்காகத்தான். ஏனென்றால் அணி என்ற ஒன்று இன்னமும் இணைந்து இருப்பதன் அஸ்திவாரமே இவர்கள்தான் என்ற அடிப்படையை நாங்கள் நன்கு அறிந்திருப்போம்.

இந்த காலத்தில் எனது டியுஷனும் மாறி இருந்த்து. தில்லை நகரில் எங்களது வகுப்பாச்சிரியர் கரிபால்டி என்கிற ராமசாமியிடமே சென்றேன். இங்கு ராமசேஷன் பழக்கமானான். ராமசேஷனின் அம்மா மியுசிக் டீச்சர். இவனது சகோதரிகள் இருவரும் அச்சிறுவயதிலேயே வயலின் பயின்றார்கள் . இந்த வயதிலேயே அதெல்லாம் பழக முடியும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

ஆனந்தமாக போய்க் கொண்டிருந்த அந்த அமைதியான நாட்களில் ஆபரேஷன் பூளு ஸ்டார் வெற்றி யடைந்த்தை அடுத்து பத்திரிக்கைகளில் காலிஸ்தான் வேண்டுபவாகள் குறித்தும், பிந்திரன் வாலேயை குறித்தும் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதின. ராணுவ நடவடிக்கையால் சேதமடைந்த பொற்கோவிலை புணரமைக்க மத்திய சர்க்கார் நிதி ஒதுக்கியது.

பிரதம மந்திரி இந்திரா காந்தி இரும்பு மனிதராய் இந்தியாவின் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தார். இந்த பிந்திரன் வாலேயை அரசியல் லாபத்திற்காக வளர்த்து விட்டவர் அவரே என்றும் பத்திரிக்கைகள் கூறின. அவரது அரசியல் குறித்து அறியாவிடினும் , காங்கிரஸில் அன்றைய மூத்த காந்தியவாதிகளுக்கும் அவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் பலவிதமாக வெளிவந்திரந்த்து.

அன்று அக்டோபர் 31ம் தேதி மதியம் 12 மணிக்கே பள்ளியில் வகுப்புகள் முடியும் நீண்ட பெல் அடிக்கப்பட்டது. வெளியே வந்த போது சரோஜ் நாரயண்சாமி வானொலியில் வந்து பிரதமர் இந்திரா சுடப்பட்ட செய்தியை வாசித்தார். பலவிதமான கருத்துக்கள் வானொலியில் ஏஜென்சி செய்திகளாக சொல்லப்பட்டது,

ஊர் மௌனமடைந்த்து. மணிக்கூண்டு அருகே பெரிய ஸ்கிரின் வைத்து இந்திராவின் மரண செய்தியை ஒலிபரப்பினார்கள். ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் மாலை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது.

டெல்லியில் சீக்கியர்கள் மேல் வன்தாக்குதல்கள் நடைபெறுவதை வானொலி தெரிவித்த்து. இரவோடு இரவாக கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி ராஜீவ் காந்தியை காங்கிரஸின் தலைவராக்கியது.  இந்த களேபரங்கள் எல்லாம் அடங்கிய போது  சிவாஜி கணேசன் இந்த சம்பவத்தை வைத்து சாதனை என்று ஒரு படமும் எடுத்தார். அப்படியே அரசியலில் இருந்து அறிவிக்காமலே ஓய்வும் பெற்றார்.

இயல்பு வாழ்க்கை திரும்பிய போது கார்த்திகை தீபத்திற்காக மலையில் உள்ள இரங்கநாதர் ஆலயத்தின் படிகட்டுகளில் தீபம் வரிசையாக ஏற்றப்பட்டு இருந்த்து. ரங்கர் சன்னதி தெருவின் மூலையில் , மசூதி அருகே இருந்த தலைமை தபால் நிலையத்தில் இருந்து மலையை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மலையின் படிகட்டுகளில் வைக்கப்பட்டிருந்த விளக்குகள் வீடுகள் தோறும் தொடர்ந்து விழாக் கோலம் காட்சியளிக்கும்.

மார்கழி மாதக் குளிர் ஆரம்பமானது. விடியற்காலை 4 மணிக்கு ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டாள் பாட ஆரம்பித்தார். இந்த ஒரு மாதம் மட்டும்தான் விடியற்காலையில் எழுந்து

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மீது ஒரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை  என குதித்தோடி வர இயலும் என்னால்.

முங்கில் இலையில் சேர்ந்த பனித்துளியில் முகம் காண ஆர்வமாய் இருக்கும்.

முத்த்த்தை மொத்தமாய் காற்றுக்கு கொடுக்க வேண்டி இதழ்கள் தேடும்

சிகரெட் இன்றி சத்தமில்லாது பனி மூட்டத்தின் நடுவே புகை விடமுடியும்

சூடான தேநீர் டம்ளர் கைகளுக்கு இதமானதை இதயம் சொல்லும்

ஆலயத்திற்கே செல்லாதவன் , இந்த குளிரிலும் குளித்து ஈரத்தலையுடன் வந்து இரங்கநாதர் ஆலயத்தில் பஜனை பாடல்களை பாடி , இறைவனின் நித்திரையை கலைப்பவர்களையும் ஆனந்தமாக ரசிக்கும் பொழுதே , எப்போது பொங்கல் பிரசாதம் என எண்ணத்தில் கேட்கத் தோன்றும்.

வைகுண்ட ஏகாதசியென்று வண்ண வண்ண கோலங்க்ளுடன் கூடிய பல வித உடைகள் அணிந்து வரும் தோழிகளை பார்க்க வேண்டி கொஞ்சம் சொர்க்கத்திற்கும் செல்லத் தோன்றும்.

எல்லாவற்றுக்கும் வேட்டு வைப்பது போல இந்த அரசாங்க தேர்வுகள் என்னை படி படி என்று படுத்தின. புத்தக்ங்களோ தூக்க மாத்திரையைக் காட்டிலும் மிகவும் சக்தி வாயந்த்தாய் செயல்பட்டு கண்களை மூடச் செய்தின.

என் அப்பாவிற்கும் ஏதோ புரிந்த்து போல தோன்றியது . எனது சிரமத்தை பார்த்து என்னை என் போக்கில் எழுந்திருக்க அனுமதித்தார். அதை விட எழுந்த போது படிக்கச் சொல்லி சொல்வதை நிறுத்திக் கொண்டார்.

இரவுகள் எந்தன் நண்பனாகின . காலையின் விடியலில் வாழ்க்கையை ரசித்தேன். வீதிகளை ஆக்ரமித்து வண்ண கோலங்கள் இட ஆரம்பித்தார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு கோலம் என்பது போய் , அனைவரும் சேர்ந்து ஒரு கோலம் என்பது போல் பிரம்மாண்டமாய் வரைந்தார்கள். பொங்கலும் பொங்கியது.

தீபாவளியைப் போல பொங்கல் கோலங்களை ரசிப்பதில் ஒரு அலாதியான மகிழ்வு இருக்கும். அக்காக்களும் , தோழிகளும் கோலங்களை ரசிப்பதற்காக காலைக் குளிரில் நடப்பார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை அறிவதற்காக நாங்களும் தெருவை சுற்றுவோம். 

இப்படி கரும்மே கண்ணாக தெருவை சுற்றும் போதெல்லாம் எவரும் எங்களை ஊர் சுற்றும் கூட்டம் என்பதை சொல்ல மாட்டார்கள். இதுவும் வாழ்க்கையின் விடைதெரியாத கேள்விகளில் ஒன்று.

இந்த சமயத்தில் , குருவாரமான எந்தன் வியாழக்கிழமையில் எந்தன் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற்றேன். எனது தேர்வு எண்ணை எளிதில் மனப்பாடம் செய்யும் விதமாக இருந்தது.

அது 215141   .

ஆம் எனது லக்கி நெம்பர் . 10ம் வகுப்பு தேரவுக்கு அனுமதிக்கப்பட்டேன். பரிட்சை முடிந்து டியுஷன் சென்டரில் படித்தவர்கள் எல்லாம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம். வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு மலைப்பாதையின் வளைவுகளில் வண்டியில் பயணித்தேன்.

மலைகளின் அரசியைக் கண்டு கேஜே ஏசுதாஸ் பிண்ணனியில் பாடிக் கொண்டிருந்தார்

வளைந்து நெளிந்து செல்லும் பாதை
மங்கை மோக கூந்தலோ

காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதிக் கொண்டிருந்த்து

ஊட்டியின் ஞாபகத்திற்காக கண்ணாடியால் செய்யப்பட்ட வாத்தை வாங்கி வந்தேன். வந்த வேகத்தில் மீண்டும் பயணமானேன் . 

அதுவும் முதல் முறையாக தனியாக , தமிழகத்தின் எல்லை கடந்து , ஆந்திராவில் உள்ள சித்தூருக்கு

அட உண்மையிலேயே இது மறக்கமுடியாத விடுமுறைக் காலம். என் விடுமுறை தோட்டத்தில் பூத்த தெய்வ மலர்கள் பேரானந்த்த்தை காற்றில் பரப்பின.

அந்த வண்ண வண்ண தெய்வங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் வரை எந்தன் தோட்டத்தில் சற்று இளைப்பாறுங்கள்.

உங்களுக்காக சில அற்புத தெய்வீக மலர்களை பொறுக்கி வருகின்றேன்.

அதுவரை காத்திருங்கள்...............................................

No comments:

Post a Comment