Saturday, 6 April 2013

நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 16



நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் - 16

நம்பிக்கை மற்றும் முயற்சியின் வடிவமாய் ஒரு தெய்வம்

உறவென்றும் நட்பென்றும் பலர் வலம் வந்தாலும் அவர்களோடு உறவாடும் கணங்களே அத்தெய்வங்கள் நம்மை ஆசீர்வதிக்கும் தருணங்களாகின்றன . இக்கால கட்டத்தில் உறவினர்களின் அருளால் கொல்லிமலை அடிவாரமான நடுக்கோம்பை மற்றும் துத்திக்குளம் ஆகிய கிராமங்கள் தன் பச்சை புல்வெளிகளை பருவப் பெண்ணாய் தனை விரித்து கிறக்கமூட்டியிருந்தாள்.

இக்காலத்தில் பலரும் பலவிதமாய் அருள் பாலித்த போதும் , மீனாட்சி அத்தையின் மகன் சேனாவதி மாமா, மற்றும் ரத்தினம் மாமாவின் தம்பிஅனந்தகுமார் மாமா ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை வாழ்க்கை வழங்கியிருந்த்து.

மீனாட்சி அத்தையும் ,மாமாவும் வெகுகாலத்திற்கு முன்பு எங்கள் வீட்டின் முதல் அறையில் வாடகைக்கு இருந்த்தாக அவ்வப்போது கூறுவார். அது ஒரு காலணாக் காலங்கள்.

கந்தசாமி கண்டர் பள்ளியின் அருகே ஒரு பெரிய காம்பவுண்டில் சேனாவதி அத்தையும்,மாமாவும் வசித்து வந்தனர். அவர்களது மகன் சிவாவும் கணேஷின் தம்பி ஸ்ரீகாந்தும ஒரு வயதுதொத்தவர்கள். இதே சமயத்தில் அனந்த குமார் மாமாவும் அதே காம்பெவுண்டில் குடிபுகுந்தார். கணேஷ் மற்றும் ஸ்ரீகாந்தும், எனது தம்பி சுரேஷும் இதே பள்ளிக்கு காலடி எடுத்து வைத்திருந்தனர்.

அதனால் அனைவரும் பள்ளிக்கு அருகே , 5 நிமிட தூரத்தில் இருந்த இந்த காம்பெவுண்டிற்கு ஒன்றாக சேர்ந்து சாப்பிட சென்றுவிடுவோம். சாப்பிட்டு முடித்தவுடன் பள்ளிக்கு செல்ல நேரமிருக்கும் என்பதால் விளையாட்டுதான் பிரதானமாகும். இதில் அனந்த குமார் மாமாவின் குழந்தைகளான சுபாவும் , ப்ப்பியும் கூட இணைந்து கொள்வார்கள். நேரம் போவதே தெரியாது.

அனந்தகுமார் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்தார். சேனாவதி மாமா எல்ஐசியில் பணிபுரிந்தார்.  பெத்த நாயக்கன் பாளையத்தில் இருந்து நாமக்கல் பட்டணத்திற்கு வந்திருந்த ராஜேஸ்வரி அத்தையோ அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கூடிய கிராமத்து பெண்ணாகவே இருந்தார். சேனாவதி அத்தையோ , இன்னொரு கிராம்மான சேந்தமங்கலத்தில் இருந்து வந்திருந்தாலும் , அனைத்தையும் அறிந்தவரைப் போலவே கண்களுக்கு தென்படுவார்.

மீனாட்சி அத்தையின் இரண்டாவது பையன் வெங்கடேஷுக்கு வேலை செய்யவே நேரம் போதாது. ஒருவேளை அவர் இயல்பாகவே படிப்பில் நாட்டமின்றி இருந்திருந்தாரா எனத் எனக்கு புரியவில்லை.என்னோடு பழகிய கணங்களில் என்னால் எடை போடமுடியாத மனிதராகவே இருந்தார்.

ஆனால் பொதுவாக நிரந்தரமான சம்பளம் பெற்று வந்த மனிதர்கள் இருந்த வீடுகளில் , பறவைகளைப் போல சென்று தங்கி படித்து பறந்து போன மனிதர்களே அதிகம். அப்படியிருக்க , அதுவும் சேனாவதி மாமா தன் மகன் சிவாவை டாக்டருக்கே படிக்க வைக்க முடிந்த போது , ஏன் வெங்கடேஷ் குமாஸ்தாகவாக்க் கூட ஆகமுடியவில்லை என்பது வாழ்வின் புதிர்தான்.

கோபு மாமாவின் புதல்வன் சீனுவும் , இந்த வெங்கடேஷும் எங்கள் காலத்திலேயே வளர்ந்த போதும் ஏன் மேற்படிப்பை தொடரமுடியாமல் போனது என்று எனக்கு புரியவே இல்லை. அதே சமய்ம் வாழ்க்கையை குறை சொல்லவும் என்னிடத்தில் எந்த காரணமும் இல்லை.

இச்சமயங்களில் கர்மா தியரியும், விதியின் மீதான நம்பிக்கையும் வாழ்கையை மிக எளிதாக எடுத்துக் கொள்ள செய்துவிடுகின்றன. காலப்போக்கில் எதுவும் ஏதோ ஒரு காரணமில்லாது நடப்பதில்லை என்ற ஆழமான நம்பிக்கையை விதைத்து உருவாக்கி வளர்ந்து விருட்சமாகி அமைதியை கொண்டு வந்துவிடுகிறது.

எது பலமாக உள்ளதோ அது பலமிழந்து போவதும், வலிமையால் ஆளப்படுவது வலிமையாகிப் போவதும், எது தடையாக உள்ளதோ அதுவே வழியாகிப் போவதும் வாழ்வில் உள்ள அற்புதமான புதையல்தான். உணர்ந்த போது உள்ளத்திலே நிம்மதி பெறுகிறது.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு  என்ற பாடலை கேட்கும் போது

நம்முடைய மயக்கங்களும் கலக்கங்களும் மனதின் குழப்பங்களும் கலைந்து வாழவில் நடுக்கத்தை போக்குகின்றன என்பதை உணர்ந்துள்ளேன்

இதே போன்ற இன்னொமொரு விஷயத்திற்கும் சேனாவதி மாமாவே முன்னுதாரணமாகவே இருந்தார். அவர் பிராம்மண கலாசாரத்தின் மீதும், ஒரு பிராம்மணன் எப்படி வாழ் வேண்டும் என்பதை பேசும் , எங்கே பிராம்மணன் வழித்தோன்றல்-சோ அவர்களின் வாரிசாக இருந்தார்.

இதன் மூலம் பல விஷயங்களை அறிந்த போதும், பயன்பாட்டிற்கு அவை ஒத்து வராது என்பதற்கும் அவரே எடுத்துக் காட்டாய் திகழ்ந்தார். இதை மறுதலிப்பாகவோ அல்லது விவாத்த்ற்காவோ சொல்லவில்லை என்பதை பணிவுடன் இந்த இடத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஏனென்றால் அவர் சொல்லுகின்ற வித்த்தில் வாழ வேண்டும் என்பதில் அவருக்கே உடன்பாடு இல்லையோ என்று யோசிப்பேன். அல்லது அவர் எப்படி வாழ ஆசைப்படுகிறார் என்பதைச் சொல்லும் கனவோ என்று எல்லாம் யோசிப்பேன்.

பொதுவாக தாம் அறிந்துள்ள விஷயங்களைக் குறித்தும் , தன்னை பற்றியும் மற்றவர்கள் உயர்வாக கருதவேண்டும் என்கிற எண்ண மாயையின் வெளிப்பாடே , இத்தகைய விதமாக நம்மை நடந்து கொள்ள வைக்கிறது என்று எண்ணியுள்ளேன்.

இதுவே என்னுடைய தவறான புரிதலோ இல்லது நாம் படித்தவற்றையெல்லாம் போட்டு உழப்பி, நமக்குள் இத்தகைய தவறான புரிதலை நமக்குள் ஏற்படுத்திக் கொள்கிறோமோ என்றல்லாம் கூட எண்ணியுள்ளேன். இத்தகைய மனிதர்களை சந்திக்க நேர்கையில் எல்லாம், என்னுடைய புரிதல் குறித்து எனக்கு கவலையெளும். என் சிவனை சரணைடைவதைத் தவிர வேறுஎதுவும் நான் அறியேன்.

உண்மையில் அவர் சொன்ன விஷயங்களில் ஆழமான நம்பிக்கை இருந்திருப்பின் அவர் உஞ்சவிருத்தி செய்து , ஜபதபங்களில்தான் வாழ்ந்திருப்பார். எல்ஐசி பணிக்கு சென்றிருக்கமாட்டார் என்று எண்ணினேன்.

இதுவே வாழ்வை நிர்ணயிப்பது த்த்துவங்கள் அல்ல என்பதை உணர வைக்கிறது. அது மனிதனுக்குள் அடிப்படையான புரிதலை கொணராத போதுதான் எந்த த்த்துவமானாலும் , கோட்பாடானாலும் , காலப்போக்கில் வீர்யமிழந்து சிதைவடைதலுக்கு இட்டுச் செல்கிறது என்று தோன்றியது.

அல்லது அவரது பையனை எங்களைப் போல பள்ளிக்கு அனுப்பாமல் வேதபாட சாலைக்குத்தான் அனுப்பியிருப்பார். ஆனால் இந்த இரண்டையும் அவர் செய்யாத்துடன் , வாழ்வின் தேவை குறித்து தெளிவாகவே இருந்தார். குறைந்த பட்சம் அவரது தம்பியையாவது வேத அத்ய்யனத்திற்கு அனுப்பி இருப்பார். ஆனால் இவை எதையும் செய்ய வில்லை என்பதை என்னால் அந்த பள்ளிப் பருவத்தில் நன்றாகவே உணர முடிந்த்து.

அப்புறமும் ஏன் எங்கு சென்றாலும் இதை பற்றியே விவாதமோ அல்லது பட்டிமன்றமோ நடத்துகிறார் என அவரை கூர்ந்து கவனித்தபோதுதான் மேற்கூறிய புரிதல்கள் எனக்குள் ஏற்பட்டன. இந்த நிமிடம் வரை இந்த புரிதலுக்கு அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பதை எவரும் அறியார்.

இப்படி எண்ணற்ற தெய்வங்கள் தங்களுக்கு அனுபவமில்லாத விஷயங்களைப் பற்றி பேசியும். உபதேசம் செய்தும் . அதை அவர்களது வாழ்க்கையிலேயே பின்பற்ற முடியாமற் போனதும் நான் எக்காலத்திலும் எவருக்கும் எத்தகைய உபதேசத்தையும் செய்திடல் கூடாது என்ற சங்கல்பத்தை எடுத்துக் கொள்ள உதவியது.

அதுமட்டுமல்ல வெற்று புத்தக அறிவும், விஷய ஞானமும் அனுபவத்திற்கு இட்டுச் செல்வதில்லை என்பதை தெளிவு படுத்தியது. அத்தோடு நின்றுவிடாமல் அனுபவத்தில் இல்லாத விஷயங்களை பேசாமல் இருக்க செய்த்து.

எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்களின் நம்பிக்கையையும் , ஆசைகளையும் விமர்ச்னத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் வேண்டிய பக்குவத்தை எனக்கு நல்கியது. இதனால் எனக்கு பிடிக்காமல் இருக்கும் விஷயங்களில் மற்றவர் ஈடுபடும் போது, அது அவர்களது விருப்பமும், உரிமையும் , நம்பிக்கையும் என உணர்ந்து அப்போதும் அவர்களோடு ஒத்து போக முடிந்த்து.

அதேசமயம் இவர்களது அண்மையினால் , ஆராக்கியம் பேணுவதைக் குறித்தும் , முன்னோர்கள் தெளிவான அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்த்தை குறித்தும் ஏராளமாய் அறிந்தேன் . இது இயல்பாக என்னை உடற்பயிற்சிகள் மற்றும் ஜிம் குறித்து  தெரிந்து கொள்ள உதவியது.

அந்த காலத்தில் பெரிய ஆஸ்பத்திரி அருகே விக்டோரியா ஹால் என்று ஒரு கட்டிடம் இருக்கும். பிரிட்டிஷார் காலத்தில் இருந்து இருக்கின்றது. இங்கு காலை வேளையில் பலரும் உடற்பயிற்சிகளை செய்திட ஜிம்மீற்கு வருகை தருவார்கள்.

இந்த விஷயத்தில் கோபு மாமாவின் புதல்வன் சீனுவாசன் எங்களக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அங்கு செல்ல முடியாத போது வீட்டில் உள்ள அம்மிக்கல் , குழவிக்கல் எல்லாம் எங்கள் ஜிம் உபகரணங்களாயின.

இந்த விக்டோரியா ஹாலுக்கு தினமும் காலையில் செல்வதால் இன்னுமொரு நன்மை விளைந்த்து. அது தமது ஆரோக்கியத்திற்காக உழைப்பவர்களையும் , உடலை நன்றாக பேணும் வழிமுறைகளை அறிந்தவர்களையும் தெரிந்து கொண்டதுதான்.

ஒருநாள் நேரத்தே பயிற்சியை முடித்து விட்டு, ஒட்டப் பயிற்சி மேற்கொள்வதற்காக எங்கள் பள்ளிக்கு சென்ற போது எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்த்து, அது அந்த காலை வேளையில் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த்துதான்.

எனது கிரிகெட் ஆர்வம் ஜிம்முக்கு செல்வதை ஓரம் கட்டியது. எனது நண்பர்கள் குழுவில் பலர் மேற்படிப்பிற்காகவும் , வேலை கிடைத்த்தாலும் வெளியூர் சென்றனர். இதனால் எங்களது பிளையிங் கலர்ஸ் முழுமையாக பிளை ஆக முடியாமல் இருந்த்து. எதிர்வீட்டு கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பாஸ்கர், சபாபதி போன்றவர்கள் புதிதாக கேரம் போர்டை அவரது வீட்டு திண்ணையில் ஆரம்பித்து இருந்தனர்.

இவர்கள் முன் ஜென்மங்களில் தியானம் பழகி இருப்பார்கள் போல , காலையில் உட்கார்ந்து விளையாட்டை ஆரம்பித்தால் மாலை விளக்கு வைக்கும் வரை கச்சேரி தொடர்ந்து நடக்கும். நடுவில் சாப்பாடு ஷிப்ட் முறையில் யாராவது ஒருவர் மாற்றி விடுவர். தோற்பவர்களுக்கு பதிலாக அடுத்த இருவர் அமர்வர்.
நானும் சிலசமயம் சேர்ந்தார் போல காய்களை பாக்கெட் செய்வேன். இதில் கண்ணனும் சபாபதியும் ஜாம்பவான்களாக திகழ்ந்தனர். அதிலும் கண்ணன் ஆரம்பித்து வைத்தால் அடுத்த நபருக்கு ஸ்டிரைக் செல்வதர்க்குள் முக்கால் வாசி காய்கள் பாக்கெட் செய்யப்பட்டு இருக்கும்.

இது கிரிக்கெட்டில் சோபிக்க முடியாதவர்களையும் , விளையாட்டிற்காக மைதானத்தையே எட்டிப்பார்க்காதவர்களையும் எல்லைகள் தாண்டி ஒன்று சேர்த்த்து. சந்தை பேட்டை புதூர் , மோகனுர் ரோடு மற்றும் திருச்சி ரோட்டில் இருந்த அவர்களது கல்லூரி நண்பர்களை எங்கள் வீதி அங்கத்தினர் ஆக்கியது.

இந்த காலத்தில் நான் கிரிக்கெட் விளையாட சற்றே சிரமப்பட்டேன். இந்த நேரத்தில் காலைநேரத்தில் மைதானத்தில் கண்டெடுத்த முத்துக்கள் என்னை ஆர்வமுடன் அவர்கள் டீமில் சேர்த்துக் கொண்டவுடன் , வாழ்வில் காணாமல் போயிருந்த புத்துணர்வை மீண்டெடுத்த்து.

பல நேரங்களில் சுவற்றுக்கு அருகே விக்கெட் வைத்துக் கொண்டு, ஆஃப் சைட் மட்டும் வைத்துக் கொண்டு விளையாடி உள்ளோம். லெதர் பந்துகள் கிழிந்து போக ஆரம்பித்தால் , அது முற்றிலும் பிளந்து தூள் தூளாக சிதறும் வரை நாங்கள் விட்டு வைத்த்து இல்லை .

இன்றைய எல்பிஜி சிலிண்டரின் ரேஷன் போல் எங்களுக்கு பந்துகள். அதே போல் 6 மாதம் கழித்து வந்தாலும் , அவர் மாதாந்திர கட்டணம் செலுத்த வில்லை யென்றாலும் கூட விதி விலக்குகள் உண்டு. அதாவது விளையாட எப்போது வேண்டுமானாலும வரலாம் .

எங்கள் டீம் செலக்ஷன் கமிட்டி , மேட்ச் என அறிவிக்கும் போதுதான் அதன் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் அந்த கமிட்டியில் இருப்பதை நினைவு படுத்துவோம். அவ்வாறு அவர்கள் தங்கள் பணி பிசியில் புதிய வீர்ர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி தர மறந்தமையால்., பரிகாரமாக பந்து ஸ்பான்சர் செய்து விடுவதுடன், எங்களது கால் காப்பான்கள் மற்றும் கையுறைகளின் ( pads and gloves) கிழியல்களை சரிபடுத்தி தருவார்கள்.

விளையாட கிளம்பும் போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கர்ண்ன் படமே நடக்கும்.  வெற்றி திலகங்கள் எல்லாம் வைத்து அனுப்புவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அனுப்பி வைப்பதே பெரிய ஆசீர்வாதம்தான்.  டாஸ் வென்றாலும் தோற்றாலும் நாங்கள்தான் முதல் பேட்டிங். அதுவும் முதல் 5 ஒவர்களாவது ரன் அடிக்காவிடினும் பரவாயில்லை களத்தில் நின்றாலே போதுமானது . 11 வீர்ர்கள் மைதானத்திற்கு வந்து சேர கால அவகாசம் வேண்டாமா என்ன?

அதனால் முதலில் இறங்கும் நபர்கள் தவறியும் பந்து மட்டையில் படாமல் பார்த்துக் கொள்வார்கள். பாடி லைன் பவுலிங்கை எதிர் கொள்கையில் கண்முட வேண்டியிருப்பதால் எப்படியோ ஒரு சில பவுண்டரிகள் வந்த விடும். இப்படியெல்லாம் விளையாடினாலும் நாங்கள் பெரும்பாலும் தோற்றதே இல்லை. அதுதான் அவர்கள் விளையாடும் முன்பு இருட்டி விடுவதால் அவர்களே டிரா என ஒத்துக் கொண்டு எங்களை வீர்ர்களாகவே வைத்து இருந்தனர்.

மேட்சில்தான் இப்படியே தவிர பிராக்டிஸ்களில் பீல்டர்கள் இல்லாத்தால் எல்லா பக்கமும் அடித்தே விளையாடுவோம். அதுவும் தவறாமல் பெரும்பாலன பந்துக்கள் மட்டையில் பட்டுச் செல்லும். இதனால் நாங்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறோம் என்று நாங்கள் எவ்வித சநதேகத்துக்கு இடமின்றி நம்ப வேண்டியருந்த்து.

ஆனால் எங்கள் மதிப்பு எப்போதும் குறைந்த்தே இல்லை. ஐபிஎல் ஏலத்தைப் போன்று வேறு டீம்களுக்கு சென்று விளையாடி எங்கள் டீமின் மானத்தை காப்பாற்றி இருப்போம். இந்த மதிப்பில்தான் என்னை அவர்கள் டீமில் சேர்த்துக் கொண்டன்ர்.

ஆனால் இன்றைய ஐபிஎல், எங்களைப் போன்ற இந்த தேசத்தின் உண்மையான வீர்ர்களுக்கு உரிய கவுரவத்தை தராவிட்டாலும், நாங்கள் எங்கள் பெருந்தன்மையால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

சுந்தர் கொணடு வந்த சேர்த்த பள்ளியில் இருந்து , சிவாஜி கைப்பிடித்துச் செல்லும் காலம் போய், எனது இளைய தலைமுறையை அரவணைத்துச் செல்லும் அளவிற்கு பெரியவனாகி இருந்தேன்.

வெங்கடேஷின் டிஎன்ஏயு , சிவாஜி மற்றும் பாபுவின் பாலிடெக்னிக், சுப்புதாய் அத்தையின் மகன் சுந்தர், சபாபதியின் அண்ணன் செள்ந்தர், வேணி மாமியின் புதல்வன் ரவி அண்ணா, சந்திரா அத்தையின் தம்பி சந்திரசேகர், சரஸ்வதி அத்தையின் புதல்வர்கள் ராமன், புஜ்ஜி , மற்றும் பத்மா அக்கா போன்றவர்களின் புதிய உத்யோகங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கை நிர்ணயித்து இருந்தன.

எனது படிப்பில் மேலும் கவனம் செலுத்த வேண்டி என் அப்பாவிற்கு உதவியாக சீனு மாமா எங்கள் அப்பாவின் உதவியாளராக சேர்ந்து கொண்டார். அவரது நண்பரான திரு நாச்சி முத்துவுடன் இணைந்து முதல் முதலாக நாமக்கல் மாரியம்மன் கோவில் திருவிழர்வில் ஒரு கட்டளை ஏற்பாடு செய்யப்பட்டது.

கோபு மாமா குடும்பம் எங்கள் வீட்டிற்கு அருகே இருந்து ரங்கர் சன்னதி தெருவிற்கு குடிபோனார்கள். சுந்தரின் ஆத்மார்த்தமான சேவையால் ஆசிர்வதிக்கப் பட்டிருந்த அவரது பாட்டி , சுப்புதாய் அத்தையின் மாமியார் , அனைவரும் சுற்றி நின்று விஷ்ணு சகஸ்ரநாம்ம் பாட, தன் வினைகளை எல்லாம் கழித்து சிவலோகம் சென்றார்.

லெப்ட் ரமேஷின் அண்ணன் வெங்கடேஷ் உடல்நிலை சரியில்லாமல் பெங்களுர் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டு, கிட்னி பெயிலியிர் என அவரது பெற்றோர்களை வாழ்க்கையில் பெயிலாக்கிவிட்டு குரு ராகவேந்திரனின் திருவடிகளை அடைந்தார். அதனால் அவரது குடும்பம் வேரோடு புலம் பெயர்ந்த்து.

பக்கவாத்த்திற்கு தன் ஒரு கையையும் காலையும் அர்பணித்திருந்த போதும் , முயற்சியின் மறுஉருவமாய் திகழ்ந்த அவரது தந்தை தினமும் காலை மற்றும் மாலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல நடக்காத்தால் , சாலையின் மேற்பரப்பு அந்த தெய்வத்தின் பாதம் படவில்லையே என ஏங்கி இளைத்த்து

இப்படி பலதும் ஒருசேர நிகழும் கணங்களாய் விரிந்திருந்த வாழ்க்கை என்னையும் 10 வகுப்பிற்கு கொண்டு சென்று தள்ளியது,
அங்கு புதிய தெய்வங்கள் என்னை மேலும் அழகு படுத்த ஆர்வமாய் காத்திருந்தன.

அத்தெய்வங்களை அழைத்துக் கொண்டு உலாவருவேன்

அதுவரை ஐபிஎல்லை பார்த்துக் கொண்டு என்தெய்வங்களுக்காக காத்திருங்கள்

No comments:

Post a Comment