இமாலயத்தின் காடுகளில் - ருச்மகாதேவ்
தந்த தரிசனத்தில்
ருச்மகாதேவ் - சுமார் 2 மாதங்களுக்கு முன்னர்தான் இப்பெயர் எனக்கு பழக்கம்.
அதுவும் எனக்கு கடந்த ஆறு மாதங்களாக தன்னால் இயன்ற அளவு ஆதரவளித்து ஆசீர்வதித்தவர்
நாம் இருவரும் போய் வரலாம் என்று
கூறியதால்தான். அப்போதுதான் முதல் முதலில் இந்த பெயரைப் பற்றி கேள்விப்பட்டேன்.
விசாரித்த போது பலருக்கும் தெரிந்திருந்த போதும் அதைப் பற்றிய வரலாறுகள் எவருக்கும் சரிவரத்
தெரியவில்லை
ஆனால் மிக சக்தி வாய்ந்த இடம் என்பதை மட்டும் அனைவரும் சொன்னார்கள். இங்கு மலையின் இருபுறங்களில் இருந்து இரு நதிகள் சேருகின்றன என்பதால் ஒரு சங்கம் என்று மேலும் தொடர்ந்தார் . மற்ற விபரங்கள் எதுவும் அவருக்கும் தெரியவில்லை. சங்கம் என்பது இப்பகுதியில் சங்கம்ம் என்பதன் சுருக்கம் , பிரயாகை என்றும் அழைக்கின்றனர்.
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம் என்று
பில்வாஷ்டோத்திரத்தில் வரும். அதாவது பல பிரயாகைகளை தரிசித்த புண்ணிய பலன் ஒரு
பில்வதளத்தை மனப்பூர்த்தியுடனும் , சிரத்தையுடனும் , பக்தியுடனும் அர்பணித்தாலே
ஒருவன் பெறமுடியும் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்
இப்படி யெல்லாம் கேட்டறிந்த போதும் செல்வதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிதில்
வாய்க்கவில்லை. மேலும் நானும் இயல்பாக அதுவாக அமைந்தாலே ஒழிய எங்கு
செல்வதற்காகவும் எந்த ஒரு முயற்சியும் எடுத்துக் கொண்டதும் இல்லை.
கடந்த 8 மாதங்களாக வாழ்க்கை மிக மிக எளிமையாகி இருந்த்து. ஒரு சில
சப்பாத்திகளும் , அதுவும் ஒருவேளை மட்டுமே உண்ட போதும் கூட உடலில் எடை
கூடியிருப்பது தற்போது கண்ட போது நான் மிக ஆனந்தமான நிலையில் இருப்பதாகவே
உணர்கிறேன்.
அதைவிட கடந்த 3 மாத கால கடும் குளிர்காலம் என்னை ஆனந்த்மாக ஒரே இடத்தில் மிக
அதிகமான நேரத்தை செலவிடக் கற்றுக் கொடுத்து உள்ளது. இது எனது குறைந்த
நடமாட்டத்தையும் கூட பெரும்பாலும் தவிர்க்கவே வைத்துள்ளது. குளிரின் கடுமையால்
அல்ல , எனக்குள் நான் மிகவும் குளிர்ந்து போயிருப்பதால்.......
இப்படியான சமயத்தில்தான் 2 தினங்களுக்கு முன்பு ருச்மகாதேவ் செல்ல முடிவானது.
இருந்தாலும் அப்பாதையை பற்றி கேள்வி பட்டிருந்த செய்திகளால் என்னால் கிளம்பும் வரை
உத்திரவாதம் கொள்ள முடியவில்லை.
காலை 7,40 நிமிடத்திற்கு இங்கிருந்து கிளம்பினோம். இங்கிருந்து 10 கிமி
தூரத்தில் சக்தி ஸ்தலங்களில் ஒரு முக்கியமான ஸ்தலமாக உள்ள காளிம்ட்டை அடைந்தோம்.
அற்புதமான இயற்கை அழகு கொண்ட ஒரு இடம். கடந்த சீசனில் பல வெளிநாட்டு அன்பர்கள் வந்து நிறைய நாட்கள் இங்கு தங்குவதை கண்டிருக்கின்றேன்.
அப்போதெல்லாம் என் மனத்தில் இவர்கள் எதற்கு அங்கு போய் தங்குகிறார்கள்.
ஒருவேளை ஆங்கிலம் ஒரளவு பேசுகின்ற அக்கோவில் பூசாரியால் தான் இவர்கள் அப்படி ஒரு
முடிவு எடுத்து வந்து இருக்கின்றனர் என நினைத்தேன். அந்த முடிவு எவ்வளவு தவறானது
என்பதை அங்கு சென்று நேரில் கண்டபோதுதான் உணர்ந்தேன்.
மந்தாகினி நதியை ஒட்டி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதிக்கு செல்ல
மோட்டார் ரோடும் மண் ரோடும் கலந்துதான் இருக்கின்றது. அதுவும் கடந்த முறை
உகிமத்தில் பெருமழை பெய்த போது இங்கும் வழியில் அதிகமான அளவில் மண்சரிவு
நடந்திருந்த்து. கடந்த அக்டோபரில் நான் சென்ற போது , பாதைகள் ஒரளவு சரி செய்யப்
பட்ட போதும் பயணம் கொஞ்சம் பயமாகத்தான் இருந்த்து.
லாரிகள் தவிர சிறு வண்டிகள் மட்டுமே செல்லுகின்றன இப்பாதையில் . சிறுமியாக
இருக்கும் காளி தேவி ஈசனை குறித்து தவமிருந்த போது ரக்த்துவஜன் என்கிற அசுரனால்
அவரது தவத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் மலையின் மீதிருந்த தேவி மலையடிவாரத்திற்கு
இறங்கி வந்து தனது தவத்தை தொடருகின்றாள். இதனால் இந்த மலை சிகரத்திற்கு காளிசீலா
என்று பெயர் கொணடு அழைக்கப்படுகிறது.
இதற்கு வாகன வசதி கிடையாது. நடைபாதை பயணத்தில் காளிமத்தில் இருந்து சென்று
வருகின்றனர். நதியை ஒட்டிய அடிவாரத்திலும்
அவனது இடையூறுகள் தொடர்வதால் அவன் உயிரோடு இருக்கும் வரை தனது தவத்திற்கு தடை ஏற்படும்
என்பதை அறிந்து அவனோடு போர் புரிய முடிவெடுக்கின்றாள்.
காளி தேவி இளம் வயதினளாக இருப்பதால் லக்ஷ்மியும் சரஸ்வதியும் ஆயுதங்கள்
ஏந்தி அசுரனின் படையை தாக்க அவளுடைய
உதவிக்கு வருகின்றனர் . காளிதேவி ரக்தக்வஜனை வதம் செய்த பிறகு பூமியின்
மேல் தனது தவத்திற்கு இடையூறாக இருப்பார்கள் என்று எண்ணி பூமிக்கு அடியே சென்று
இன்றும் தவம் செய்து வருகிறாளாம்,
அவளது தவத்திற்கு பங்கம் வராமலிக்க மற்ற இரு தேவியரும் தங்கள் ஆயுதங்களுடன்
அவளுக்கு துணையாக இருக்கின்றனர். இதனால் இங்கு மூன்று தேவியரும் உக்கிர ரூபமாக
இருக்கின்றனர்.
சரஸ்வதி வீணை இல்லாமலும் , லக்ஷ்மி தேவி ஆயுதங்களுட்னும் தாமரை மலர் மீது
இல்லாமலும் தனித் தனி கோவில்களில் வீற்றிருக்கின்றனர். அன்று காவல் காக்க வேண்டி
துவக்கப்பட்ட அக்னி குண்டம் இன்றும் அணையாது யுகங்கள் கடந்து எரிந்து
கொண்டிருக்கின்றது.
சிவன் பார்வதி திருமணத்தின் போது இத்தகைய ஒரு அக்னி குண்டம் மஹாவிஷ்ணுவான
நாரயணனின் முன்னிலையில் இன்றும் த்ரியோகி நாரயண்ன் என்கிற இட்த்தில் எரிநது
கொண்டிருக்கின்றது.
லக்ஷ்மியின் உக்ரம் குறைக்க வேண்டி இங்கு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது. மிக சக்தி வாய்ந்த சக்தி ஸ்தலமான காமாக்யாவிற்கு செல்ல
முடியாதவர்கள் இங்கு வந்து ஸ்ரீவித்யா உபாசனைக்கு தீட்சை பெற்றுக் கொள்ள்லாம். மேலும்
ஸ்ரீவித்யா உபாசனைக்கு தீட்சை பெற்றவர்கள் ஏராளமானவர் இங்கு வந்து ஜபதபங்களில்
ஈடுபடுவதை காணமுடிகிறது.
காளிதேவி பூமிக்கு அடியில் தவத்தில் வீற்றிருப்பதால்
இங்கு காளிக்கு உருவம் இல்லை. அவளது இருப்பை வெளிப்படுத்தும் விரித்த சடையும்,
திரிசூலமும்தான் வீற்றிருக்கின்றன. பூமிக்கு அடியில் காளி சக்கரம் (யந்த்ரா)
வைக்கப்பட்டுள்ளது,
நவராத்திரி பண்டிகையின் போது அஷ்டமி திதி ஒரு நாள்
மட்டும் இப்ப்லகை திறக்கப்பட்டு இந்த யந்திரா தரிசனத்திற்கு வைக்கப்படுவதுடன்
அதற்க கிரம்மாகவும் விமரிசையாகவும் பூஜை செய்யப்படுகிறது. இதைக் காணுவதற்காகவே நவராத்திரியின்
அந்த நாளுக்காக பல்வேறு பக்தர்கள் வருகின்றனர்.
காளியின் தவத்தின் சக்தியை பிரவாகமாக மந்தாகினி
தன்னுள் சுமந்து சென்று ருத்ரபிரயாகையில் அலக்ந்ந்தாவுடன் கலக்கச் செய்து பின்
தேவப்பிரயாகையில் பாகீரீதியுட்ன் கலக்கச் செய்து கங்கையாய் சமவெளியில் பாய்கிறது.
குப்தகாசியின் மலையில், அதற்கு 2 கிமி தூரம் முன்பு உள்ள நுழைவாயிலில் பாறைகளை ஒட்டி கீழிறிங்கி
செல்லும் வாகனம் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த நிழலுக்குள் புகுந்துவிடுகிறது. மலையின்
இடதுபுறம் மரங்கள் சூழ்ந்து இருந்தாலும் வலதுபுறம் எதிர்மலையில் உள்ள உகிமத்
கிராமத்தின் அழகை இரண்டுக்கும் இடைபட்ட பள்ளத்தாக்கில் ஒடுகின்ற மந்தாகினியின்
இசையோடு சேர்ந்து ரசிக்க முடிகிறது.
மரங்களின் குளிர்ச்சி நம் மனதை தாக்கும் போது வண்டி
இரும்பு பாலத்தில் வலது பக்கம் திரும்ப ஏதோ புதிய பிரதேசத்திற்குள் நுழையும்
உணர்வு. பாலம் கடந்து மீண்டும் இடது பக்கம் திரும்ப இப்போது இந்த பக்கம் இருந்து
குப்தகாசியின் தரிசனம்.
அடிக்கடி மண்சரிவுகளால் சத்தியத்திற்கு கட்டுபட்டு
நிற்பவனைப் போல மண்ரோடு, அதன் கீழே சரிந்த மரங்கள் மண்கலந்து. வலது புறமோ
ஆங்காங்கே மலையில் வழிந்தோடும் அருவி நீர். மண்ணில் ஓடி
வழியும் போதெல்லாம் வாகனத்தை வழுக்கச் செய்து பள்ளத்தில் தள்ளிவிடுமோ என்ற பயம் நம் வயிற்றை
கவ்வுவதை காணமுடிந்த்து.
சலசலக்கும் நீரோடையின் தாளலயத்தில் வண்டி குலுங்கும்
சத்தம் சற்றே அமுங்கித்தான் போகிறது. காளிமட் கிராமத்தை கடந்து நேரே சென்றோம் .
சிறிய சிறிய கிராமங்களுக்கு செல்லும் வழி . கோட்மா , ஜால் , சோமாசி என்று மூன்று
சிறிய கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர்.
குப்தகாசியில் இருந்து எப்பொழுதாவது ஒருமுறை மேக்ஸ்
வாகனம் இப்பகுதிக்களுக்கு செல்கிறது. மற்றபடி அவர்களது வாகனம்தான் அல்லது நடராஜா
சர்வீஸ். இந்த மூன்று கிராமங்களுக்கும் தலைவனைப் போல விளங்குவது காளிமட். சற்றே
பெரிய கிராம்ம் . 100 பேரை தன்னிடத்தில் தங்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு தாராள
மனம் படைத்த்து.
காளிமட் கிராமத்தை கடந்தவுடனே இது வாகனங்கள்
தாராளமாய் வந்து போகின்ற அளவு மக்கள் அறிந்திடாத பாதை என்பது அழகாய் தென்படுகிறது.
உயரமான மலைகளுக்கு நடுவே , நதியை ஒட்டி , அதற்கு எதிர்திசையில் பயணப்படுகிறோம்.
கோட்வா மற்றும் ஜால் கிராமங்கள் ஒரு ஊரைப் போல காண
முடியாது. வழியில் ஏதாவது கடைகளை கண்டால் நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் அந்த
கிராமத்தை கடக்கின்றோம் என்பதை. இப்படி இந்த 2 கிராமங்களை கடந்து சென்ற போது வலது
பக்கம் ஒரு பாதை பிரிகின்றது.
அங்கிருந்து சிறிது தூரத்தில் நடக்க ஆரம்பித்தோம் .
எல் அன்ட் டியின் பவர் பிளான்ட் மின்சாரம் உற்பத்தி செய்த அதை மிகப் பெரிய
குழாயினுடே மலையுச்சிக்கு கடத்துகின்றன்னர். வரும் வழியில் பார்த்த இரு
குவார்ட்டர்ஸ் குடியிருப்புகள் இவர்களுடையது என்பது இப்போதுதான் புரிந்த்து.
ஜுராசிக்பார்க்கில் வருவது போன்ற சிறிய இரும்பு பாலம்
ஆற்றை கடக்க உதவியது. எந்த காலத்தில் போட்டார்கள் என்பது எவருக்காவது தெரியுமா
என்பது தெரியவில்லை. 2 அல்லது 3 மனிதர்கள் ஒரு சேர நடந்து போகலாம் என்பது போன்ற்
அகலம் அவ்வளவுதான்.
பாலம் கடந்து சில நிமிடங்கள் நடந்த பிறகு இடது
பக்கத்தில் இரு அறைகள் சற்றே உயரத்தில் கட்டப்பட்டிருந்தன . யாராவது நாக சன்னியாசிகளோ
அல்லது வேறு யாராவது அவ்வப்போது தங்குவார்கள் போலும், அதுவும் கூட காய்கறி முதல்
அனைத்தும் அவரிடம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இதனாலேயே யாரும் அங்கு தொடர்ந்து
தங்குவதில்லை என்பதை பின்னர் ஒருவர் சொல்ல அறிந்தேன். அப்படியே தங்கினாலும் சில நாட்களில் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத
காரணங்களால் திரும்பி விடுகின்றனர் என்று தொடர்ந்தார்.
ஊட்டி எடப்பள்ளி ஆலயத்திற்கு செல்லும் முன்பு வலது
புறம் வரும் பச்சை சமவெளியைப் போல் ஒரு சிறிய மைதானத்தில் வலதுபுறம் போடப்பட்ட
சிமெண்ட் பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஒரு சிறிய மண் வீட்டின் முன்பு ஒரு
நாகா சன்னியாசி தனது காலை வணக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு
செய்யாது அதற்கு பின்னால் இருந்த கான்கீரிட் மண்டபத்தை நோக்கி நடந்தேன்.
சமீப காலத்தில் கட்டப்பட்டதற்கு அடையாளமாக வழியில் சிவனுக்கு
ஒரு சிலையை ஒரு சிறிய கோவிலாக அமைத்திருந்தனர். இங்கு சிவனுக்கு கோவில் கிடையாது
என்பது குறிப்பிடத்தக்கது. தேவி தவம் இருந்த பொழுது அவளது உக்கிரத்தை தணிக்க
வேண்டி ரூத்ராக்க்ஷ மரமாக ஈசன் உருவெடுத்து அவளது சக்தியை பெற்று அவளை சாந்தமாக்கி
அருள் பாலிக்க வைத்தானாம் . இப்படி ஒரு செவி வழிச் கதை இத்தலத்தை பற்றி இருந்து
வருகிறது.
நதியை ஒட்டி இன்றும் ஒரு பழமையான ஒரு ருத்ராக்க்ஷ
மரம் இருக்கின்றது. அதை ஒட்டி ஒரு மிகப் பெரிய சாளக்கிராம்ம் போன்று உருண்டையாக
ஒரு பாறை உள்ளது. இது தண்ணீரில் அடித்து
வரப்பட்டு ஒதுங்கியதைப் போன்று கரையோரத்தில் அமைந்துள்ளது. இது ருச்மகாதேவின்
வடிவமாக கருதப்படுவதுடன் , மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.
சுமார் 20 முதல் 30 அடி அகலத்திற்கு ஒடும் நதிகள் பாறைகளுடே பாய்ந்து செல்லும்
சப்த்ம் நம்மை இயல்பாக தியானத்தில் ஆழ்த்துகிறது. நதியை ஒட்டி , இருபுறமும்
மலையின் சரிவில் நெருக்கமாக அமைந்துள்ள நெடிய மரங்களால் சூரிய வெளிச்சம் இருளோடு
கலந்து பூமியைத் தொடுகிறது. மரங்களின் அடர்த்தியால் ஏற்படுகின்ற குளிர்ச்சி நம்
மனதில் ஊடுறுவி நம் கண்களை கிறங்கடித்து
இந்த குளிர்ச்சியும் , பாறைகளில் இசைக்கும் நதியும்,
மரங்களின் அடர்த்தியும், இருளோடு கலந்த சூரிய ஒளியும் எனக்கு வெள்ளியங்கிரி
மலையின் சத்குரு குகையை நினைவு படுத்தின. போதாக்குறைக்கு மிகப் பெரிய பாறையாக
தண்ணீரில் அம்ர்ந்துள்ள ருச்மகாதேவ், தனது குளிர்ந்த கருணையாலும் ,அருளாலும்
சத்குருவோடு அமர்ந்திருப்பதைப் போல உணர வைத்தார்.
கண்மூடி அமர்ந்த கணங்கள் காலத்தின் கைகளில் இருந்து என்னை நழுவ வைத்தன.
யுகங்கள் கணங்களாகி போயின. தேவியின் அருளில் ஈசனின் கருணையில் நனைந்த நிமிடங்கள் ,
வெள்ளியங்கரி உணர்வில் சிதறிக் கிடந்த பாறைகளுடே நதியாய் பிரவாகமெடுத்த்து. இன்று
இந்த ஷணம் உங்கள் முன் கட்டுரையாய் விரிந்து நிற்கின்றது.
தேவையான பழங்களும் , உணவும் எடுத்துச் சென்றால் , சில
யுகங்களை கணங்களாக கரைத்து வர ஒரு அற்புதமான வரப்பிரசாதம் ருச்மகாதேவ் . அது
மட்டுமல்லாது வெள்ளியங்கிரியில் 4வது மலையில் உள்ள சத்குரு குகைக்கு ஏறிச் செல்ல முடியாதவர்கள் , இங்கு வாகனத்தில்
சென்று அதே அனுபவத்தை பெற்று வர ஒரு அற்புதமான இயற்கை அழகு
இமாலயம் வெறும் மலை மட்டுமல்ல . இது போன்ற பல
பொக்கிஷங்களை தனது நதிகளோரத்திலும் , காடுகளிலும் ஒளித்து வைத்திருக்கிறது. இயற்கை
அழகாய் வரைந்து நிற்கும் இவ்விடங்கள் எம்
இறைவனார் கருணை கொண்டு அருள் பாலிக்கும் புண்ணிய பூமி .
இறையருளாலும் குருவருளாலும் அன்றாட வாழ்வின் அவசிய தேவைகளை
மானுட தெய்வங்கள் அருள்பாலித்தார்களேயானால் அடுத்து வேறு எதுவும் யோசிக்காது அமைதியாய்
அமர்ந்துவிடுவேன் . ஒருவேளை அதற்காகத்தான் அழைத்து வந்து தரிசனம் தந்தானோ என்னவோ
மிக்க மகிழ்ச்சி. மிக்க அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு இடங்களுக்கு ஒரு பதிவு எழுதுங்கள்; கூடுமான வரை சிறிதாக இருக்கட்டும். செல்லும் போது படங்கள் நிறைய எடுத்து விடுங்கள். அந்தந்த இடத்தில் பொருத்தமான படத்தை இணைத்து விடுங்கள். நாம் ஒரு பக்கம் எழுதுவதை, ஒரு படம் சொல்லி விடும். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
ReplyDeleteஉங்கள் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் திரு Swami sushantha.